ஈரம் உறிஞ்சும் முட்கள்
ஈரம் உறிஞ்சும் முட்கள் - செல்வகுமார்

ஈரம் உறிஞ்சும் முட்கள் - செல்வகுமார்

முதல் ஹைக்கூ  தொகுப்பில் சமூக அக்கறையுடன் பல்வேறு கவிதைகளைப் படைத்த சிரா.செல்வகுமார் அவர்கள் "ஈரம் உறிஞ்சும் முட்கள்" என்ற இரண்டாவது கவிதை மூலம் மீண்டும் அதே சமூக அக்கறையுடன் இயல்பாய் கவிதைகளைப் படைத்துள்ளார்.

ஹைக்கூ கவிதைகள் சிரா.செல்வகுமார் அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது. அதை விட்டு விடாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த ஆர்வத்தினை நாம் பாராட்டலாம். மீண்டும் அவருடைய எண்ணங்கள் விவசாயத்தை மனிதனின் வாழ்க்கை முறையை பறவைகளை எளிய மனிதர்களின் கவலைகளை சுற்றி சுற்றி வருகிறது. இந்த காரணத்திற்காகவும் நாம் அவரை பாராட்டலாம்.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இருந்த இடத்தில் இருந்து எல்லாமே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியே செல்லவும் மற்ற மனிதர்களளிடம் பழகவும் விருப்பமில்லை. வளர்ச்சி என்ற போர்வையில் அவர்கள் தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியரும் ஆபத்தை உணர்ந்து இப்படி கூறுகிறார்.

வீடுநோக்கிய வர்த்தகம்
இன்னும் பெருகக் கூடும்
மக்களுக்கு ஆபத்து.

மனிதனை, சிந்திக்கத் தெரிந்தவன்; பகுத்தறிவு கொண்டவன் என்று அவனை ஆறறிவு கொண்டவன் என்று வரிசைப்படுத்துகிறோம். மற்ற உயிரினங்களை ஐந்தறிவு என்று பட்டியலிடுகிறோம். உண்மையை சொல்லப்போனால் மனிதன் ஆறறிவு உடையவன் அல்ல; ஐந்தறிவு என்றே கூறலாம். இவன் சிந்திக்கிறேன் என்ற போர்வையில் மனித சமூகத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மொத்தத்தில் இந்த உலகத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறான். மனிதர்கள் அதைக் கண்டு உணர்வதும் இல்லை. பயப்படுவதும் இல்லை. மனிதர்கள் தன்னை அறியாமலே செய்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தவறு பிளாஸ்டிக் எனும் நெகிழியை பயன்படுத்திக் கொண்டிருப்பது தான். அதன் ஆபத்தை 2 கவிதைகளில் குறிப்பிடுகிறார்.

மூச்சு முட்டும் பூமி
இறுகக மூடிக்கொண்டு
நெகிழிப் போர்வை

நெகிழிக் குப்பை
பூமியில் படியும்
எதிர்காலச் சாம்பல்.

சாம்பலாவது தண்ணீரில் கரைந்து விடும்; மறைந்து விடும். நெகிழி?

தந்தை பெரியார் பெண்களும் அடுப்படியில் இருந்து வெளியேறி சுயமாக நிற்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுவார். அதன் அடிப்படையில் இப்போது பெண்களும் வேலைக்கு சென்று சுயமாக தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கவிதையின் கணவர் தவறாக புரிந்து கொண்டு வீட்டில் இருந்து விட்டார் போலும்.

வேலைசெய்யும் மனைவி
வீட்டில் தலையாட்டியபடி
தஞ்சாவூர் பொம்மை.

எனக்கு பிடிபடாத ஒரு கவிதை இது. காதலர் தினம் தவறென்று கூறுகிறாரா அல்லது அதை கொண்டாடும் விதத்தை தவறென்று கூறுகிறாரா ஆசிரியர் என்று தெரியவில்லை. ஏனெனில் காதலர் தினத்தை கணவனும் மனைவியும் கொண்டாடலாம் தானே.

காதலர்தினக் கொண்டாட்டம்
பரவி வருகிறது
தவறானக் கலாச்சாரம்.

கொண்டாடும் விதம் தவறு என்றால் அவருடைய மற்றொரு கீழ்கண்ட கவிதை சரிதான்.

பெருகும் விவாகரத்து
புரிதல் இல்லாமல்
காதலர் தினம்.

இன்றைய காலகட்டத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் பல சாதனைகளை செய்கிறது. ஆனால் அவர்களால் சரி செய்ய முடியாத ஒன்று சென்னை விமான நிலையத்தின் கூரை. 65 தடவைக்கும் மேல் இடிந்து விழுந்ததை பகடியாக எழுதுகிறார் ஆசிரியர்.

விமான நிலைய கூரை
அடிக்கடி விழுகிறது
பிடிபடாத நவீனம்.

தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவிதைகளாக்கும் சிரா.செல்வகுமார் அவர்களின் மற்றொரு சிறந்த கவிதை கீழ்கண்ட கவிதை.

தலையில் செங்கல்
படியில் ஏறும் சிறுமி
கையில் புத்தகம்.

மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழவே விரும்புகிறார்கள். ஒரு சமூகத்தில் அடுத்த தலைமுறை அவர்களுக்கு முந்திய தலைமுறையை பார்த்தபடி உருவெடுக்கிறார்கள். அதிலும் தாய் தந்தையை வைத்து குழந்தைகள் வாழ்கிறார்கள். ஆனால் கணவன் மனைவிக்குள் சரியான உறவில்லை எனில் என்ன நடக்கும் என்பது இந்த இரண்டாவது வரி தெளிவாக சுட்டி காட்டுகிறது.

கணவன் மனைவி சண்டை
வீட்டிற்குள் சிதறியபடி
குழந்தைகளும் பொம்மைகளும்.

கவிதை இன்று ஒரு பார்வையை கொடுக்கும். சில நாட்களுக்குப் பிறகு அது மற்றொரு பரிமாணத்தைக் கொடுக்கும். மேலும் கவிதையின் பார்வை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இங்கு சுட்டி காட்டி இருக்கும் கவிதைகளை என்னுடைய பார்வையில் அலசி உள்ளேன். நீங்களும் உங்க பார்வையில் சிரா.செல்வகுமார் அவர்களின் "ஈரம் உறிஞ்சும் முட்கள்" கவிதையை அலசலாம்.