இருளில் ஒளிரும் நிலா
இருளில் ஒளிரும் நிலா - செல்வகுமார்

இருளில் ஒளிரும் நிலா - செல்வகுமார்

கவிஞர் மா.செல்வகுமார் அவர்கள் எழுதிய "இருளில் ஒளிரும் நிலா" என்ற கவிதைப் புத்தகம் பல்வேறு நிகழ்வுகளை பாடுபொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணைத்தொடும் சிந்தனை, தமிழினப் பண்பாடு - ஜல்லிக்கட்டு என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள கவிஞர் மா.செல்வகுமார் அவர்களின் மூன்றாவது படைப்பு இது. இந்த படைப்பில் சில கவிதைகள் உரைநடை போல உள்ளது. கவிஞர் கவனம் செலுத்த வேண்டும்.

கணவன் மனைவி இருவருக்கும் வாழ்க்கையில் மனக்குமுறல்கள் உண்டு. அதிலும் கணவனை விட மனைவிக்கு மனக்குமுறல்கள் அதிகம். அந்த மனக்குமுறல்கள் பல வகையில் வெளிப்படும். ஆனால் எப்போது ஒரு மனைவியின் அல்லது தாயின் மனக்குமுறல் அதிகமாக வெளிப்படும்.?

தாயின்
மனக்குமுறல்கள்
அனைத்தும்
வெளிப்பட்டு விடும்.

குழந்தைகளுக்கு
ஏற்படும் திடீர்
உடல் உபாதைகளின்
போது.

கவிஞருக்கு அவருடைய வாழ்க்கையில் அர்ச்சனை ஏற்பட்டிருக்கும் போல. அதை தனது கவிதையில் வெளிப்படுத்தி விட்டார். குழந்தைகளின் விஷயத்தில் எப்போதுமே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கடன் சுமையால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த கடன் சுமை என்பது நாம் ஒருவரிடம் அல்லது மற்றவரிடம் வாங்கிய பணம் சார்ந்தது. ஆனால் செல்வகுமாருடைய கவிதை கடன் என்பது பணம் சார்ந்ததல்ல; அறிவு சார்ந்தது அல்லது நமக்கு அவர்கள் போட்ட பாதையை நினைவு கூறுகிறார் இந்த கவிதையின் மூலம்.

கடன் சுமை
அதிகரித்துக் கொண்டே செல்கிறது,

முன்னோர்களுக்கு
நான் என்றென்றும்
கடனாளியாக...

முன்னோர்களை நாம் அறிந்து கொண்டால் புரிந்து கொண்டால் வாழ்க்கை மட்டுமல்ல நம் பாதையும் தெளிவாக கண்களுக்கு புலப்படும்.

இன்னும் அவருடைய கவிதைகள் அம்மா-பிள்ளை பாசம், மழை, செங்குளவி, விவசாயி என அவர் தான் கண்டவற்றை எல்லாவற்றையும் கவிதைகளில் கொண்டு வந்துள்ளார். உதாரணமாக கீழ்க்கண்ட கவிதையைச் சொல்லலாம்.

நடந்து சென்றால்
கௌரவக் குறைச்சல் என்றவர்கள்,

தற்போது
காலையும் மாலையும்
நடக்கின்றார்கள்

நோயாளிகளாக.

மனிதர்கள் வாய்ப்பேச்சில் மட்டுமே கெட்டிக்காரர்கள். ஆனால் தனது நடத்தையில், செயலில் அதை வெளிப்படுத்துவது என்பது மிகவும் குறைவு. என்னதான் மற்ற மனிதர்கள் மீது நாம் மரியாதை வைத்திருந்தாலும் அதை நமது செயலில் வெளிக்காட்டுவது தான் சரியாக இருக்கும். பேச்சு ஒன்று, வாழ்க்கை ஒன்று என்று வாழும் மனிதர்களுக்கு சூடு கொடுக்கிறார்  கவிஞர்.

அனைவரும் சமம்
சரி
நாற்காலி எங்கே?

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நல்ல வசதி வாய்ப்புகளோடு வாழ விரும்புகின்றனர். அதற்கு தேவை பணம். சம்பாதிக்க சிறந்த வழி நல்ல வேலை. நல்ல வேலை கிடைக்க நாம் செய்ய வேண்டியது படிப்பு. நன்றாக படித்தும் அல்லது படித்த படிப்பிற்கு நமக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

தொண்டையில் சிக்கிய
மீன் முள்ளைப்போல்,

அடிக்கடி
என் சிந்தையில்
தோன்றுகிறது

படித்த படிப்பிற்கு
நமக்கு வேலையில்லையே
என்றெண்ணம்.

இறைவன் மகிழ்ச்சியில்  எப்போது திளைப்பான், கல்வி என்ன செய்யும், வாழ்வில் கொடியது எது?  பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம். இது போன்ற பல கேள்விகளுக்கு கவிஞர் தனது கவிதை மூலம் பதிவு பதில் தந்துள்ளார்.

இறுதியாக ஏன் கவிதைகளைப் படிக்க வேண்டும்? அல்லது புத்தகங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்?. அதற்கும் பதில் சொல்கிறார் மா.செல்வகுமார் தனது கவிதைகளின் மூலம்.

முக்காலத்தையும்
உணர்த்துவேன்,

எக்காலமும்
ஏமாற்ற மாட்டேன்.

என்னை வாசியுங்கள்,
இப்படிக்கு புத்தகம்...

ஆகவே செல்வகுமார் சொல்வது போல நம் தமிழ்ச் சொந்தங்கள் புத்தகங்களை வாங்குங்கள்; புத்தகங்களை படியுங்கள்; புத்தகங்களை பரிசளியுங்கள்; எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துங்கள்.