வகுப்பறை
வகுப்பறை - பொன். சண்முகசுந்தரம்

வகுப்பறை - பொன். சண்முகசுந்தரம்

கவிதை என்றாலே காதல், நிலா, மலர், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என பல்வேறு வகையான பாடுபொருளைக் கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் முதன் முதலாக வகுப்பறை சார்ந்த கவிதைகளை பொன்.சண்முகசுந்தரம் அவர்கள் படைத்துள்ளார்கள். அதிலும் கவிஞர் அவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத்தமிழ் ஆசிரியர். எனவே மற்றவர்களை விட தன்னுடைய மாணவர்களையும் அவர்கள் செய்யும் சேட்டைகளையும் அவர்களின் மாணவப் பருவ எண்ணங்களையும் செயல்களையும் நன்கு உணர்ந்து அனுபவித்து ரசித்து இந்தக் கவிதைத் தொகுப்பை எழுதி இருக்கிறார்.

மாணவச் செல்வங்கள் பள்ளியில் நுழைவதில் இருந்து அவர்கள் விடுமுறைக் காலம் வரை என முத்தம் 70 தலைப்புகளில் கவிதைகளைப் படைத்துள்ளார். சில கவிதைகள் ஐந்து வரிகளில் முடிந்து விடுகிறது. பல கவிதைகள் சில பக்கங்களில் அமைந்துள்ளன.

படித்து முடித்து வெளியேறி வாழ்வின் கடைசிக் காலங்களில் எதிர்பாராத விதமாக நண்பர்களைச் சந்திக்கின்ற சூழ்நிலை வருகின்ற போதும், அப்போதும் தனது வகுப்பறை நிகழ்வுகளை பலர் பேசி ஆனந்தக் களிப்படைவதும் உண்டு. அப்படிப்பட்ட அந்த வகுப்பறையில் மாணவர்கள் செய்யும் அலப்பறைகள், அவர்களின் தேர்வு, நண்பர்கள், பாடத்திட்டம், கரும்பலகை, தேர்வுத்தாள், ஒழுக்கம், புத்தகம், மதிப்பெண்கள், மாணவர்களின் வெற்றி, தோல்வி, பதின் பருவ விளையாட்டுகள், பென்சில், ரப்பர், மதிய உணவு என பல்வேறு தலைப்புகளில் எழுதி உள்ள கவிதைகள் நம்மை மீண்டும் மாணவப் பருவத்திற்கே அழைத்து செல்கின்றன.  அது மட்டுமில்லாமல் கவிதைகளில் அறிவியல், வேதியியல், உயிரியில், கணிதம் என எல்லாவற்றையும் சுட்டி காட்டியுள்ளார்.

எப்போதும் நாம் நினைத்துக் கொண்டிருப்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று. ஆனால் தன்னை அறிந்த ஒரு ஆசிரியர் மாணவர்களின் கேலியான சில கேள்விகளை உணர்ந்து தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறார். ஆம் மாணவர்களே சில நேரங்களில் ஆசிரியர்களுக்கு ஆசிரியராக இருப்பதும் உண்டு. உதாரணமாக 'ஆசிரியரும் மாணவரும்...' என்ற தலைப்பில் உள்ள கவிதையைச் சொல்லலாம். இந்தக் கவிதை ஆசிரியரும் மாணவரும் பேசுவது போல. இந்தக் கவிதை எழுதுவதற்கு தூண்டுகோல் ஒரு மாணவியே.

கிராமப்புறங்களில் சில நேரங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பொழுது வேண்டாத விருந்தாளியாய் ஆடுகள், நாய்கள் என ஏதாவது ஒன்று வரும். சில நேரங்களில் அழையா விருந்தாளியாய் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பது போல சில நிகழ்ச்சிகள் நடப்பதும் உண்டு. அதில் ஒன்று கீழ்க்கண்ட இக்கவிதை.

வகுப்பறையில்
அனுமதியில்லாமல் நுழையும்
வண்ணத்துப்பூச்சியை ரசிப்பதற்கு
மாணவர்களுக்கு அனுமதி உண்டா?

என்று ஒரு கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்வி, எப்போதும் மாணவர்களிடத்தில் கடினமாய் நடக்கும் ஆசிரியர்களுக்கு என்று நான் நினைக்கிறேன்.

ஆசிரியர்களும் மாணவர்களின் நிலையை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்பதை மற்றொரு கவிதையின் மூலம் குறிப்பிடுகிறார்.

பசியின் மயக்கத்தை எப்படி
புரிய வைப்பது ஆசிரியருக்கு?
நான்காம் பாட வேளை...

பள்ளிகளில் பகுப்பறையில் எப்போதுமே கலகலப்பாக இருப்பது உண்டு. அதுவும் அமைதியாக இருக்கும் வேலையில் ஏதாவது சில நிகழ்வுகள் நடப்பதுண்டு. அதை நாம் மாணவப் பருவத்திலேயே வெட்கம் கலந்த புன்னகையோடும் ஆரவாரத்தோடும் ரசித்தது உண்டு. நானும் என் பள்ளி வாழ்க்கையில் அதை அனுபவித்திருக்கிறேன். அந்தக் கவிதை,

எதார்த்தமாக வரும்
இருமலுக்கும் தும்மலுக்கும்
ஏன் இத்தனை சிரிப்புச் சத்தம்?
வெட்கப் புன்னகையோடு வகுப்பறை...

ஏக்கம் என்ற ஒரு கவிதை மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் ஏங்கும் வகையில் ஒரு கவிதை படைத்துள்ளார். அது எல்லா காலத்திலும் எல்லா ஆசிரியர்களும் இருக்க கூடிய ஒரு விசித்திரமான நிகழ்வுதான்.

மாணவர்கள் செய்யும் குறும்புத்தனத்தையும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் மட்டும் கவிபாடாமல் அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் செய்ய வேண்டிய நல்லன பற்றியும் சில கவிதைப் பாடுகிறார். உதாரணமாக,

படிப்பதில் விடாபிடியாய்
தொங்கினால் சரி
பேருந்து படியினில்
தொங்கினால்
பயணம்? 

என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதைப்போல இன்னும் பல கவிதைகள் அவர்கள் வாழ்வாங்கு வாழ வகை செய்யும் வகையில் பாடப்பட்டிருக்கின்றன.

மாணவர்கள் எப்போதுமே இளம் பருவத்தில் பள்ளி செல்வதை கஷ்டமாகவும் சலிப்பாகவும் நினைப்பதுண்டு. ஆனால் நண்பர்களை பார்த்து பின்பு அது ஒரு விளையாட்டாய் மாறி சூழ்நிலையை ஆற்றுப்படுத்தும். இவற்றிலும் மாணவர்களுக்கு கடினமான ஒன்று எது எனில் அது முதல் பாடவேளை. இதனை கடினம் என்ற கவிதையில் குறிப்பிடுகிறார்.

கடினம் கடினம்
திங்கட்காலை
முதல் பாடவேளை
மிகக் கடினம்...

உண்மை தானே. அலுவலகம் செல்வர்களுக்கும் திங்கட்கிழமை என்றாலே ஒருவித சலிப்பு தான்.

இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த இன்னும் இரண்டு கவிதைகள் நண்பன்...(15), கரும்பலகை...(26). இந்த இரண்டு கவிதைகளும் கவிஞருக்கு உள்ள கூர்ந்த நோக்கை நமக்கு புலப்பட வைக்கிறது. இன்னும் பல கவிதைகள் இருக்கிறது. அதை எல்லாவற்றையும் நான் சொல்வதை விட நீங்கள் வாசித்து அனுபவித்தால் நன்றாக இருக்கும்.

முதல் கவிதையில்,
சின்னச் சின்னச் கதைகள் பேசி
சின்னச் சின்னச் சிரிப்புகளோடு
சின்னச் சின்னச் சிணுங்கல்களோடு
சின்னச் சின்னச் விளையாட்டுகளோடு

என மாணவர்களின் ஆரம்ப வாழ்க்கையை ‌கூறும் கவிஞர் வாழ்க்கையில் மாறாமல் இருப்பது எது எனக் கூறி இவ்வாறு முடிக்கிறார்.

மாறாதது காதலும் ஈர்ப்பும்
மாறாதது அன்பும் நண்பர்களும்
மாறாதது கற்றலும் கற்பித்தலும்
மாறாதது ஆசிரியர் மாணவர் உறவும்...

இது மாணவர்கள் மட்டும் படிக்க வேண்டிய நூல் அல்ல. ஆசிரியர்களும் இந்த நூலைப் படித்த பின் அன்பாய் ஒரு நண்பனாய் மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மாணவர்களும் இக்கவிதையைப் படிப்பின் ஆசிரியர்கள் தங்கள் மேல் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் உணரலாம்.

இப்புத்தகத்தில் உள்ள ஒரு சிறு குறை, பல கவிதைகள் நீண்ட கவிதைகளாக உள்ளன. இது மாணவர்களுக்கு சற்று அயற்சியைத் தரும். கவிஞர் மற்றொரு தொகுப்பில் புதிய முயற்சியாக சிறுசிறு கவிதைகளை கொடுத்தால் இன்னும் பல மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் அர்ப்பணிப்பை உணர்வார்கள். அப்படிப்பட்ட கவிதையைப் படைக்க கூடிய ஆற்றல் ஆசிரியர் பொன்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு இருக்கிறது. மேலும் பல சிறந்த கவிதைப் படைப்புகளை தமிழுக்கு கொண்டு வர வாழ்த்துகளும் பாராட்டுகளும்.