A few words about item

மொழிப்போரில் ஒரு களம்! - கலைஞர்

"மொழிப்போரில் ஒரு களம்!" என்ற நூலானது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட ஒரு நீண்ட மடல். இது 48 பக்கங்களைக் கொண்டது. இப்புத்தகத்தின் முதல் பதிப்பு ஜூன் 2002 அன்று திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1937-ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் இந்தி கட்டாயப் பாடம் என்று அறிவித்தார். இதனை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள் ஆகியோர் எதிர்த்தனர். மேலும்  தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்தன. இந்த மொழிப்போரில் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் உயிர் நீத்தனர். மக்கள் போராட்டங்களால் 1939-இல் ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. பின்னர் 1940-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது. இது முதல் கட்டம்.

1948-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மீண்டும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இந்தி கட்டாயம் என்று உத்தரவிட்டது. மீண்டும் தமிழகம் போராட்டத்தை முன்னெடுத்தது. இதன் எதிரொலியாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அந்த உத்தரவை திரும்ப பெற்றார். இது இந்தி திணிப்பின் இரண்டாவது கட்டம்.

1965 ஜனவரி 26 ஆம் நாள் முதல் இந்தி ஆட்சி மொழியாக அரியாசனம் ஏறும் என்று லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக கொண்ட அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. இது மூன்றாவது இந்தி திணிப்பு போராட்டம்.

இக்காலகட்டத்தில் தான் கலைஞர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்கிறார். மேலும் அப்போதைய முதலமைச்சராக இருந்தவர் காங்கிரசைச் சேர்ந்த பக்தவச்சலம்.

இந்த இந்தி திணிப்பைக் கலைஞர் அவர்கள், "ஜனவரி 26, குடியரசு நாளா? அல்லது தமிழரின் குடி கெடுக்கும் நாளா?" என்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இதனை கட்சியின் சிலரே தன்(கலைஞர்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாக எழுதி உள்ளார். ஆனால் 1965, ஜனவரி 8இல் கூடிய‌ கட்சியின் செயற்குழு ஜனவரி 26ஆம் நாள்  துக்க நாள் என்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டப்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் தமிழக மாணவர்களும் ஜனவரி 25ஆம் நாள் அன்று ஊர்வலங்கள் நடத்தியுள்ளனர். மதுரையில் நடந்த ஊர்வலத்தில் மாணவர்களை காங்கிரஸ் கட்சியினர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப்  பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றதாகவும் பின்னர் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்ததாகவும் எழுதியுள்ள கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் மட்டுமின்றி மேற்குவங்கம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்திலும் மாணவர்கள் மூலம் பரவியதாக எழுதியுள்ளார்.

மாணவர்களின் கிளர்ச்சி மற்றும், வன்முறைகள் அடங்கிய பிறகு பிப்ரவரி 16 இரவு அன்று கலைஞர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில்  அடைக்கப்படுகிறார். அப்போது அவரிடம் காட்டப்பட்ட உத்தரவில் அவர் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக எழுதியுள்ளார். ஆனால் பாளையங்கோட்டையில் மத்திய சிறைச்சாலை கிடையாது என்றும் அந்த விபரம் கூட தெரியாத ஒரு சர்க்காரும் அதற்கென்று ஒரு இலாகாவும் இருந்ததாக கூறி இதற்காக சிரிப்பதா அழுவதா என்று எழுதியுள்ளார்.

கலைஞர் அவர்களை பாளையங்கோட்டை சிறையில் அறிஞர் அண்ணா அவர்கள் பார்த்த பின் அன்று மாலையில் நடைபெற்ற திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில்,

"என் தம்பி கருணாநிதியைப் பார்த்து விட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று  சொன்னார்கள். தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்குக் கொடியவரல்ல பக்தவச்சலம். பாம்பும், பூரானும் நெளிகிற பாழ் சிறையில்தான் கருணாநிதியைப் பூட்டி வைத்திருக்கிறார்" என்று பேசியுள்ளார்.

கலைஞர் அவர்கள், "இந்தி திணிப்பை ஏன் எதிர்க்கிறேன்"? என்று கடிதத்தின் ஆரம்பத்திலேயே கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"14 மாநில ஆட்சி மொழிகள் அல்லது தேசிய மொழிகள் இருக்கும் போது; ஒரே ஒரு மொழியினை மட்டும் ஆட்சி மொழியாகக் கிரீடம் சூட்டுவது மற்ற மொழிக்காரர்களின் குடியுரிமை அந்தஸ்தைப் பின்னுக்குத் தள்ளி, அவர்களது அரசியல் துறை, வாணிபத் துறை, கலைத் துறை, இலக்கியத் துறை, தொழில் துறை முன்னேற்றங்களையெல்லாம் பெருமளவுக்குத் தடுத்து நிறுத்தி சீரழித்து விடுகிற செயலாகும்" என்று குறிப்பிடுகிறார்.

கலைஞரின் இந்த மடலில் இருந்து சில நிகழ்ச்சிகள் தெரிகின்றன. அவை,

1. 3-வது இந்தி எதிர்ப்பு காலகட்டத்தில், ராஜாஜி அவர்களும் கூட திமுகவுடன் சேர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து உள்ளார்.

2. கலைஞர் அவர்களை இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நாவலர் கண்டன அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. (அந்நேரத்தில் கலைஞர் அவர்கள் திமுகவின் பொருளாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமாகவும் இருந்துள்ளார்)

3. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் உள்துறை அமைச்சர் நந்தா ஆகியோர்  திமுகவின் மீது கடுமை காட்டியுள்ளனர்.

4. காமராசர் அவர்களும், "இந்தியில் கடிதம் வந்தால் கிழித்து போடுவோம்" என்று கூறியதாக ஓரிடத்தில் எழுதியுள்ளார்.

5. தமிழகத்தைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம் மற்றும் அழகேசன் ஆகியோர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

6. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த முதலமைச்சர் பக்தவச்சலம் ராணுவத்தை வரவழைத்துள்ளார்.

7. கலைஞர் அவர்கள் 62 நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் தனிமைக் கொட்டடியில் இருந்தபோது தான் இம்மடலை "அன்புள்ள நண்ப" என்று விளித்து எழுதியுள்ளார்.

இந்நூலில் முன்னுரை, உள்ளடக்கம் மற்றும் கலைஞர் அவர்களின் என்னுரை என எதுவுமில்லாமல் வந்துள்ளது.

Total Number of visitors: 3

No of users in online: 3