இதழ்த் தின்ற முத்தங்கள்
இதழ்த் தின்ற முத்தங்கள் - விசித்திரக்கவி

இதழ்த் தின்ற முத்தங்கள் - விசித்திரக்கவி

காதல், தமிழர்களிடம் பிரிக்க முடியாத ஒன்று. இந்த காதல் மனித இனத்திற்கு மட்டுமல்ல; மற்ற உயிரினங்களுக்கும் இருக்கிறது. எப்போதுமே தமிழர்களிடம் காதல் ஒட்டி உறவாடுவதை சங்க கால பாடல்களிலிருந்து பார்த்திருக்கிறோம். நமது தமிழ் மரபில் இலக்கண, இலக்கியத்திற்கு மட்டுமல்ல; காதலுக்கும் நாம் மிகப்பெரிய ஒரு இடத்தை கொடுத்திருக்கிறோம்.

அந்த வகையில் இன்றைய காலம் வரை நமது கவிஞர்கள் காதலைப் பாடிக்கொண்டு தான் வருகிறார்கள். அந்த வரிசையில் நமக்கு அல்லது காதலர்களுக்கு முத்தாய்ப்பாக ஒரு கவிதைத் தொகுப்பு ஒன்று வந்திருக்கிறது.

இதழ்த் தின்ற முத்தங்கள் -  தலைப்பே கவிதையின் பாடுபொருளைச்  சொல்லி விடுகிறது. இதன் மூலம் கவிஞரின் ரசனையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்தக் கவிதைத் தொகுப்புக்கு சொந்தக்காரர் விசித்திரக்கவி. தனது பெயரையும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.

இத்தொகுப்பின் கவிஞர், வெறும் காதல் கவிதைகளை மட்டும் தான் எழுதி இருக்கிறாரா என்றால் இல்லை, வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகளையையும் பாடுகிறார். உதாரணமாக,

எப்படி எப்படியோ எனைக்
கிழித்துப் போடும் வாழ்க்கையை
வேடிக்கைப் பார்த்தப் படியே
வாழ்ந்துப் போகிறேன்

என்றும்

வா வா எனக்கு
முன்னோ பின்னோ
ஆறடிக் குழியில்
உனக்கும் எனக்கும்
ஒரே மரியாதைத் தான்...

என்றும் பாடுகிறார்.
மனிதர்கள் எப்போதாவது ஒரு கட்டத்தில் தனிமையை விரும்புகிறார்கள்.  சில நாட்களோ அல்லது வாரங்களோ என்றால் பரவாயில்லை. அதற்கு மேல் எனில் மனிதர்களுக்கு அதை கடக்கவே முடியாத ஒரு தூரமாக அமைந்துவிடும். கவிஞரும் தனது தனிமையைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

யார் சொன்னது நான்
தனியாக இருக்கிறேன் என்று...?
தனிமைதான் என்னுடனேயே
இருக்கிறதே அப்புறம் எப்படி...!

இந்த கவிதையில் இருந்து கவிஞரின் தனிமையை அல்லது மனதில் இருக்கும் ஏக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

மழைச்ச்சாரலாய் ஆங்காங்கே இது போன்ற சில கவிதைகளை  கொடுத்துவிட்டு மழையாய் சில காதல் கவிதைகளையும் கொடுத்திருக்கிறார் வாசகர்களுக்கு.

காதலிக்கின்ற நேரத்தில் அல்லது காதல் வயப்படுகின்ற நேரத்தில் அது இளைஞனோ அல்லது திருமணமானவர்களோ அவர்கள் மனதில் ஏற்படும் வார்த்தைகள் கவிதையாய் கொட்டும். அப்படி இருக்கின்ற அந்த சூழ்நிலையில் நமது கவிஞர் அவருடைய அதிகபட்ச ஆசையாகக் கூறுவதை நீங்களே கேளுங்கள்.

என் அதிகப்பட்ச
ஆசை என்பது
உன் குரல் மட்டுமே
என்னுலகத்தில்
எதிரொலிக்க வேண்டுமடி...

காதல் பருவங்களில் காதலர்களுக்கு அதிகபட்ச ஆசை என்பது ஒன்றாக சுற்றுவது அல்லது தனக்கு பிடித்தமானவற்றை வாங்கித் தருவது அல்லது உண்ணுவது. ஆனால் நமது கவிஞருக்கோ அவருடைய அதிகபட்ச ஆசை என்ன என்பதை தனது காதலிக்கு தெரியப்படுத்தி விட்டார்.

உலக அழகிகள் பற்றித் தெரியும். ஆனால் கவிஞர் ,ஒட்டுமொத்த உலக அழகிகளும் அவருடைய காதலிக்கு ஈடு இணை இல்லை என்று இந்த கவிதையின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு கவிஞர்களும் தனது காதலியை வர்ணிக்கும் பொழுது முகத்தை சந்திரன் ஆகவும் புருவத்தை வில்லாகவும் வர்ணிப்பது உண்டு. நமது கவிஞர் தனது காதலியை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்.

உலக அழகிகளின் ஒட்டுமொத்த
உருவ அழகும் உன்னிருப்
புருவ வில்லுக்கு மத்தியில்
அற்பமாகிப் போனதடி...

இன்றைய காலகட்டங்களில் இளைஞர்களுக்கு காதல் என்பது ஒரு போதையாகவோ விளையாட்டாகவோ இருக்கிறது. சிலருக்கு மட்டும் உயிராக இருக்கிறது.

குறுந்தொகையில் தலைவி தனது தோழியிடம் தன் தலைவனின் மேல் கொண்ட நட்பை, பிரியத்தை அல்லது காதலைக் கூறும் பொழுது, "நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே" என்று குறிப்பிடுவார். நமது கவிஞர் நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு நுண்ணிய ஒரே ஒரு உதாரணத்தைக் கொண்டு தனது காதலை வெளிப்படுத்துகிறார்.

நான் இறந்தப் பிறகு
என் உள்ளங்காலினைத் தொட்டுப்பார்
அதன் குளிர்ச்சியின் அளவு
எவ்வளவோ ...?

அவ்வளவுப் பிரியம்
உன் மேல் எனக்கு...

இதைவிட மிகச் சிறந்த ஒரு உவமையை உதாரணத்தை தான் காதல் மேல் கொண்டுள்ள அன்பை எப்படி சுட்டிக்காட்ட முடியும். இன்னொரு கவிதை,

உன் இதழ்த் தின்ற
என் முத்தக் கவிதைகளை
மொத்தமும் உன்னிருப் பாதத்தில்
உவந்து வைத்தேன்
என் காதலின் பெரும்
தெய்வமடி நீ...

இந்த அளவு தனது காதலியிடம் அன்பை கொண்டிருக்கும் காதலன் தனது காதலியிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அதுவும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான். இந்த இடத்தில் ஒரு ஆணின் ஆதங்கமும் வெளிப்படுவதை நாம் மிக நுட்பமாக உணர முடியும். அந்தக் கவிதை,

உன்னிடம் எனக்கான
அங்கீகாரம் என்பதெல்லாம்
நானில்லாத இடத்திலும்
என்னை நீ
நிராகரிக்காமல் இருப்பதே.

இன்னும் பல கவிதைகள் வரிசை கட்டி நிற்கின்றன. எல்லாவற்றையும் நான் இங்கு கூறினால் கவிதையின் வாசலில் இருக்கும் இளைஞர்கள் இதனை எடுத்து தனது காதலிக்கு தனது படைப்பாக கொடுத்து விடுவார்கள். எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இருப்பினும் இவருடைய கைகளில் தமிழ் சலங்கை கட்டி விளையாடுகிறது.

இது மட்டுமில்லாமல் இவர் காட்டும் உவமைகள் மிகவும் ரசிக்கத்தக்கவனாக இருக்கிறது.

தரையில் கொட்டி விட்ட
நட்சத்திரப் புன்னகையின் நிழலில்

வெண்மேகம் கொண்டு
வெண்ணெய்ப் பிழிந்து
அந்திமஞ்சளில் குளித்து
அல்லி இதழாய்ப் பிறந்தவளே...

அகிம்சை நிலவே...

காவடிப் புருவமா
கள்வடியும் இதழா

வியர்வைத் துளியால் கொஞ்சம்
போர்வைதனைப் போர்த்திடடி...!

வானவில்லை வளைத்து
வளையல் செஞ்சித் தரவா
மருதாணிக்குப் பதிலா
நட்சத்திரம் அரைத்துத் தரவா...

சித்திரை நிலவே
புடவைப் போர்த்தியப் புல்லாங்குழலே

இதுபோல இன்னும் பல கவிதைகளை, உவமைகளை தனது கவிதைகளில் ஆங்காங்கே தெளித்திருக்கிறார்.

இவர்  தனது கவிதைக் காதலியுடன் கொஞ்சி விளையாடுவது போல, தமிழ் இவரிடம் கொஞ்சி விளையாடுகிறது என்றே சொல்ல வேண்டும். இவர் தனது கவிதைக் காதலியிடம் கொஞ்சட்டும். நிச்சயமாக இன்னும் பல கவிதைகள் நமக்குக் கிடைக்கும். நாம் அடுத்த தொகுப்பிற்காக காத்திருப்போம்.