வெற்றி வேந்தன்
வெற்றி வேந்தன் - உதயணன்

வெற்றி வேந்தன் - உதயணன்

பல்லவ கோளரி என்ற பெயரைப் பெற்றவனும், பல்லவ இனத்தின் தலைவன் என்ற வகையில் காடவர்கோன் என்று அழைக்கப்பட்டவனும், உலகையே ஆளக்கூடியவன் என்பதால் அவனி நாரணன் என்று புகழப்பட்டவனும், கலம்பக இலக்கியத்திலேயே முதலாவதான நந்திக்கலம்பகத்தின் நாயகனும், வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை ஆளும் ஆற்றல் படைத்த பல்லவ மகாராசன் என வேலூர் பட்டயங்களால் சிறப்பிக்கப்பட்டவனும், கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் என்று அவன் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்டு 'தெள்ளா றெரிந்தவன்' என்று இலக்கியங்களிலும் வரலாற்றிலும் பாராட்டி உயர்த்தப்பட்டவனுமான (பக்கம்: 47) கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் காஞ்சியை ஆட்சி செய்த பல்லவர்களில் மாவீரனான மூன்றாம் நந்திவர்மனை கதையின் நாயகனாக் கொண்டு வெற்றி வேந்தன் என்ற பெயரில் ஒரு சரித்திர நாவலை உதயணன் அவர்கள் படைத்துள்ளார்.

இந்த கதையில் நந்திவர்மன் ஆட்சி செய்த காலகட்டத்தில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்று மதப்பிரச்சினை இருந்திருக்கிறது. மன்னன் சைவ மதத்தை சேர்ந்தவனாக(சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள். திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபவர்கள் வைணவர்கள்) இருந்தாலும் எல்லோருக்கும் பொதுவானவனாவே இருக்கிறான். இருந்தாலும் வைணவ கோவிலுக்கு செல்வது சைவ மதத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்களுக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில் பௌத்தர்கள் தங்கள் மதம் பரவாமல் இருக்க சைவமும் வைணவமும் தான் காரணம் என்று நினைக்கிறார்கள்.

இந்த கதையில் ஒரு குறிப்பிட்ட சமயம் தான் அரசாட்சியை பெற வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறது; எந்த எல்லைக்கு செல்கிறது என்றும் சொல்கிறது. அதைப்பற்றி கூறும் பொழுது அரசருக்கும் அமைச்சருக்கும் இடையே நடைபெறும் இந்த உரையாடல் மிகச் சிறந்ததாக தெரிகிறது.

"மதவாதிகள் தீவிரவாதிகளாகத் தாமாகவே மாறுவதைக் காட்டிலும் அரசியல் அவர்களுக்குத் துணை போகும் போது தான் உண்மையாகவே தீவிரமடைகிறார்கள். அதோடு அவர்களது செயல்கள் விரிந்து பல இயக்கங்களாக உருவெடுக்கின்றன ." இந்த காலகட்டத்திலும் இந்த நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ராஜகுளத்தில் குளித்ததற்காக புத்தவர்மன் தண்டனை கொடுக்க செல்வது அதை நந்திவர்மன் முறியடிப்பது, பெருமாள் கோவிலை இடித்து பௌத்த விஹாரத்தை கட்ட வேண்டும் என்று  பௌத்த தலைவர் கௌதமர் கூறும் பொழுது அவருக்கு உண்மையை உணர்த்துவது, புரவிக் கொள்ளையனிடம் சமயோஜிதமாக பேசுவது, கௌதமர் கொல்லப்பட்ட போது அதை  சமாளித்தது, மகாராணி 3 வரங்களை கேட்டு அந்த வாரங்களே அவனுடைய வாழ்க்கைக்கு எதிர்பாராத விதமாக இருப்பது, பின்னர் அதை  சமாளிப்பது என கதைநெடுக நந்திவர்மன் ஒரு வீரப் பராக்கிராமனாக தோற்றமளிக்கிறான்.

நந்திவர்மன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வரும் பொழுது அவனது தம்பி புத்தவர்மன் மணிமங்கலக் கோட்டையின் கோட்டத் தலைவனாக இருக்கிறான். அவன் காஞ்சியின் இளவரசனாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். நந்திவர்மனின் தம்பியாக இருப்பினும் புத்தவர்மன் சகுனி மாமா என்பவரிடம் வளர்ந்ததும்(எப்படி புத்தவர்மன் சகுனியிடம் வந்தான் என்பது அது ஒரு தனிக் கதை) அவனுக்கு அவர் கற்றுக் கொடுத்து எல்லா கெட்ட விஷயங்களையும் கற்றுக்கொண்டு அவருடைய பேச்சை மீறுவதும் பின்னர் பௌத்தர்களுடன் சேர்ந்து கொண்டு தன் அண்ணனுக்கு தொல்லை கொடுப்பதும் என கதை ஒரு பக்கம் நகர்கிறது. அவனால் ஏற்படும் இன்னல்களையும் எப்படி நந்திவர்மன் சமாளிக்கிறான் என்று விறுவிறுப்பாகச் செல்கிறது.

கதையில் மகாராணியை ஒருவன் ஆட்டி படைப்பது, அமைச்சரின் சிறு வயது மகனுக்கு பதவி, பாசுபதர்களின் நரபலி என இன்னொரு பக்கம் கதை சூடு பிடிக்கிறது.

கதையில் ராஷ்டிரகூட அரசகுமாரிகள், ராஷ்டிரகூட மன்னன், கபாலிகர்கள், பாண்டிய மன்னன் மற்றும் அவருடைய மகள், சோழ சிற்றரசர்கள் என இவர்களும் தங்கள் பங்குக்கு கதையை நகர்த்திச் செல்கிறார்கள்.

இவையெல்லாம் கதையின் ஒரு பக்கமாக இருந்தாலும் நந்திவர்மனின் தந்தை தந்திவர்மனை ராஷ்டிரகூட மன்னன் (அமோகவர்ஷனின் தந்தை) அவமானப்படுத்தியதையும் நாட்டை சீர்குலைத்தைதையும் தந்திவர்மன் தனது இறுதி காலகட்டத்தில் நந்திவர்மனிடம் கூறுகிறான். அதற்கு பழி வாங்க ராஷ்டிரகூட மன்னன் மீது போர்தொடுக்க முயற்சிக்கிறான்.

மன்னராட்சியில் ஒரு மன்னன் அடுத்த மன்னனுக்கு கப்பம் கட்டுவதும், அவனுக்கு கீழ் சிற்றரசனாக வாழ்வதும் அவனுக்கு பிறகு அந்த ஆட்சியில் மாற்றம் ஏற்படும் போது அவருடைய மகன் கப்பம் கட்ட மறுத்து  போரில் வெல்வதும் நாம் படித்த சில நிகழ்வுகள். இக்கதையில் நந்திவர்மன் ராஷ்டிரகூட மன்னன் அமோகவர்ஷனை நோக்கி போர் புரிய செல்வதும் போரில் நந்திவர்மன் சில தந்திரங்களை கையால்வது என போர் காட்சிகளை ஆசிரியர் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.

ஒரு ஆலயம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும்; அங்கு என்ன பூஜை நடக்க வேண்டும் என்று உதயணன் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். வாசகர்கள் அதைத் தெரிந்துக் கொள்ள மண்டபங்களின் பெயரை கீழே தருகிறேன்.

அர்த்த மண்டபம், ஸ்தபன மண்டபம், மகா மண்டபம், திருத்த மண்டபம், வாத்ய மண்டபம், சோபானா மண்டபம், ஆஸ்தான மண்டபம், யாக மண்டபம், புஷ்ப மண்டபம், பூஜா மண்டபம், உத்யான மண்டபம், ஜலக்கிரீடை மண்டபம், சுவண்ண மண்டபம், அபிஷேக மண்டபம், அலங்கார மண்டபம், வசந்த மண்டபம், உபசாரம் மண்டபம், பீடாரோகண மண்டபம், அத்யயன மண்டபம், ஆகம மண்டபம், புராண மண்டபம், தீஷா மண்டபம், துவஜாரோகண மண்டபம், விஜய மண்டபம் என 24 மண்டபங்கள் அமைந்திருக்க வேண்டியது ஒரு ஆலயத்தின் மரபு.

அதேபோல 28 சிவஆகமங்களின் படி பூஜைகள் நடக்க வேண்டும். அந்த பூஜைகள் காமிகம், யோகஜம்ட, சிந்த்யம், காரணம், அஜிதம், தீப்தம், ஆஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், ஸுப்ரபாதம், விஜயம், நிச்வாஸம், ஸ்வாயம்புவம், அனலம், வீரம் ரௌரவம், மகுடம், விமலம், சந்த்ரக்ஞானம், முகபிம்பம், பிரோத்கீதம், லலிதம், ஸித்தம், ஸந்தனம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்.

நான்கு வரிகளும் ஒரே வரியால் திரும்பத் திரும்ப அமையும் ஏக பாதம் என்ற ஞானசம்பந்த பெருமானின் கீழ்க்கண்ட பாடலை ஆசிரியர் வாசகர்களுக்கு இக்கதையில் ஓர் இடத்தில் அளித்துள்ளார். அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல்,

"பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்"

என நாவல் எங்கும் இன்னும் பல சுவாரசியங்களை வாசகர்களுக்குப் படைத்துள்ளார் எழுத்தாளர் உதயணன் அவர்கள். இப்புதினத்தைப் படைக்க அவருக்கு துணை புரிந்த பல்வேறு நூல்களின் பட்டியலை நூலின் கடைசியில் கொடுத்துள்ளார். இதிலிருந்து அவரின் கடினம் முயற்சியை நாம் தெரிந்து கொள்ளலாம்.  சரித்திர நாவலைப் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்கிறேன்.