மீன் விழியில் உருளும் கவிகள்
மீன் விழியில் உருளும் கவிகள் - நீலநிலா செண்பகராஜன்

மீன் விழியில் உருளும் கவிகள் - நீலநிலா செண்பகராஜன்

"மீன் விழியில் உருளும் கவிகள்" என்று கவித்துவமான தலைப்பை வைத்துள்ள நீலநிலா செண்பகராஜன் அவர்களின் இந்த படைப்பு புதுக்கோட்டை மாவட்டம் சுப்ரமணியபுரம் என்ற ஊரில் இருந்து வெளிவரும் தாழம்பூ இதழில் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தொடராக வெளிவந்த ஒரு காதல் கவிதைத் தொடர்.

இதுவரை நான் படித்த கவிதைகள் எல்லாம் ஒரு கவிஞர் தன் காதலியை பாராட்டி, தாலாட்டி, சீராட்டி வெளிவந்தவையே. ஆனால் முதல் முதலாக ஒரு கவிஞர் தன்னை பெண்ணாக உருவகம் செய்து கொண்டு பெண்களின் பார்வையில் ஒரு ஆணைப் பற்றி காதல் கவிதைகளைப் பதிவு செய்துள்ளார். இதற்கு முன் அவர் வெளியிட்ட மற்றொரு புதுமையான கவிதைத் தொகுப்பு "மாயமானைத் தேடி..." இது கவிஞர் செண்பகராஜன் அவர்கள் கண்டுபிடித்த "முரண் டூவிட்டு" என்ற புதிய வகையில் வெளியான நூலாகும். இந்த "மாயமானைத் தேடி..." என்ற நூலை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன். செண்பகராஜன் அவர்களின் அடுத்த புது முயற்சியாக இந்த காதல் கவிதைகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்த காதல் கவிதைத் தொடர் ஒரு பெண் ஒருவனை காதலிப்பதும் அவனை வர்ணிப்பதும் பின்னர் மணமுடித்த பிறகு சில காலம் கழித்த பிறகு அவள் மீது சந்தேகம் கொள்வதும் அந்த சந்தேகம் அவளைக் கலங்கடிப்பதுமாக அமைந்துள்ளது. இதனைத் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற பார்வையில் நாம் அலசலாம். திருமணத்திற்கு முன் ஒரு பெண் தன் காதலனை, ஆண் கவிஞர்கள் எப்படி தன் காதலியை வர்ணிப்பார்களோ அது போல இந்தப் பெண் தன் காதலனை தன் பார்வையில் வர்ணிக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு ஆணின் ஒழுக்கம் அல்லது அவனுடைய பார்வை, அவனது நடை உடை பாவனை மற்றும் பேச்சுத் திறன் கொண்டு அவன் மீது காதல் வரும். ஆனால் இந்தக் கவிதைப் பெண்ணிற்கு தான் விரும்பும் ஆணின்/காதலனின் அரும்பு மீசையைப் பார்த்து காதல் மலர்கிறது.

உன் அரும்பு மீசையைப்
பார்த்துத் தானடா
உன்னை விரும்பும் ஆசை
என்னுள் முளைத்தது!

என்கிறாள்.

அதுமட்டுமல்ல, அவள் அவன் மேல் கொண்ட ஈர்ப்புக்கு மற்றொரு காரணமாக அவள் பாடுவதை கேளுங்கள்.

நீ சிகரட்டைப்
பற்ற வைத்தாய்!
பற்றிக் கொண்டது
சிகரெட் மட்டுமல்ல
நானும் தான்...!

எனக்கு என்னவோ கவிஞர் சிகரெட் என்று சொல்வதற்கு பதிலாக அந்தப் பெண் அவனுடைய பேச்சுத் திறனையோ அல்லது அவன் அழகைப் பார்த்தோ காதல் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது சரி, இக்காலப் பெண்கள் விரும்பும் ஆண்கள் வித்தியாசமாகவே உள்ளனர்.

மீண்டும் சொல்கிறாள் அவள்.

நீ
பளீரென்றுத் துவைத்த
வெள்ளை நிற உடையில்
வலம் வந்து
என் மனசைக் குப்பையாக்கி விட்டாயடா...!

என்கிறாள்.

அவளுடைய காதல் போதை இன்னும் தீரவில்லை. மீண்டும் அவனைப் பார்த்து சொல்கிறாள்.

பிரியமானவனே...!
உன்னைப் போல
எனக்குக் கவிதைகள் வாசிக்கப் பிடிக்காது..
கவிதையான உன்னோடு
வாழவே எனக்குப் பிடிக்கும்..!
நான் முருகன் பக்தையாக இருந்தாலும்
எனக்கு கந்தர் சஷ்டி கவசமோ
உன்னுடைய குரல் தானடா...!

என்று காதல் பித்து அதிகரிக்க தனது உள்ளக்கிடக்கையை சுட்டிக் காட்டுகிறாள்.

காதலியின் காதல் போதை அவனுடைய பெயரை தன் மார்பில் பச்சை குத்தி கொள்வது வரை செல்கிறது. இறுதியில் "எப்படா என்னைப் பொண்ணு கேட்டு வரப்போறே?" என்று ஏங்கி தவிக்கிறாள்.

இறுதியில் காதலில் வாழ்ந்தவர்கள் கணவன் மனைவியாய் வாழ தயாராகிறார்கள். மணமேடையில் "எல்லாப் புகழும் நம் காதலுக்கே!" என்று மனதினில் காதலி உரக்கக் கூறுகிறாள்.

காதல் போதை இருவரையும் ஆட்டுவிக்க கணவன் மனைவி வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். ஆசை 30 நாள்; மோகம் 60 நாள் என்பது போல சில காலம் கழித்து காதலனுக்கு / கணவனுக்கு சந்தேகம் என்னும் பிசாசு வருகிறது. வசைச்சொல்லை கையாளுகிறான். அவளுடைய பிறந்தநாள் அன்று அவன் அனுப்பிய பிறந்தநாள் பரிசு விவாகரத்து நோட்டீஸ். இருப்பினும் அவளுக்கு அவன் மேல் உள்ள காதல் போதை தெளியவில்லை. இறுதிவரை காதல் உறவினில் அவனோடு வாழலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறாள். தீர்ப்பு சீக்கிரம் வர வேண்டாம் என்றும் வாய்தா மேல் வாய்தா பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் குதூகலம் அடைகிறாள்.

அவன் மேல் கொண்ட அவளுடைய காதல் இன்னும் தொடர்கிறது என்று கூறுகிறாள். இந்த காதல் ஓவியம் சங்க காலத்தில் ஒரு பெண் ஒருவனை நினைத்து விட்டால் அவன் வரும் வரை பசலை படிந்து அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போல் உள்ளது.

நீதிமன்றம் நாளை
நம் வழக்கிற்கு
தீர்ப்பு தரவ உள்ளது
என்ற
அறிவிப்பு
என் இதயத்தை
ஈட்டியாய் குத்தியது
மக்களை வதைக்கும்
விலைவாசி போன்று!
என்று மனம் குமைகிறாள்.

தீர்ப்பும் வருகிறது. வந்தவுடன் காதலன் அவளிடம் சென்று ஏதோ சொல்கிறான். என்ன சொன்னான் என்ற பதிலை இந்த கவிதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவளுடைய பதில் என்ன? என்பதை அடுத்த கவிதை தொடர்ச்சியில் வெளிவரும் என்பதை கவிஞர் சுட்டிக் காட்டியுள்ளார். நாமும் சில காலம் பொறுத்திருப்போம்.

நான் மேலே சொன்னபடி இதுவரை வந்த காதல் கவிதைகள் எல்லாம் ஆண்கள் பெண்கள் மேல் காதல் கொண்டு பாடிய கவிதைகள். முதன் முதலாக ஒரு ஆண் கவிஞர் தன்னை பெண்ணாக நினைத்து கொண்டு காதல் பாடல் பாடி உள்ளார். இது ஒரு வித்தியாசமான முயற்சி. இதனை கவிதையாகவும் கொள்ளலாம் அல்லது ஒரு சிறு கதையாகவும் கொள்ளலாம். இது வாசகர்கள் விருப்பம். அவர் மேலும் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள நல்வாழ்த்துகள்.