தேனூறும் உசுருல
தேனூறும் உசுருல - செல்வகுமார்

தேனூறும் உசுருல - செல்வகுமார்

சிரா செல்வகுமார் அவர்கள் எழுதியுள்ள "தேனூறும் உசுருல..." என்ற இக்கிராமிய கீதங்கள் மண்வாசனையுடன் கூடிய காதல் கீதங்கள்  என்றுதான் கூற வேண்டும். இவரின் கவிதைகள் காதலை மட்டுமல்லாமல் கிராமத்து வாசனையையும் நம் மேல் படரச் செய்கிறது. காதல் வயப்பட்டோருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஏனெனில் ஒவ்வொரு கவிதையிலும் காதல் ரசம் சொட்டுகிறது என்றே கூறலாம். இக்கிராமிய கீதங்களை வாசிக்கும் பெண் ஒருவர் காதலில் விழுந்தால் வியப்பேதுமில்லை.

இதில் ஒரு ஆண் பெண்ணுக்காக எழுதிய கவிதைகளை விட ஒரு பெண் ஆணுக்காக எழுதிய கவிதைகள் அழுத்தமானதாக அமைந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் அன்பு, பிரிவு, ஏக்கம், ஆசை, துயரம் எனப் பல குணங்களில் சிந்தித்து ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து, ஒரு ஆண் கவிதை வடித்திருப்பது இந்நூலாசிரியரின் சிறப்பு.

காதலித்ததால் கவிதை தோன்றியதா?
கவிதை தோன்றிய பின் காதல் வந்ததா? ‌‌ - என்ற கேள்வியை என்னுள் உதிக்கச்செய்கிறது இப்புத்தகம்.

இந்நூலில் என்னைக் கவர்ந்த வரிகள்!

1. "கருவாச்சிக் காவியமா
கலங்கவைக்கப் பார்க்குற
கருவேலம் முள்ளப்போல
காதலிச்சு குத்துற"

2. "மனசு சிக்கிருக்கே
முள்ளுமேலச் சேலைபோல.."

3. "ஏக்கமுடன் காத்திருக்கேன்
எப்பவுன் தரிசனமே
ஏறெடுத்துப் பாரடி
எம்மனசும் பூக்கட்டுமே"

4. "உயிருக்குள் காற்றென
கலந்து கொண்டவனே
உணர்வுக்குள் தருவென
கிளைத்து நிற்பவனே
உலகமே நீயென
எண்ண வைத்தவனே"

5. "பகலில் தோன்றியப்
பௌர்ணமி கண்டு
வெய்யிலும் சற்று
வேர்த்து நிக்குதே".

இவ்வாறாக ரசனை மிகுந்த கவிதைகளினால் வாசகர்களை வசியம் செய்கிறார் இக்கவிஞர். காதலோடு சேர்த்து கவிதையையும் நேசிக்க வைத்து விடுகிறது இப்படைப்பாலரின் கவிதைகள்.  மொத்தத்தில்,

தேனூறும் உசுருல...
 உயிரில் ஊறிய கவிதைகள்...