A few words about item

சிந்தனையும் செயலும்

கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏப்ரல் 2005 முதல் அக்டோபர் 2005 வரை எழுதிய கட்டுரைகள் சிந்தனையும் செயலும் என்ற தலைப்பில் புத்தகமாக பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தில் 50 கட்டுரைகள் வாழ்வியல் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. உதாரணமாக சில கட்டுரைகளின் தலைப்புகள், அதிக உயரம் தாண்டுவதற்கு, வெற்றி - தோல்வி!, வலிவும், பொலிவும்!, இன்பமும் துன்பமும், ஒழுக்கம், தன்னை வெல்வான், தியானம்?, தீக்குச்சி தேடாதீர்!, சிந்தனை செய் மனமே ஆகியன.

குருகுலம் என்ற கட்டுரையில், 'குருகுலம்' என்பது பழைய பாணி எனத் தோன்றினாலும்; நம்மை 'அறிவாயுத பாணி' களாக ஆக்கவல்ல சிறப்புப் பயிற்சி தரக்கூடியதாகும்; என்று கூறுகிறார். மேலும் அதற்கு உதாரணமாக அவர் பெரியார், அண்ணா என இருவரிடமும் பகுத்தறிவு மற்றும் இனமான உணர்வு பாடத்தை பயிலும் போது இருவரும் இருவிதமாகச் சொல்லிக் கொடுத்தார்கள் என்று கூறுகிறார்.

மனிதனின் மறுபக்கம் என்ற கட்டுரையில் "குணமும் அறிவும் கூட்டு சேரக் கூடியவை. நல்லறிவும் நற்குணமும் கூட்டு சேர்ந்திடின் அந்த மனிதனின் மறுபக்கத்தில் "மாசு" மிகக் குறைவாகவே காணப்படும். அதுவும் எளிதில் அகன்று விடக்கூடும்." என்றும் 'அழுக்காறு' என்ற கட்டுரையில் பொறாமைக் குணம் கொண்டவர்களை வீழ்த்துவதற்கு வேறு பகையே வேண்டா; அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்! என்றும் பிறர்க்கு வரும் நலமும், வளமும், புகழும், பாராட்டும், அனைத்தும் நமக்கு வந்ததாகக் கருதி மகிழ்வதே; அக்கொள்ளை நோய் நம் எல்லைப் பக்கமே எட்டிப்பார்க்க முடியாத தடுப்பு முறையாக அமையும் என்றும் கூறுகிறார்.

"வெற்றி-தோல்வி" என்ற கட்டுரையில், அரசியல், சமுதாய, பொது வாழ்வில் ஈடுபடுவோர் எவராயினும்; அவர்கள் எப்படியாவது தமது குறிக்கோளில் வெற்றிபெற வேண்டும் எனக் குறுக்கு வழி தேடாமல் - மான உணர்வு மங்காமல் பெறுகின்ற தோல்வியும்; விழுப்புண் பெற்று அடைகின்ற வீழ்ச்சியும்கூட வெற்றிப் பட்டியலில் தான் வைக்கப்படும் என மன நிறைவு கொள்ள வேண்டும். அந்த உண்மைக்கு ஒரு நாள் உயர்வு உண்டு; உறுதியாக உண்டு! என்கிறார்.

வாழ்வுக்கு வலிவும் பொலிவும் சேர்க்கக் கூடியவைகளாக உள்ள நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி, தியானப் பயிற்சிகளை பற்றி 'வலிவும், பொலிவும்' என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளார். அதேபோல் 'தியானம்???' என்ற கட்டுரையில், திரு வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'உண்மை' இதழில் "சாமியார்கள் சொல்லித் தருவது தியானமா?" என்ற கட்டுரையில் சில கருத்துக்கள் குழப்பத்தில் ஆழ்த்துவனவாக அமைந்துவிட்டதை சுட்டிக்காட்டி தியானத்தை பற்றி தன் கருத்துக்களை கருணாநிதி சுட்டிக்காட்டி உள்ளார்.

திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களின் "ஹிட்லர் - முதல் உலகப்போர்" எனும் புத்தகத்திலிருந்து கலைஞர் அவர்கள் சில பகுதிகளை "இட்லர்" என்ற கட்டுரையிலும், தென் ஆப்பிரிக்காவில் கருப்பரையினை விடுதலைக்காக வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நெல்சன் மண்டேலாவை பற்றி மண்டேலா என்ற கட்டுரையும் எடுத்து உள்ளார்

'வலி அறிவிக்கும் வாயில்லா மொழி!' மற்றும் 'வருமுன் காப்பதா? வந்தபின் காப்பதா?' ஆகிய இருகட்டுரைகளும் இயற்கையை மனிதர்கள் பாடுபடுத்துவதையும், பாழ்படுத்துவதையும் பற்றி எழுதுகிறார். மேலும் அமெரிக்க அறிவியல் அறிஞர் ஒய்ட் போர்டு என்பார்; உலகில் அணு ஆயுத பரிசோதனைக்கு முன்பும் பின்பும் எனக் கணக்கிட்டு 1950க்கு முன்பு; ஆண்டுக்கு சராசரி 68 முறை நில அதிர்வுகள் என்றும், 1950க்குப் பிறகு ஆண்டுக்கு சராசரி 127 முறை நில அதிர்வுகள் என்றும் - அதிர்வு அளவும் 5.8 ரிக்டர் என இருந்தது அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளதாக எழுதியுள்ளார்.

கலைஞர் அவர்கள் புதினம், சிறுகதை, குறுநாவல், கவிதை, நாடகம், பயணம், சுயசரிதை, கடிதம், மொழிபெயர்ப்பு (மாக்ஸிம் கார்க்கியின் தாய்) முதலியவற்றில் முத்திரைப்பதித்ததோடு மட்டுமல்லாமல் "சிந்தனையும் செயலும்" என்ற புத்தகத்தின் மூலம் வாழ்வியல் கட்டுரையும் எழுதி உள்ளார்.

Total Number of visitors: 88

No of users in online: 85