என் வீடு கவிக்கூடு
என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

புதுக்கவிதை என்பது "சொற்கள் கொண்டாடும் சுதந்திர தின விழா" என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து! மனதில் தோன்றும் எண்ணங்களை அழகான வார்த்தைகளாகப் படைத்து, வாசிப்பவரின் மனதை ஈர்ப்பவனே ஒரு நல்ல கவிஞன் ஆவான்!

16-5-2024 அன்று ஒரு பொன்னான நாளாக எனக்கு அமைந்தது! நான் ஒரு காதலனை சந்தித்த நாள் அது! கவிதையின் காதலன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஓர் இளவல், இளங்கவி தே. செ.பிரகாஷ் அவர்களை சந்தித்த நாள். "என் வீடு கவிக்கூடு" கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். வாழ்த்தினேன்!

இளமைத்  துள்ளலுடன் வசீகரத் தோற்றம் கொண்டவர். குயிலின் இனிமைக் குரல் வளம் கொண்டவர்! பாசத்தோடு பழகுபவர். அவர் கவிதை நூலைப் பெற்று வாசித்தேன். 61 கவிதைகள் அழகாகப்  படைத்துள்ளார்! 

அறுசுவை உண்டியென  அருந்தி மகிழலாம்! இளமைப் பருவத்தில்  இத்தனை அனுபவங்களா?  கிராமிய சூழலில் உழுகுடியில் பிறந்த அவருக்கு கவிதை மீது இத்தனை ஆர்வமா?

கவிதை எழுதுதல் ஒரு கலை! ஒரு வேள்வி! அந்தக் கலையின் மீது காதல் கொண்டு சமுதாயத்திற்குத் தேவையான நன்னெறிகள், வாழ்வியல் பண்புகள், மனிதநேயக்  கருத்துக்கள், இயற்கையை நேசித்தல், காதல், முற்போக்கு சிந்தனைகள், நாட்டுப்பற்று, பெண்ணிய சிந்தனைகள், என அத்துணை அம்சங்களையும் கொண்ட எளிய கவிதைகளை எழிலுற, இவர் நூலில் அலங்கரித்துள்ளார்!

என் வீடு என்பது என் கவிதைகளின் கூடு என அவர் அறிவிப்பதிலிருந்து அவரின் மதிநுட்பத்தை அறியலாம்.

வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர்! எதிர்காலத்தை யாராலும் கணிக்க இயலாது. இதுதான் சுவாரஸ்யம் என்பதை அவர் கவிதையில்  காண்போம்!

அடுத்து என்ன என்று
யாராலும் பகிர முடியாதே
அதுதானே
வாழ்க்கையின் சுவாரசியம்...
( கவிதை - 16)

வருடா வருடம் ஒரு ஆட்டம்! அதுதான் புயல்காற்று, சூறாவளி, சுனாமி, என்ற வடிவங்களில் வந்து விடுகிறது!இவருடைய ஆதங்கத்தை இவர் கவிதையில் காண்போமா!

வருடத்திற்கு
ஒருமுறை
உனது திருவிளையாடல்
எங்களைத் தவிக்கவிட்டுச் செல்கிறாயே...
புயலே!
என வருத்தப்படுகிறார். (கவிதை - 11)

பணிநிறைவு பெறும் ஆசானை இவர் வர்ணிப்பதை பாருங்கள்!

கரும்பலகை  வாசகமே கருவாய் அமைந்து வாழ்வினில் ஈடேற வழி வகுத்ததை...

எந்த பருவத்தில் என்ன பயிர் செய்வது என போதித்த ஆசான் இவர் வகுப்பில் கண்ட மனித தெய்வம் என்கிறார்!

எந்தப் பருவத்தில் என்னென்ன பயிரிட வேண்டும் அந்தந்த மாதத்தில் விதைக்கு உரமிட்டவரே மனிதன் கண்ட வகுப்பறை கடவுளே!

என ஆசானை பெருமைப்படுத்துகிறார். (பாடல் 23)

ஒரு மனிதன் இயல்பாக சுயமாக சிந்தித்து அவ்வாறே வாழ வேண்டும். மற்றவரை சார்ந்து வாழக்கூடாது. கவிஞர் சொல்வதை பாருங்கள்.

நீ நீயாகவே இரு!
தீயாக மாறும் வரை...
சுயமாகவே இரு!
சுடுகாடு செல்லும் வரை...
( கவிதை -29)

கல்வி மீது காதல் கொள்கிறார் கவிஞர்! கல்வி ஆண்பாலா ?பெண்பாலா ?என்ற ஐயம் வருகிறது. அவரே  பின்வருமாறு ஐயத்தைத்  தீர்க்கிறார்.

கல்வி என்பது
ஆண்பாலா? பெண்பாலா?
கல்வி ஆணிடம் பெண்பால்!
பெண்ணிடம் ஆண்பால்!
காதலித்துப்பார்! உன்னிடம்!
அழகுக் கவிதை ( பாடல் - 9)

காலையில் பூத்த புதுமலர் மாலையில் வாடி வதங்கி விடுகிறது. அதுதான் இயற்கையின் நியதி. ஆனாலும் நம் கவிஞர் பிரகாஷ் யோசிப்பதை பாருங்கள்!

பூக்களோடு நடக்க
ஆசைப்பட்டேன்!
பூக்களோடு நடந்தேன்.
பூக்கள் சொன்னது!
மாலை வரை என்னுடன்
நடந்து கொள்ளலாம் என்று...
(கவிதை - 26)

புதிய காதலியை தொட்டு விடாமல், பேசிக்கொள்ளாமல், கட்டி அணைக்காமல், முத்தம் தராமல், நினைவிலேயே நினைத்து மகிழ்வார் நம் கவிஞர்!

அவர் கவிதையை நோக்குவோம்.

சுத்தி விட்டு ஓடற பம்பரம் போல ஆடுறேனே உன்னை பார்த்த நாளா...

என அவர் வருந்துவதைப் பாருங்கள்.( பாடல் - 41)

பழைய வீட்டு ஜன்னல் கதவின் தூசியைத் தட்ட  தயக்கப்படுபவரா நீங்கள்?

கவிஞர் பிரகாஷைக் கேளுங்கள் வழி சொல்லுவார்!

தூசி தட்ட நினைத்தேன்
என் சாளரத்தை திறந்தேனே
திறந்ததும் பறந்து சென்றது
உள்ளிருந்து வெளியே!
வெளியிலிருந்து உள்ளே!
(கவிதை-  10)

இப்படியாக இவர் 61 கவிதைகளில் தன் உணர்வுகளைப்  புகுத்தி சொல்புதிதாய் பொருள் புதிதாய் வழங்கியுள்ளார்.

இவர் கவிதைகள்  அனைத்தும் இளமைத்  தன்மையுடன் ஈர்ப்புடன் விளங்குகின்றன!எளிய வார்த்தைகளில், ஏற்றமிகு கருத்துகள் அமைந்துள்ளன!  இளம் கவிஞரை வாழ்த்தி மகிழ்வோம்! இதுபோன்று இவர் இனிய கவிதைகளை  இயற்றி, தமிழ் இலக்கிய  உலகிற்கு  மேன்மேலும் படைக்க வேண்டும் என மகிழ்வுடன்  வாழ்த்துகிறேன்!