நீலனின் பொங்குமாங்கடல்
நீலனின் பொங்குமாங்கடல் - இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

நீலனின் பொங்குமாங்கடல் - இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

ஒரு நல்ல விதை பல்லாயிரக்கணக்கான தலைமுறைக்கு வித்தாகிறது என்பது மிகையல்ல. ஏனெனில் குழந்தையின் மனசைப் பக்குவமாய் தெரிந்து கொண்டு குழந்தைக்குக் குழந்தையாகவே கதை சொல்லும் பக்குவம் இந்தக் கதையில் வருவதை நானும் குழந்தையாகவே கண்டேன்.

இக்கதைக்கு உள் நுழையும் முன்.. வாசித்த வாசகனாக ஒரு அனுபவத்தை உங்களுக்கு விவசாயத் தோட்டத்தில் விவசாயி வயலுக்குத் தினம்தோறும் நீர் பாசுகிறார்கள். அது ஒருபோதும் வீணாகி போனதில்லை. அதுபோல் இக்கதையில் வரும் சம்பவம், தத்துவம் இப்போதைய காலத்திற்கு தேவையான ஒன்று. இனி வரும் தலைமுறைக்கு மிகவும் அவசியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன்.

நீலனின் பொங்குமாங்கடல் - இந்நாவலின் கதைக் களமானது  நம் அனைவரும் சுற்றுலாவுக்குச் சென்று உள்ளோம். அப்படி ஒரு தருணத்தில் நம்மிடமிருந்து தூக்கி எறியும் எச்சங்களில் இருந்து இந்தச் சுற்றுச்சூழல் எவ்வாறு எல்லாம் மாசடைகின்றன; அதனால் அந்த வனப் பகுதியில் வாழும் வனவிலங்குகள் பாதிப்பு என எல்லாவற்றையும் விவரிக்கின்றன.

மேலும் உணவின்றி இறந்து போன விலங்குகளைத் விட... நெகிழிப் பைகளால் இறந்து போன விலங்குகள் தான் அதிகம் என்பதை இந்நாவல் பதிவு செய்கிறது.

நிச்சயம் இதில் உள்ள அனைத்து கதையும், மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்கும் குரங்குகளின் சேட்டையில் இருந்து ... அருவி குதிக்கும் அழகு வரை... அதன் பேரழகில் நானும் பயணித்தேன் என்பதே ஒரு குழந்தையாய்...

எனது பால்யத்து நிகழ்வுகளை சட்டென்று பொங்கி வழிந்தோடியது. ஒவ்வொரு கதை முடிவிலும், எப்போதும் எங்கும் ஒரு கவனம் தேவை; வைத்துள்ள பொருளை எங்கு வைக்க வேண்டும்; எங்கு எதைப் போடக்கூடாது; எதை எங்கு சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிச் செல்கிறது.

குற்றாலம் என்றாலே அருவி தான் ஞாபகம் வரும். ஆனால் இப்போது இந்த "நீலனின் பொங்குமாங்கடல்" என்ற நூலும் எனது நினைவில் என்றும் வரும்.

நீலனும் குரங்குகளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தன. வீரா கொஞ்சம் கோவமாக நான் இப்ப என்ன சொல்லிட்டேனனு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க.? என்றான்.

கதையில் உள் நுழையும் போது புன்னகையும் மகிழ்ச்சியும் குழந்தையாகவே... வீரா தான் எப்படிப்பட்டவன் என்பதை நினைத்து பெருமைப்படும் வேளையில் அது எல்லாம் ஒன்றுமில்லை என்று நீலன் கற்பிக்கும் பாடம்.. சுட்டிக்காட்டுவதற்கு பின்னால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்த்துகிறது கதைக்களம்.

இவ்வாறு பயணப்படும் போதெல்லாம் ஒரு ஓரம்  அமர்ந்து .... பேசிக்கொள்ளும் வீரா, நீலன்  கற்பிக்கும் பாடம் நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் சிறு சிறு பிழை தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் பெரிய ஆபத்தாக விளைகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஊரும் அருவி...ஒவ்வொரு காட்சியிலும் கருணை உள்ள மனிதன்... சேவை மனப்பான்மை ...

பாதுகாப்பு... விழிப்புணர்வு... எச்சரிக்கை என எல்லா கோணங்களிலும் வீரா வியக்கும் வண்ணம் நீலன் செயல்.

இக்கதை கூறும் விழிப்புணர்வு நாம் அறிந்து செய்யும் சில தவறுகள் நாம் அறியாத செய்யும் பல தவறுகள் என எல்லாவற்றையும் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாச் சென்றது போல் இருந்தது.

எழுத்தாளர் தனது முன்னுரையில் அழகாக பதிவுச் செய்திருப்பார்... அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன காண்பிக்கப் போகிறோம் என்று.

விதையிலிருந்து மாற்றம் தொடங்கட்டும். 

நாவலை வாசித்த ஒரு குழந்தையாய் எனது வாழ்த்துகள்.