உயிரைக் குடிக்கும் புட்டிநீர்
உயிரைக் குடிக்கும் புட்டிநீர் - நக்கீரன்

உயிரைக் குடிக்கும் புட்டிநீர் - நக்கீரன்

நாம் குடிக்கும் தண்ணீர் நம் உயிரை குடிக்குமா? ஒட்டுமொத்த உலகத்திற்கே அபாயகரமாக மாறுமா? சாதாரணமாக எல்லோரும் சொல்லக்கூடிய பதில் இல்லை. ஆனால் அதை புட்டிகளில் அடைத்து விற்றால் மனித சமூகமே முற்றாக அழிந்து போகக்கூடிய நிலை வரும் என்று சூழலியலாளர் நக்கீரன் அவர்கள் எழுதிய 'உயிரைக் குடிக்கும் புட்டி நீர்' என்ற புத்தகத்தை படித்த பிறகு எனக்குத் தெரிகிறது.

நமக்கு தெரிந்ததெல்லாம் அளவுக்கு அதிகமாக பூமியிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெரியும். ஆனால் அந்த தண்ணீரைப் புட்டியில் அடைத்த பிறகு என்னவெல்லாம் இந்த உலகில் நடக்கின்றன என்பதை இந்த புத்தகம் படித்த பிறகு தான் புரிகிறது.

நக்கீரன் அவர்கள் புத்தகத்தின் முதல் வரியில் எட்டு நொடிகள் எண்ணுங்கள். எண்ணி முடித்த பின் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குழந்தை பாதுகாப்பற்ற குடிநீர் அருந்தியதால் இறந்திருக்கும் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை தருகிறார். இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு ஜனவரி 2015. 10 வருடம் ஆகிவிட்டது இப்போது நிலைமை என்ன என்று தெரியவில்லை.

நக்கீரன் அவர்கள் புத்தகத்தின் முதல் வரியில் எட்டு நொடிகள் எண்ணுங்கள். எண்ணி முடித்த பின் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குழந்தை பாதுகாப்பற்ற குடிநீர் அருந்தியதால் இறந்திருக்கும் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை தருகிறார். இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு ஜனவரி 2015. 10 வருடம் ஆகிவிட்டது இப்போது நிலைமை என்ன என்று தெரியவில்லை.

மேல் நாடுகளில் கொண்டுவரப்பட்ட புட்டிநீர் இந்தியாவில் பல்வேறு விளம்பர உத்திகளால் மக்கள் மனதில் பியூர் என்றும் தூய்மையானது என்றும் செறிவூட்டப்பட்டது என்றும், மினரல் என்றும் நம்ப வைத்து நம்மை வாங்க வைத்தனர். ஆனால் அந்த புட்டிநீரில் எந்த அளவிற்கு தரம் இருக்கிறது என்பதை பார்த்தால் அதில் அதிக அளவிற்கு பல்வேறு வகையான வேதிப்பொருள்கள் உள்ளன என்பதே. உதாரணமாக அக்வாஃபினாவின் நீரில் 13 மடங்கு அதிகமாக டைமெத்தோட்(Dimethoate) இருந்தது என்றும் கின்லே புட்டிநீரில் ஆர்கனோபாஸ்பரஸ், ஆர்கனோகுளோரின் இரண்டும் சேர்ந்து 0.0005மி.கி.லிக்கு மேல் இருக்கக் கூடாது என்ற நெறிமுறையை மீறி 0.0073மி.கி.லி இருந்ததையும் பிஸ்லேரியில் 400 மடங்கு மாலத்தியான் பூச்சிக்கொல்லி இருந்ததையும் சுட்டிக்காட்டி உள்ளார்  மேற்கண்டவைகள் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

இது இந்திய பிரச்சினை மட்டுமல்ல என்றும் உலகளாவியது என்றும் அமெரிக்காவிலும் ஃபிஜி புட்டிநீரில் 40 மடங்கு பாக்டீரியாவும் லிட்டருக்கு 6 மைக்ரோகிராம் அளவுக்கு ஆர்சனிக் நஞ்சும் இருந்தன என்றும் அங்கும் சில இடங்களில் புட்டிநீருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் அமெரிக்காவை  கை காட்டும் நாம் அங்கேயே இந்த நிலை எனில் வளரும் நாடான இந்தியாவில் நமது நிலை என்ன என்பதை நாம் தான் சிந்திக்க வேண்டும்.

ஏன் புட்டிநீர் வாங்குகிறார்கள்? என்று அலசும் போது புட்டிநீர் வாங்குவது பணக்காரத்தனத்தின் அடையாளமாகவும் உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரம் காரணமாக நுகர்வு கலாச்சாரம் மூன்றாவது மக்களிடம் தாராளமாக புழங்கும் பணப்புழக்கம்(20.00 தானே) நான்காவது இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறியாமை.

சரி இதற்கெல்லாம் தீர்வு என்ன? அந்தத் தீர்வையும் ஆசிரியர் நக்கீரன் அவர்கள் கொடுக்கிறார். அது நாம் சிறுவயதில் பிடித்து குடித்து வாழ்ந்த குழாய் நீரை பயன்படுத்துதல் அல்லது வீட்டில் இருந்து வெளியே பயணிக்கும் போது குடிநீரை கையில் கொண்டு செல்லுதல்.

நாம் ஒரு புட்டிநீரை வாங்கும்போது அதனால் ஏற்படும் கண்ணுக்குத் தெரிந்த தெரியாத பல்வேறு பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனை நாம் இவ்வாறு வகைப்படுத்தலாம்.

1. புட்டிநீரில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்களால் மனிதனுக்கு ஏற்படும் கேன்சர் உட்பட பல்வேறு உபாதைகள்.
2. தூக்கி எறியப்படும் காலி ஞெகிழி புட்டிகளால் உருவாகும் குப்பை மேடுகள்.
3. ஒரு லிட்டர் குட்டி நீரை உருவாக்க தேவைப்படும் ஆறு லிட்டர் மறைநீர்.
4. சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது தேவைக்கு அதிகமாகவோ நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்புகள்.
5. பயன்படுத்தி தூக்கி எறிவதால் சுயநலமிக்க ஒரு தலைமுறையை உருவாக்குதல்.
6. புட்டிநீரை உற்பத்தி செய்து இறுதியாக வெவ்வேறு இடங்களுக்கு நாம் அனுப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள் ( உதாரணமாக அதிக அளவில் பெட்ரோல் பயன்பாடு மற்றும் வாகன நெரிசல்).

மேலும் மக்கள் ஒரு புட்டிநீரை வாங்கும்போது அதனால் ஏற்படும் அபாயகரங்களை யோசித்துப் பார்த்து அரசை குறை கூறுவதை விட்டு விட்டு நம்மில் இருந்து இந்த மாற்றத்தை கொண்டு வரலாம். சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்கள் மட்டுமல்ல எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய படித்துப் பயன் பெற வேண்டிய ஒரு அருமையான புத்தகம் இந்த "உயிர் குடிக்கும் புட்டிநீர்.

ஆசிரியர் மேம்போக்காக கூறாமல் இதற்கு ஆதாரமாக பல்வேறு தரவுகள், நூல்கள், அறிக்கைகள், சஞ்சிகைகள், இணையதளங்களைப் பற்றி புத்தகத்தின் இறுதியில் சேர்த்திருப்பது கூடுதல் செய்தி.