A few words about item

நிலம் பூத்து மலர்ந்த நாள்

முதலில் "நிலம் பூத்து மலர்ந்த நாள்" நூலை எழுதிய மனோஜ் குரூர் அவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கும் தமிழர்கள் நன்றியும் பாராட்டும் சொல்ல கடமைப்பட்டவர்கள். காரணம் இருவருமே மலையாள தேசத்தை சேர்ந்தவர்கள். இந்த புத்தகத்தின் கரு அல்லது கதைக்களத்திற்குத் தான் இந்த நன்றியும் பாராட்டும். ஆம். இந்த புத்தகத்தின் கதை மாந்தர்கள் தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ளவர்கள். தமிழர்கள், தமிழ் எழுத்தாளர்கள் செய்ய வேண்டிய மிகப் பெரும் பணியை மலையாள எழுத்தாளர் ஒருவர் சங்க இலக்கியத்தை அறிந்த தமிழ் பேராசிரியர் போல் இக்கதையை படைத்துள்ளார்.

சங்க இலக்கியத்தில் நாம் படித்த, அறிந்த பாணர்கள், பரணர், பாரி, கபிலர் ஏன் ஔவையும் கூட இந்த நாவலில் வந்து செல்கிறார்கள். கதையானது மூன்று பகுதிகளாக வந்துள்ளது. 

முதல் பகுதி எட்டு அத்தியாயங்களையும் இரண்டாம் பகுதி 11 அத்தியாயங்களையும் மூன்றாம் பகுதியில் ஒன்பது அத்தியாயங்களையும் கொண்டு ஒவ்வொரு அத்தியாயமும் கொழும்பன் -  சித்திரை - மயிலன் பார்வையில் விரிகிறது.

கொழும்பன் - செல்லக்கிளி பாணர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த  தம்பதிக்கு மயிலன், சித்திரை, உலகன், சீரை என நான்கு பிள்ளைகள். இவர்களில் மயிலன் சிறு வயதிலேயே ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். கொழும்பன் - செல்லக்கிளி மற்றும் இவர்களைச் சார்ந்த பாணர்கள் கூட்டம் ஆடிப்பாடி பிழைப்பவர்கள். ஒரு கட்டத்தில் தங்களது வறுமையைப் போக்கவும் சிறுவயதில் ஊரை விட்டு ஓடிப்போன மயிலனைத் தேடியும் இவர்கள் தங்கள் இடத்தில் இருந்து வேறு இடம் நோக்கி நகர்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு அனுபவங்களை பெறுகிறார்கள். (இந்த அனுபவங்களில் அவர்கள் கண்ட மிக முக்கியமானது பாரியின் கொலை.)

இந்நிலையில் அவர்கள் பரணரை சந்திக்க அவர் தன் நண்பர் கபிலர் மூலமாக வேள் பாரியைச் சந்திக்க சொல்கிறார்.  இவர்கள் பாரியை சந்தித்து அவன் முன் ஆடல், பாடல் மற்றும் கூத்தை தொடங்குகின்றனர். அதே நாளில் மூவேந்தர்களும் வேள் பாரியைக் கொல்ல சதி திட்டம் தீட்டி  சிலரை அனுப்புகின்றனர். ஆடல் பாடல் முடிந்தவுடன் உங்களுக்கு என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் என்கின்றான் வேள்பாரி. அப்போது இவர்களுடன் உடன் வந்த சிலர் "எங்களுக்கு இந்த நாடு வேண்டும்" என்கின்றனர். சதிச்செயல் என்றறிந்த வேள்பாரி அதை தடுக்கும் முன்பே மூவேந்தர்கள் கூட்டத்தால் கொல்லப்படுகிறான். இச்சூழ்நிலையில் கொழும்பனும் காயப்பட்டு இறக்கிறான். இந்த சதிச்செயலில் சிறு வயதில் ஊரை விட்டு ஓடி போன மயிலனும் ஒரு கூட்டாளி. இக்கொலைக்கு தானும் ஒரு காரணமாகிப் போனோம் என்று கபிலர் வடக்கிருந்து உயிர் நீக்குகிறார்.

கொழும்பன் மறைவுக்கு பின் சித்திரை என்ன ஆனாள்? மயிலன் தன் குடும்பத்தை கண்டு கொண்டானா? இறுதியில் மயிலன் என்ன ஆகிறான் என்பதையும் அவன் செய்த வினைகளுக்கு அவன் என்ன ஆகிறான் என்றும் இக்கதையில் ஆசிரியர் விறுவிறுப்பாக  எழுதியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.



 

Total Number of visitors: 89

No of users in online: 86