பழங்காசுகளை அறிவோம்
பழங்காசுகளை அறிவோம் - த.ந.கோபிராமன்

பழங்காசுகளை அறிவோம் - த.ந.கோபிராமன்

வரலாறு என்றாலே நமக்குச் சுவாரசியம் பிறந்துவிடும். நம் முன்னோர்கள், வாழ்வியல் முதல் அனைத்துக் கூறுகளையும் இலக்கியப் பாடல்கள், கதைகளின் முதலானவற்றின் மூலமும் வரும் தலைமுறைகளுக்கு விட்டுச்  செல்கிறார்கள். அணு முதல் அண்டம் வரை பற்றிய அனைத்தும் அவற்றுள் அடக்கம் என்பது மெய் ஆகும். இயல்பிலேயே நம் தமிழ்ச் சமூக மரபணுக்களில், கதைகள், வரலாறு சார்ந்த கதைகள், வரலாற்று நிகழ்வுகள் முதலானவற்றை ஆர்வத்துடன் கேட்டு உட்கிரகிக்கும் பண்பு உள்ளது என்பது யாவரும் அறிந்ததே ஆகும். அத்தகைய ஆர்வமும் உழைப்பும் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணப் புத்தகம்தான் “பழங்காசுகளை அறிவோம்”.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் இந்நூலின் ஆசிரியர் திருமிகு த.ந.கோபிராமன் அவர்கள் ஆவார். புதுச்சேரியில், தொண்டை மண்டல நாணயவியல் கழகம் (THONDAIMANDALA NUMISMATICS SOCIETY) (பதிவு எண்: 221/07) என்ற அமைப்பு 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இந்தத் தொண்டை மண்டல நாணயவியல் கழகம் (தொ.ம.நா. கழகம்) திருமிகு த.ந.கோபிராமன் அவர்களால் நிறுவப்பட்டதாகும். மேலும், “தொல்புதையல்” காலாண்டிதழின் நிறுவுநர் மற்றும் ஆசிரியராகவும் இவர் உள்ளார். இவ்விதழானது, 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.

மேலும், புதுச்சேரி வரலாற்றுச் சங்கம் (La Société de l'Histoire de l'Inde française) என்ற அமைப்பு நூறு ஆண்டுகளைக் கடந்து, வரலாறு படைத்து வருகிறது. இச்சங்கம், 1911ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இந்திய அளவில் வேறெங்கும் தோன்றுவதற்கு முன்னர், பிரஞ்சியர்களால் தோற்றுவிக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்றுச் சங்கமாகும்.

பிரஞ்சிந்தியா, 1954-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, பிரஞ்சிந்திய வரலாற்றுச் சங்கம் (La Société de l'Histoir de l'Inde Française), புதுச்சேரி வரலாற்றுச் சங்கம் (La Sociét de l'Histoire de Pondichéry) எனப் பெயர் மாற்றப்பட்டது.

La Revue Historique de Pondichery எனும் இதழ், 1916 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது புதுச்சேரி வரலாற்றுச் சங்கத்தின் இதழாகும். 1916ஆம் ஆண்டு முதல் நடக்கும் 2025ஆம் ஆண்டு வரை இதுவரை 26 இதழ்கள் வெளியாகி உள்ளன. இந்தப் புதுச்சேரி வரலாற்றுச் சங்கத்தின் பொருளாளராக, “பழங்காசுகளை அறிவோம்”எனும் இந்நூலாசிரியர் உள்ளார்.

“தொல்புதையல்” இதழில் வெளியான, “பழங்காசுகளை அறிவோம்” என்ற கட்டுரைத் தொடரின் தொகுப்பே இந்நூலாகும். இது ஆசிரியரின் இரண்டாவது நூலாகும்.

இந்நூலில், நாம் படித்தறிய வேண்டிய வரலாற்று உண்மைகளும் ஆச்சரியங்களும் பொதிந்து கிடக்கின்றன என்பது மிகையில்லை. அதனை, இந்த நூலில் உள்ள அணிந்துரை மற்றும் வாழ்த்துரை மூலமும் அறியலாம்.

இந்நூலிற்கு அணிந்துரை வழங்கியவர்களில் ஒருவர் புதுச்சேரி அரசு மேனாள் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அ. ராமதாசு அவர்கள். இந்நூலைப் பற்றி எழுதிய அணிந்துரையில், “நாணயங்கள் பற்றிய அளவற்ற விவரங்களையும் விளக்கங்களையும் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய மொழியில் நடையில் வெளியிட்டிருக்கும் திருமிகு த. ந. கோபிராமன் அவர்களுக்கு நம் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரை ஊக்குவிக்கும் வகையில் நூலை வாங்கி படித்து இன்புறுவோம்” என்று பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

புதுச்சேரி வரலாற்று சங்கத்தின் காப்பாளர் மற்றும் புரவலரான மருத்துவர் நல்லாம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். அவருடைய வாழ்த்துரையில், “நாணயவியலில் அவருடைய ஆர்வத்தையும் செயல்பாட்டையும் பாராட்டி புதுச்சேரி வரலாற்றுச் சங்கம் தனது நூற்றாண்டு விழாவில் “நாணய செம்மல்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது” என்று நூல் ஆசிரியரை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் பேராசிரியர், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மேனாள் துறைத் தலைவர் மற்றும் இயக்குனர், முனைவர் க. நாகராஜன் அவர்களின் அணிந்துரையில், “நாணயம் எனும் ஒற்றை பொருளை மட்டும் எதிர்பார்த்து வாசித்த எனக்கு எதிர்பாராத பல பரிமாணங்களை நூல் அருளியது” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து உள்ளார். மேலும், எளிய மொழியில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்றும் ஒரு சிறப்பு ஆய்வு நூலுக்கான இறுக்கம் இதில் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சேகரிப்புக் கலையை வளர்க்கும் எண்ணத்தில் திரட்டிய பல்வேறு  வரலாற்று விவரங்களும் விளக்கங்களுடன் கூடிய இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கவனயீர்ப்பு செய்யும் ஒரு  வாக்கியம் உள்ளது. “ஒவ்வொரு பழைய காசும் ஒரு வரலாற்றை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது” என்பதே அதுவாகும். பழங்காசுகளைத் தொகுத்து வைப்பதும் வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைப்பதைப் போன்றதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். இது பழம்பெருமை பேசுவதற்கு மட்டும் இல்லை. வேறு என்னென்ன என்பதை, இப்புத்தகத்தைப் படித்தால் அறியலாம்.

ஆதி மனிதனைப் பற்றித் தொடங்கி, உலக நாடுகள் பலவற்றில் காசுகளின் தோற்றம், பண்டமாற்று முறை எவ்வாறு இருந்தது என்று விவரிக்கிறது இந்நூல். மேலும், இதன் மூலம், எந்தெந்த பொருட்கள் பண்டமாற்றும் முறைக்கு பயன்படுத்தப்பட்டன என்பதையும் நாம் அறியலாம்.

காசுகள் குறித்த சொல்லாடல், பயன்படுத்தப்பட்ட உலோகங்கள், அதன் வடிவங்கள், எடை, விட்டம், முத்திரைகள், குறியீடுகள், கடவுளரின் வடிவங்கள், மனித உருவங்கள், அஃறிணை வடிவங்கள், காசுகளில் இருக்கும் சின்னங்கள், தமிழ் தொல் எழுத்துகள் என இப்படிப் பல்வேறு கூறுகள் பற்றி விளக்கி எழுதியுள்ளார் இந்நூலாசிரியர் திரு த.ந.கோபிராமன் அவர்கள்.

எந்தெந்த நாடுகளில் காசுகள் குறித்த வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதுடன் அது குறித்த வரலாறும் நமக்கு அறியத் தருகிறார்.

இந்நூலில், சங்க கால, சேர சோழர் பாண்டிய மன்னர்கள், மலையமான்கள், பல்லவர்கள் உட்பட முகலாயர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி காலம் வரை விவரங்கள் கிடைக்கின்றன. தொடர்புடைய ஆட்சி காலத்தைப் பற்றிய விவரங்களும் இருக்கின்றன.

இப்படி நாணயங்களின் வழியே, உலக வரலாற்றினை, இந்திய வரலாற்றினை, தமிழக வரலாற்றினை, புதுச்சேரி வரலாற்றினை வெளிக்கொணர்ந்து செய்திகளைத் தருகிறார் ஆசிரியர்.

இந்நூலின் பிற்பகுதியில், பின் இணைப்புகளாக பழங்காசுகள் குறித்த சில கட்டுரைகள் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு ஆளுமைகள் எழுதியவைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், 193 நாடுகளின் பெயர்களும் நாணயங்களின் பெயர்களும் இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நம் வரலாற்று ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக, இந்தப் படைப்பு இடம்பெறும் என்பதில் பெருமையும் மகிழ்வும் அடைகிறோம். இது போன்ற படைப்புகள், இன்னும் வெளிவரட்டும்!