ஒரு மகுடம் ஒரு வாள் இருவிழிகள்
ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள் - விக்கிரமன்

ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள் - விக்கிரமன்

கலைமாமணி விக்கிரமன் அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகம் 88 பக்கங்களைக் கொண்ட சரித்திர புதினமாகும். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பகை உணர்வை மையமாகக் கொண்டுள்ளது இந்நாவல். இப்புத்தகத்தின் ஆரம்பத்தில் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன் சோழ நாட்டை எதிர்கொள்ள போருக்குத் தயாராகிறான். தன் மூதாதையரான இராசசிம்ம பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரை சோழர்கள் வீழ்த்தினர். பாண்டிய நாட்டையே சூறையாடினர். இக்காரணத்தினால் பகைமை கொண்ட சுந்தரபாண்டியன் படை திரட்டி போருக்கு தயாராகிறான்.

அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த இராசராசனை வென்று சோழ இளவரசி சந்திரவதனாவை மணந்து கொள்ளவும் திட்டமிடுகிறான். இது ஒருபக்கம் இருக்க இங்கே சோழ நாட்டில் இராசராசனின் ஒரே செல்வ மகளான சந்திரவதனாவை, அந்நாட்டு சிற்றரசர்களே மணந்து கொண்டு அரியணையும் ஏறிவிட ஆசைப்படுகின்றனர்.

ஆனால் மன்னன் இராசராசனுக்கோ சோழர் வழிவந்த தெலுங்கு நாட்டுச் சோழர் கண்ட கோபாலனுக்குத் தான் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க விருப்பமாக இருக்கிறான். இதற்கிடையே இளவரசியோ தன்னை சித்திரம் வரைய, ஓவியனாக வந்த போசள நாட்டு இளவரசன் மேல் காதல் வயப்படுகிறாள். இந்த இடத்தில் கதை சூடு பிடிக்கிறது.

இறுதியில் பாண்டிய மன்னன் சோழ நாட்டை வென்று இளவரசியை மணந்தானா? அல்லது இளவரசியின் காதல் ஆசை நிறைவேறியதா? அல்லது இராசராசன் நினைத்தது போல் கண்டகோபாலனுக்கு பெண்ணைக் கொடுத்து தன் படைபலம் கூட்டினானா? என்பதே கதை.