A few words about item

கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் "தாய்" காவியம்

மாக்ஸிம் கார்க்கி. இரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் எழுதிய புகழ்பெற்ற நூல் "தாய்". இரஷ்யாவில் ஜார் மன்னரின் செயின்ட் பீட்டர்ஸ் பார்க் நோக்கி 2000 பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்ற போது ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களைச் சுட்டது. அதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தப்பியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இரஷ்யப் புரட்சியாளர் லெனினின் தொடர்பு கார்க்கிக்கு ஏற்பட்டது. லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டது தான் உலகப் புகழ் பெற்ற நாவல் "தாய்".

கலைஞர் அவர்கள் இந்த நூலுக்கு கவிதை நடையில் காவியம் படைத்துள்ளார். மொத்தம் 383 பக்கங்களில் 51 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் 10 நாளில் கலைஞர் அவர்களால் எழுதப்பட்டதாகும். நூலுக்கு அணிந்துரை என் சங்கரய்யா அவர்கள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்))மற்றும் அணிந்துரை ஆர்.நல்லகண்ணு அவர்கள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி). இந்த தாய் நாவல் கவிதை வடிவில் குங்குமம் இதழில் தொடராக வெளியிடப்பட்டு வந்தது. சிறையில் இருக்கும் போது திரும்பத் திரும்ப தவறாமல் படிக்கும் நாவல் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். மேலும் ஒரு பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த நூல் "தாய்" நாவல் என்றே கூறுகிறார் கலைஞர் அவர்கள்.

தொழிற்சாலை ஒன்றில் சிறந்த தொழிலாளியாக, மிகுந்த பலசாலியாக, முரட்டுத்தனத்தின் முழு வடிவமாக மற்றும் குடிகாரனக இருப்பவன் மைக்கேல். அவனது மனைவி நிலோவ்னா. இவர்களது மகன் பாவேல். தன் மனைவி மற்றும் மகனை தொல்லைக்குட்படுத்தும் மைக்கேல் ஒரு நாள் இறந்து போகிறான். பின்னர் பாவெல் வேறு ஒருபாதைக்குச் செல்கிறான். ஆம்,  தொழிற்சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்படுவதுடன் உழைப்பாளர்களின் சுரண்டலை எதிர்த்து உரிமைக்கு குரல் கொடுக்கிறான். இதனைக் கண்டு தாய் நிலோவ்னா கவலையும் பயமும் கொள்கிறாள். மகன் ஆபத்துடன் விளையாடுவது கண்டு கண்ணீர் வடிக்கிறார். கலைஞர் இதனை இவ்வாறு கவிதை படைக்கிறார்.

"மகனே!" என்று அவனை மடிமீது இழுத்துப் போட்டு
மாறி மாறி உச்சியிலும் நெற்றியிலும் முத்தமிட்டாள்.....

கண்களை மெல்ல மூடியிருந்த அவன் கன்னத்தில்
காம்பில்லா மல்லிகை மொட்டொன்று இருந்தது விழுந்தது
கண்ணீர்த் துளிக்குக் காம்பில்லை அல்லவா?

இரவு நேரங்களில் பாவெல் நண்பர்கள் இரவு நேரங்களில் சிலர் வீடு தேடி வந்து  ஒன்று கூடுகிறார்கள். இவர்கள் அங்குள்ள தொழிற்சாலைக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராட முனைகின்றனர். துண்டறிக்கையும் அந்த ஆலைக்கு எதிராய் வெளிப்படுகிறது.

அரசாங்க அதிகாரிகள் பாவெல் வீட்டை சோதனை போடப் போகிறார்கள் என்று செய்தி கேட்டவுடன் பாவெல் அன்னை புத்தகங்களையும் துண்டறிக்கைகளையும் ஒழித்து வைக்கிறாள். மேலும் பாவெல் நண்பன் தாய் நிலோவ்னா இடம் கூறுவதாக கீழ்க்கண்ட கவிதை வரிகளை எழுதுகிறார்.

"பொதுப்பணிக்கு வந்து விட்டால்
மாலைக்கு மட்டுமே என் கழுத்து நீளும் என்று கூறி
சிறையென்றால், அங்கு சிரமம் என்றால்
பொந்து தேடி ஓடுகின்ற எலியாக இருக்க முடியுமா?
புதர் விட்டுக் கிளம்பிச் சுடர் முகம் தூக்கி
இடர் நீக்க எழுந்திடும் புலிகளம்மா நாங்கள்?

இதற்கிடையில் பாவெல் இடம் ஆலோசனை கேட்க பலர் வருகின்றனர். அதனைக் கண்டு தாய் அவனிடம், "அறவழியில், அமைதி வழியில் உன் அணுகுமுறை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" எனக் கூறி, எனக்கேதேனும் எடுபிடி வேலையாவது கொடு. என் பிள்ளை படைக்கும் வரலாற்று எட்டில் ஏதோ ஒரு எழுத்தாக இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறுகிறாள். இதன் மூலம் தனது மகன் பாவெல் செல்லும் பாதை சரியானதே என்று அவளும் அந்த பாதைக்கு திரும்புகிறார்.வெலும் தன் தாயிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறான். அதனைக் கண்டு நிலோவ்னா இவ்வாறு கூறுகிறாள்.

"அன்புக் கண்னே ஆலயத்தில்
ஆயிரம் மெழுகு வத்திக்கிடையே
அடியேனும் ஆண்டவனுக்கு ஒரு வத்தி
கொளுத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்ததுபோல்

அறப்போர் நடத்தப் போகும் நீ
அதற்கு ஆரம்ப விழா நடத்தும்
அரிய பொறுப்பை உன் அன்னைக்கே
அளித்து விட்டாய் - நன்றி மகனே நன்றி!"

அரசு அதிகாரிகள் 'பாவெல்'லையும் கைது செய்கிறார்கள். துண்டறிக்கைகளை யார் வெளியிடுவது என்று பாவேல் நண்பர்கள் விவாதிக்கின்றனர். நிலோவ்னா என்னிடம் ஒப்படையுங்கள் என்கிறார். அப்போது நடைபெறும் உரையாடல்.

"வஞ்சின முரைக்கிறாய் சரி;
வயதாகி விட்டதே அம்மா!"

"ஈகோர்! இதைக் கேள்;
வயதான தேக்கு மரத்துக்கே
வலிமை அதிகம்!"

"திறமையுடன் செயல்பட
வேண்டிய விஷயமாயிற்றே?"
"செயல் மூலம் வெளிப்படுவது தான்
திறமை - அதைப் புரிந்து கொள்ள தேவை

பொறுமை"

"சிக்கிக் கொண்டால் ஆபத்து!"
"சிரிக்கும்போது கூட
சிலருக்கு உயிர் போய்விடுகிறது;
சிக்கிக் கொண்டால்
சிரித்துக் கொண்டே சாவதற்கும்
நான் தயார்!"

ஆம் இப்போது தாய் நிலோவ்னா துண்டறிக்கைகளை தன் உடைகளில் மறைத்து வைத்துக் கொண்டு ஆங்காங்கே விநியோகிக்கிறார். இதற்கிடையில் பாவெல் விடுதலை ஆகிறான். மேலும் மே தின விழாவும் வருகிறது. தோழர்கள் இதை எவ்வாறு நடத்துவது என்று அமர்ந்து பேசுகிறார்கள். ஊர்வலத்தில் தலைமை ஏற்று கொடி பிடித்து செல்வது பாவெல் என்றும் முடிவாகிறது. காவலர்களின் கெடுபிடியும் அதிகம் ஆகிறது. தாயும் புறப்படுவதாகக் கூற எங்கே? என்று பாவெல் மற்றும் அவனது நண்பன் ஆண்ட்ரி கேட்க தாய் நிலோவ்னா இவ்வாறு கூறுகிறாள்.

"புலியிருந்த குகை என் வயிறு! குகை, புலியின் கூடவே வருகிறது!"

ஊர்வலத்துக்கு தடை விதித்தவுடன் காவலர்கள் எல்லோரையும் கைது செய்கிறார்கள். தாய் நிலோவ்னாவை வீட்டில் வைத்து சோதனை செய்கிறார்கள். அப்போது தாய் நிலோவ்னாவை சோதனை செய்த "மேரியா" என்ற பெண்ணிற்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் உரையாடல் இதோ.

"என்ன மேரியா எதையாவது
இவள் மறைத்து வைத்திருக்கிறாளா?"

"ஆம்; எஜமான்
அதைக் கொடுக்க மறுத்து விட்டாள்;
என்னாலும் எடுக்க முடியவில்லை!"
"என்ன அது?"

"உம்மிடம் இல்லாதது!"

"அப்படின்னா?"
"இதயம் எஜமான்; இதயம்!"

மீண்டும் தாய் நிலோவ்னா விவசாய பெருங்குடி மக்களுக்கும், தொழிலாளர் வர்க்கங்களுக்கும் சேர்ந்து பாடுபடுகிறார். அவ்வப்போது அதிகார வர்க்கங்களுக்கு எதிராக துண்டறிக்கைகளை பாவெல் நண்பர்கள் உதவியுடன் விநியோகிக்கிறார். இதற்கிடையில் பாவெல் மற்றும் அவன் நண்பர்கள் வழக்கு விசாரணை ஆரம்பமாகிறது. முடிவில் எல்லோரும் நாடு கடத்தப்படுகின்றனர். நீதிமன்றத்தில் பாவெல் பேசிய பேச்சுக்கள் அச்சிடப்பட்டு மாஸ்கோ வரையில் இரயிலில் சென்று விநியோகிக்க தாய் புறப்படுகிறார். ரயில் நிலையத்தில் வைத்து காவலர்களால் தாய் தாக்கப்படுகிறார். அப்போது இயக்கத்தின் நண்பன் தாயை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து செல்கிறான். அப்பொழுது கலைஞர் இவ்வாறு எழுதி முடிக்கிறார்.

மருத்துவமனையின்
வாசலில் குதிரை வண்டிக்குள்
தாய், மயங்கி கிடக்கிறாள்;
இனிமேல் தான் டாக்டர் ஓடிவந்து பார்த்து
உயிர் இருக்கிறதா; இல்லையா என்று சொல்ல வேண்டும்!
இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும்
இறவாத அந்தத் தாய் வாழ்க!

Total Number of visitors: 10

No of users in online: 9