மஹாசத்ரபதி  ருத்ரதாமன்
மஹாசத்ரபதி ருத்ரதாமன் - ஜெயக்குமார் சுந்தரம்

மஹாசத்ரபதி ருத்ரதாமன் - ஜெயக்குமார் சுந்தரம்

குஷாணர்கள் வடஇந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த காலத்தில் தங்கள் நிலப்பகுதியைப் பல மாகாணங்களாகப் பிரித்து அப்பகுதிகளை ஆட்சி செய்ய ஆளுநர்களை நியமித்தனர். அவர்கள் சத்ரபதிகள் என்று அழைக்கப்பட்டனர். அப்படி குஷாண மன்னரால் சத்ரபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் சத்ரபதி சாஸ்தானா என்பவர். சாகா இனத்தின் கர்தமாகா பிரிவை சேர்ந்த சத்ரபதி சாஸ்தானா காலப்போக்கில் தங்களை சிற்றரசர்களாக முடி சூட்டிக்கொண்டு கி.பி. 78 முதல் 130 வரையிலான 52 ஆண்டுகள் அவந்தி என்ற நாட்டை ஆண்டு வந்தான். இக்கதையின் நாயகன் ருத்ரதாமன் இவருடைய பேரன்.

ருத்ரதாமனும் அவனுடைய நண்பன் பிருதிவிசேனன் என்பவனும் சுராஷ்டிரா நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு அவர்களுக்கு சில பெண்களின் ஓலக்குரல் கேட்கின்றது. சென்று பார்த்தல் சுராஷ்டிரா நாட்டின் இளவரசி சங்கமித்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை பார்க்கின்றனர். வழக்கம்போல் இளவரசியை ருத்ரதாமன் காப்பாற்றுகிறான். இருவருக்கும் காதல் உண்டாகிறது. இந்த விஷயம் மன்னருக்கு தெரிகிறது. இவர்கள் இருவரும் தாங்கள் சுற்றுலா பயணிகள் என்று கூறி அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

ருத்ரதாமன் தன் தாத்தா சத்ரபதி சாஸ்தானாவை சந்தித்து சுராஷ்டிரா நாட்டை எப்படி தாக்குவது; அந்நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள அவந்தி மன்னன் விஜய சிம்மன் ஒன்று சேர்ந்தால் எவ்வாறு நடந்து கொள்வது என்று ஆலோசனை செய்கிறான். அப்போது தான் தெரிகிறது, அவன் சுராஷ்டிரா நாட்டைக் கைப்பற்ற தன் நண்பனுடன் சேர்ந்து அங்கு வந்திருக்கிறான் என்று.  இறுதியில் போர் தொடுக்கின்றனர். இந்தப் போர் நாடு பிடிக்க நடந்த போர் மட்டுமே. போரில் அவன் இளவரசியை மீண்டும் சந்திக்கின்றான். சுராஷ்டிராவையும் அவந்தி நாட்டையும் ருத்ரதாமன் கைப்பற்றுகின்றான்.

வழக்கம் போல் இளவரசி சங்கமித்தையை திருமணம் செய்து கொள்கிறான். சில வருடங்களுக்குப் பிறகு தாத்தாவும் தந்தையும் மரணமடைய ருத்ரதாமன் முடிசூட்டிக் சொல்கிறான்.

தனது மகளை பக்கத்து நாட்டு இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். போர் வெறியில் தனது மருமகனின் நாட்டின் மீதும் சில குற்றம் சுமத்தி போர் தொடுத்து வெற்றி பெறுகிறான்.

கதையில் குதிரைப்படை வீரன் சுவிசாகன்(பஹலவ மரபினர்) போர் ஒன்றில் ருத்ரதாமனை காப்பாற்றுகிறான். அது முதல் அவன் மீது நம்பிக்கை வைத்து பல பொறுப்புகளை அவனிடம் ஒப்படைக்கிறான்.

இந்த பஹலவன் என்பது மருவி பல்லவன் ஆயிற்று என்று குறிப்பிடுகின்றார் ஆசிரியர். இதனை மறுப்பவர்களும் உண்டு என்று தன் முடிவுரையில் குறிப்பிடுகிறார்.

சரித்திரம் என்றாலே கற்பனைகளும் உண்டு. சில எழுத்து நடையும் உண்டு. ஆசிரியர் மேலும் சில கற்பனைகளைப் புகுத்தி இதனை மேம்பட்ட நாவலாக தந்திருக்க முடியும்.

இருப்பினும் எப்போதும் மனித மனம் புதியன ஒன்றை ஏற்க மறுக்கும். உதாரணமாக எப்போதுமே மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர்கள் பற்றிய கதையை நாம் படிக்கும்போது அதனுடன் ஒன்றிப் போக முடிகிறது. காரணம், அது நமக்கு நெருக்கமாக வரலாறாக இருப்பதால். ஆனால் இந்நாவல் வட இந்தியாவில் உள்ளவர்களை பற்றிச் சொல்லும் பொழுது அதனுடன் ஒன்றிப்போவது சற்று சிரமமாகவே இருக்கிறது. மேலும் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க நமக்கு சில நேரங்களில் குழப்பங்களும் மிஞ்சுகிறது. ஆகவே படிக்கும் போது வாசகர்கள் மெதுவாக பொறுமையாக நிதானமாக பார்த்து படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. முன்னுரையில் மிக நீண்ட வரலாற்றை கொடுத்துள்ளதால் அவருடைய தேடுதலும் ஆர்வமும் தெரிகிறது. எப்படி இருப்பினும் நமது மூவேந்தர்களை தாண்டி வேறு ஒரு புதிய சரித்திரத்தை சொல்லிய ஆசிரியர் ஜெயக்குமார் சுந்தரம் பாராட்டுக்குரியவர். இது ஆசிரியரின் முதல் சரித்திர நாவல். அடுத்த சரித்திர நாவல்களில் இதைவிட ஒரு மேம்பட்ட சிறப்பான நடை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.