அறிவரண் தளபதி பொட்டு அம்மான்
அறிவரண் தளபதி பொட்டு அம்மான் - சாந்தி நேசக்கரம்

அறிவரண் தளபதி பொட்டு அம்மான் - சாந்தி நேசக்கரம்

மனசுக்கு நெருக்கமான தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழீழ விடுதலைப் போரில் லட்சியத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கும் முகவர்களுக்கும் சமர்ப்பணம் என்று ஈர வார்த்தையோடும், தமிழின விடுதலைத் தலைவர் மேதகு " வேலுப்பிள்ளை பிரபாகரன்" அவர்களின் குடும்பத்திற்கு வீர வணக்கத்தோடும் தொடங்கும் இந்த நூல், தன்னை உரு பெற வைக்க சுய அனுபவங்களை தந்து உதவிய தளபதிகளுக்கு நன்றியை உரித்தாக்குகிறது.

ஆதி பக்கங்களை புரட்டும்போது தமிழினத் தலைவர் குடும்பம் மற்றும் 'நூல் நாயகன்' தளபதி குடும்பம் ஆகியோர் ஒளிப்படங்களை வண்ணத்தில் அச்சிட்டு கண்ணீர் வர வைத்திருக்கிறார் பதிப்பாசிரியர்.

'ஆழப் புதைந்தவைகள் மீண்டும் மேலெழுந்து வருகிறதே' என்று முன்னுரை வழங்கியிருக்கும் திருமிகு "துளசி செல்வம்" அவர்களும், 'பொட்டு அம்மனின் வரலாற்றை எழுதுவதற்கு நான் யார்? 'என்று தன்னுரை தந்திருக்கும் நூல் ஆசிரியர் திருமதி "சாந்தி நேசக்கரம்" அவர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

28.11.1962...
கார்த்திகைப் பூக்கள்
பூத்திடும் காலம்
கருமுகில் வானம்
மழை தூவிடும் கோலம்.
அதிசயம் நிகழ்ந்திடும்
அற்புத மாதம்
வல்வெட்டித்துறையில்
ஓர் வரலாறு நிகழ்ந்தது.

என்னும் கவி வரிகளோடு, சிவசங்கராகப் பிறந்து பொட்டு அம்மானாக வாழும் வரலாற்று நாயகனின் தியாகத்தை ஆரம்பித்து வைக்கிறார் நூல் ஆசிரியர் சாந்தி நேசக்கரம் அவர்கள்.

 சொற்களில் சோடனை இல்லை, வார்த்தைகளில் வர்ணனை இல்லை, அலங்கார உத்திகள் இல்லை. ஆனாலும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் கண்ணிலும் மனத்திலும் கனத்தினை கூட்டி பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.

கல்லிலும் முள்ளிலும் சகதியிலும், ஓடைகளிலும் கடும் குளிரிலும், தீ பறக்கும் போரிலும், குண்டு பொழிவிலும், குடும்ப அன்பிலும் நாமும் கால் கடுக்க மனம் வலிக்க நடந்து, நனைந்து போராட்டக்காரர்களோடும் பொட்டு அம்மான் அவர்களோடும் பின் தொடர்வது போன்ற உணர்வைத் தருகிறது இந்நூல்.

1977 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த வே யோகேஸ்வரன் பேச்சாள் கவரப்பட்ட இளைஞர் சிவசங்கர் (பொட்டு அம்மன்), தமிழினத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஆவலுடன் அரசியல் மேடைகளை தேடிப் போவதும், யோகேஸ்வரன் அவர்களுக்கு தன் கைகளை கீறி ரத்தத்தில் பொட்டு வைப்பதும் எனத் தொடங்கி, அரசியல்வாதிகளால் விடுதலை சாத்தியம் இல்லை ஆயுத வழியில் போராடுவதே சரியான பாதை என அதற்கான தேடலோடு பல சோதனைகள், கவனிப்புகள், நீண்ட காத்திருப்புகள், பொறுமை என்ற நீட்சியில் 1981 ல் விடுதலைப் புலிகளின் நம்பிக்கையை பெற்று அதன் அமைப்பில் இணைந்திருக்கிறார்.

1983 ன் தொடக்க காலத்தில் உடையார்கட்டில் தளபதிகள் அருணா, விக்ரம், ரெஜி, ஆனந்த், லிங்கம், ஞானம், சூசை ஆகியோருடன் அடிப்படை பயிற்சியை ஆரம்பித்து ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் மெருகேற்றி பிறகு இங்கிருந்து இமாச்சலப் பிரதேசம், உத்தர பிரதேசம் என தன்னை தயார்படுத்தி இருக்கிறார் தளபதி அவர்கள்.

1986 முதல் தான் முழுமையான களப் போராளியாக இரத்தமும் சதையும் கொண்ட போர்முனை கண்டிருக்கிறார் பொட்டு அம்மான். இடையில் (1987) சகப் போராளியான 'வக்சலா 'வை போராட்ட முகாமிலேயே தமது சகோதரி கேப்டன் அருந்ததி, தளபதிகள் திலீப், கருணா முன்னிலையில் காதல் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்.

இந்திய இராணுவத்தின் தலையீடு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அழிவப் பாதையில் திரும்பும் விடுதலைப் போரில் சக தோழர்கள், முக்கிய கேப்டன்கள் என அடுத்தது இழப்புகளை சந்தித்தவர் தானும் குண்டுகளால் தாக்குண்டு மறைமுக சிகிச்சைப் பெறுகிறார்.

இடி என முழங்கும் வெடிச் சத்தங்களுக்கிடையில் தவிக்கும் மனதோடு அல்லாடும் துணைவியார் வக்சலாவின் பிடிவாதம் அறிந்து (தனக்குள் எழும் காதல் உணர்வுகளை கட்டுப்படுத்தி) சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதும் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்து தொய்வின்றி பயணிப்பதும் அவரது இலக்கையும் மன உறுதியையும் பறைசாற்றுவதாகவே இருக்கிறது.

நூலாசிரியர் அவர்கள், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தளபதி அவர்களை சந்திப்பதும் பிறகு அண்ணா, அண்ணி என்று அவருடைய குடும்பத்தோடு தொடர்ந்து நட்பு வளையத்தில் பயணிப்பதுமாக இருந்ததை உணர்கையில் 'இந்த நூலை இவர் ஏன்?' எனப் புரிய வைக்கிறார்.

தளபதியோட மகன்களான பார்த்திபனும் அருள் வேந்தனும் வாழ்க்கையை புரிவதற்குள்ளாகவே போர்க்களம் செல்வதும், போர்முறை தெளிவதற்கு முன்பாகவே உயிரைப் பிரிவதும் தளபதி, போராளிகளுக்கு மட்டுமல்ல நமக்கும் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிகழ்வாகவே அமைகிறது.

தளபதி அவர்களின் இளமைக்காலந்தொட்டு இயங்கிய காலம்வரையான ஒளிப்படங்களை தனித்தும், களத்திலும், குடும்பத்தோடும் உடன் பயணிப்பவரோடும் என்று இயன்றவரை இங்கே அச்சேற்றி இருப்பது நூல் ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியரின் மிகுந்த அர்ப்பணிப்பையும் அக்கறையையும் காட்டுகிறது.

எளிமையாய் பிறந்து, வேட்கையோடு வளர்ந்து, போராளியாகத் தொடர்ந்து, புலனாய்வுத் துறை தளபதியாக உயர்ந்து துணை நின்றோர், தோள் கொடுத்தோர், இணையாய் வந்தவர் என ஒவ்வொருவராக இழந்து, இறுதி மூச்சு வரை இன விடுதலைக்காகவே யோசித்து, சுவாசித்து விதையாக விழுந்தவரை நம் நெஞ்சிலும் பதியனிடுவதில் தப்பேதும் இருக்காது. இன்னூல் படித்ததற்குப் பிறகும் பல நாட்கள் என் நித்திரையை கரைத்ததில் ஆழமான படைப்பு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

பொதுவாக நடந்த சம்பவங்களை கருவாக தாங்கி வரும் பதிவுகளும் புத்தகங்களும் பரிதாபங்களை அள்ளிக்கொள்ளும் என்றாலும் நம் சமுதாயம் சார்ந்த இந்த நினைவுகள் நம் மனதை கொஞ்சம் பிசையவே செய்கிறது.

நூலாசிரியரின் பெயரை போலவே அவரது செயலும் நேசக்கரம் நீட்டுவதாகவே அமைந்திருக்கிறது. மேலும் மேலுமாய் இவரது நேர்த்தியான படைப்புகளையும், நெஞ்சத்து உணர்வுகளையும் சிறப்பான நூல்களாக காணலாம் என்று நம்புவோம்.