A few words about item

இளைய சமுதாயம் எழுகவே!

கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னை புதுக் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் சென்னை ரிசர்வ் வங்கி தமிழ் மன்றம் ஆகிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள்இளைய சமுதாயம் எழுகவேஎனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

இதில் புதுக்கல்லூரி விழாவில் மார்ச் 201,1986 அன்றுசமுதாய மறுமலர்ச்சிஎன்ற தலைப்பிலும், ஏப்ரல் 15, 1986-இல் தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில்புள்ளிகள்என்ற தலைப்பிலும், ஏப்ரல் 18, 1986 அன்று ரிசர்வ் வங்கி தமிழ் மன்றம் நடத்திய பாரதிதாசன் பிறந்த நாள் விழாவிலும் உரையாற்றியுள்ளார்.

சமுதாய மறுமலர்ச்சி என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் பேசும் பொழுதுஅரசியலானாலும் பொருளாதாரமானாலும் இவை இரண்டும் நிலைபெற - ஒளிவிட, மக்கள் நல்வாழ்வு பெற பொருளாதாரத்தின் அடிப்படையில் கூறுகின்ற வாழ்வு செம்மையான வாழ்வாக அமைய, அரசியல் ரீதியாக கிடைக்கின்ற விடுதலை-சுதந்திரம் அல்லது ஆட்சி இவைகள் எல்லாம் எல்லாங்கூட ஒழுங்குற நடைபெற, சமுதாய மறுமலர்ச்சி நிச்சயம் இருந்தே தீரவேண்டும்என்கிறார்.

மேலும்சமுதாயம் செப்பனிடப்படாமல் என்னதான் பொருளாதார மாற்றம் ஏற்பட்டாலும், அரசியலிலே பெறுகின்ற வெற்றிகள் கிடைத்தாலும் அது நிலைத்து நிற்க முடியாதுஎன்றும் கூறுகிறார்.

புள்ளிகள்என்னும் தலைப்பில் பேசும்பொழுது, புள்ளிகள் என்பதற்கு வேறு பொருளும் உண்டு என்று கூறுகிறார். அவை

முற்றுப்புள்ளி, மெய்யெழுத்து, இமயம், நண்டு, பல்லி ஆகியன.

நண்டு என்ற சொல் ஐங்குறுநூறு என்ற சங்க இலக்கியத்தில் புள்ளி என்ற பெயரிலும், பல்லி என்ற சொல் குறுந்தொகையில் புள்ளி என்றும் வருகிறது என்று கூறுகிறார். மேலும் ஊரிலே அவர்பெரும்புள்ளிஎன்று கூறுவார்கள்.

இச்சொல்லை வைத்து கலைஞர் அவர்கள் விஞ்ஞானத் துறை, அரசியல் துறை, எழுத்துத் துறை மற்றும் தத்துவத் துறைகளில் இருந்த பெரிய புள்ளிகளான ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, மாக்செல்லஸ், ஐசக் நியூட்டன், கிரகாம்பெல், நெப்போலியன், சேரன் செங்குட்டுவன், புத்தர், சாக்ரடீஸ், காரல் மார்க்ஸின் மனைவியான ஜென்னி மார்க்ஸ் மற்றும் வரலாற்றில் கரும்புள்ளிகளான ஹிட்லர், முசோலினி ஆகியோரைப் பற்றியும் கூறுகிறார்.

சென்னை ரிசர்வ் வங்கி தமிழ் மன்றம் நடத்திய பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் கலைஞர் அவர்கள், “யாதும் ஊரே; யாவரும் கேளிர்என்று பாடிய கணியன் பூங்குன்றனார் அவர்கள் முகவை மாவட்டத்தில் மகிபாலன்பட்டி என்று இன்றைக்கு அழைக்கப்படுகிற பூங்குன்றம் என்று அந்த காலத்தில் அழைக்கப்பட்ட ஊரில் பிறந்தவர் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் இக்கூட்டத்தில் அவர், “தமிழ், தமிழன், தமிழினம் என்று பேசினாலும்- இவைகளெல்லாம் குறுகிய நோக்கம்- மாநில பற்று- பிராந்தியப் பித்து என்றெல்லாம் சில பேர் பேசி, தேசிய நீரோட்டத்தில் கருணாநிதியைப் போன்றவர்களெல்லாம் இன்னும் கலக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.என்னைப் பார்த்து ஒருவன், “நீ யார்?” என்று கேட்டால், “நான் தமிழன்என்று சொல்லுவேன்.வெளிநாட்டிலே ஒருவன் என்னைப் பார்த்து நீ யார் என்று கேட்டால்,“நான் நாட்டால் இந்தியன்; தேசிய இனத்தால் மொழியால் தமிழன்என்று சொல்லுவேன். மறுபடியும்நீ யார்? சரியாக சொல்என்று கேட்டால் நான் நாட்டால் இந்தியன்; மொழியால் தமிழன்என்று சொல்லுவேன். இரண்டில் ஒன்றைத்தான் சொல்லவேண்டுமென்று யார் கேட்டாலும்நான் தமிழன்என்ற ஒன்றைத்தான் சொல்லுவேன்என்கிறார்.

மேலும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 60 ஆண்டுகள் என்கிற தமிழ் வருடங்கள் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருதப் பெயர் உள்ள வருடங்களை நான் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்.

பாரதிதாசனின் நூல் ஒன்றுக்கு முத்தமிழ் காவலர் கி பெ விசுவநாதம் அவர்கள் அளித்த ஒரு அணிந்துரையில், “கவிதைக்காக ஒரு முறை படித்தேன். அழகுக்காக ஒரு முறை படித்தேன். உவமைக்காக ஒரு முறை படித்தேன். கதைக்காக ஒரு முறை படித்தேன். எழுத்தின் எளிமைக்காக ஒரு முறை படித்தேன். ஒவ்வொரு முறையும் அது படித்தேனாகவே சுவைக்கிறதுஎன்று பாரதிதாசனைப் பாராட்டியதாக கலைஞர் கூறுகிறார்.

மேலும் லிபியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து லிபியாவுக்காக கண்ணீர் விடுகின்றவர்கள் - வாதாடுகிறவர்கள் பக்கத்திலே இலங்கைத் தமிழ் மக்களுக்காகவும் வாதாட வேண்டும் என்று கோரி அந்த தமிழினத்தைக் காப்பாற்றுகின்ற உணர்வு நமக்கு ஏற்பட வேண்டும் என்று தனது உரையை முடிக்கிறார்.

Total Number of visitors: 9

No of users in online: 6