மூன்றாம் பிழக்கடை
மூன்றாம் பிழக்கடை - கீ.வி.ஜெயஸ்ரீ

மூன்றாம் பிழக்கடை - கீ.வி.ஜெயஸ்ரீ

இப்புத்தகத்தின் பெயரே இதன் கதையைச் சொல்கிறது. மூன்றாம் பிழக்கடை யாருக்காக? எதற்காக? ஏன்? என்று.

விதவைப் பெண்களுக்கென தனி ஒர் அறை இந்த பிழக்கடை. மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் விதவைப் பெண்களுக்கு உடன் இருக்கும் உறவினர்கள் ஆறுதலாக இருப்பதை விடுத்து, உடலளவிலும் மனதளவிலும் நோகடித்து அப்பெண்ணை கூனிக்குறுகச் செய்யும் சடங்குகளை அரங்கேற்றி மேற்கொண்டு துன்புறுத்துவதை இக்கதை விவரிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் கீ.வி.ஜெயஸ்ரீ அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அக்காலத்தில் கணவனை இழந்த பெண்களின் மனக்குமுறலை, வேதனையை, வலியை ஆழமாக உணர்ந்து எழுதி இருக்கிறார். பொதுவாக நேருக்கு நேர் நின்று பேசும்போத ஒரு பெண்ணின் மனநிலை இதுதான் என்று கணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. அவ்வாறிருக்க மூன்றாம் பிழக்கடை என்ற இருட்டறையில் அடைத்த பின் அப்பெண் எவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பாள் என்று படைத்த அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.

தன்னை ஒரு துர்பாக்கியசாலி என்று எண்ணும் அளவுக்கு அப்பெண்ணேயே நம்ப வைக்கும் மனிதர்கள் சுற்றியிருக்க மீதமுள்ள வாழ்க்கை நரகம் தான். உடன்கட்டை ஏறுதல் என்பது நினைத்துப் பார்க்கும்போதே மனம் பதற வைக்கிறது. ஆனால் இதில் வரும் சேஷபாட்டியோ பிழக்கடையில் அடைபட்ட நாளிலிருந்து பலமுறை உடன்கட்டையே ஏறிருக்கலாம் என்று எண்ணுகிறாள். இதிலிருந்து சாவைவிடக் கொடுமையானது இப்பிழக்கடை வாழ்க்கை என்று உணர முடிகிறது.

ஒரு பெண் கணவனை இழந்தபின் உடனே தானும் இறந்து விட வேண்டும். இல்லையேல் சாவை விடக் கொடுமையான தண்டனைகளை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்பதே அக்கால பெண்களின் தலைவிதியாக இருந்துள்ளது.

இது போன்ற கொடுமைகளிலிருந்து பெண்களை மீட்டெடுக்க "தந்தை பெரியார்" மேற்கொண்ட முயற்சிகளும் போராட்டங்களும் ஏராளம். பெண்களுக்கு எதிரான சதியை முறியடித்து சமுதாயத்தில் பல்வேறு நன்மைகளையும் மாற்றங்களையும் விழையச் செய்த "தந்தை பெரியார்" என்றென்றும் போற்றுதலுக்குரியவர். தந்தை பெரியார் என்ற பெயரை கேட்டாலே கொந்தளிப்பவர்கள் நுட்பமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும், குறிப்பாக பெண்கள். உங்களு(நம)க்கும் சேர்த்து தான் போராடி இருக்கிறார்கள் "தந்தை பெரியார் ".

இப்புத்தகம் யாரிடம் சென்றடைந்தால் சரியாக இருக்கும் என்பதை குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தில் பெரியாரின் வழித்தோன்றலாக மிளிர்கிறார் கீ.வி.ஜெயஸ்ரீ அவர்கள். தங்களுக்கேற்றார் போல் மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், சட்டங்கள் என வகுத்துக் கொள்ளும் மனிதாபிமானமற்ற சுயநலமான ஜென்மங்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

இன்றளவும், உலகறிவைப்பெற்று வந்தாலும் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே வர முடியாத சில பெண்களைக் கண்கூடாகக் கண்டதன் விளைவாய் இக்கதை எழுதியிருப்பதாய் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இதுபோன்று பெண்களின் நலனுக்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவர் எடுத்துரைக்கும் முயற்சிகளும் எழுத்துக்களும் மென்மேலும் தொடர வாழ்த்துகள்