வனத்திற்குள் எத்தனையோ வண்ணமலர்
வனத்திற்குள் எத்தனையோ வண்ண மலர் - மனோந்திரா

வனத்திற்குள் எத்தனையோ வண்ண மலர் - மனோந்திரா

கவிஞர் மனோந்திராவின் "வனத்திற்குள் எத்தனையோ வண்ண மலர்": சிந்து...கண்ணிகள்...கலி விருத்தம்...ஆனந்தக்களிப்பு....கலிப்பா...அந்தாதி....கும்மி...செந்தொடை என்று பிழையற மரபிலே பாங்குற பாட்டிசைத்திருக்கிறார் இவர்.

அறியாமல் செய்த தவறாகவே இருப்பினும் அழிவைத் தரும் என்பதை அனுபவத்தால் உறுதி செய்கிறார்.

சாதிய உணர்வை சாக்கடை என்றும் மதவெறியை குப்பை என்றும் ஆணித்தரமாக உருவகப்படுத்துகிறார்.

ஒடுக்கப்பட்டவன் அழுகை ஒருநாள் கர்ஜனையாக மாறி அனைத்தையும் தகர்த்தெறியும் என்று புரட்சி வெடிக்க முரசு கொட்டுகிறார்.

ஆதிக்க சாதி மனோபாவ ஆணவப்படுகொலையைக் கண்டித்து சாட்டையை சுழற்றுகிறார்.

வாக்கு அறுவடை செய்யும் அபத்தமான அரசியல் இவரது கவிதையில் கிழி படுகிறது.

இருள்....தனிமை...மெளனங்கள் கலி விருத்தத்தில் களை கட்டுகிறது. வெண்மணித்தீயில் வெந்து மடிந்தவர் வேதனை நெஞ்சைப்பிளக்கிறது. தாயன்பின் மகத்துவம் தனித்தன்மை மிக்கதாய் தமிழாகியுள்ளது.

எண்சீர் விருத்தம் இவரது எழுத்துக்களில் சமத்துவம் போதிக்கிறது. வியநிலைச்சிந்தில் கடனுக்கு மகசூலை விற்கும் விவசாயக் கண்ணீர் வாசிப்போர் நெஞ்சில் வலி தருகிறது.

மரபின் வழியே சக மனிதர்கள் மனநிலை....சமுதாய சீர்கேடுகள்...சாதி மத இன பாகுபாட்டு அவலங்கள் உள்ளிட்ட அத்தனையையும் வரிசைப்படுத்தி... ரெளத்திரம் கொள்கிறது மனோந்திராவின்  கவிதைகள்.

சிறந்த இலக்கணத்தில் சிறப்பான நடையில் அற்புதம் நிகழ்த்தியுள்ளார் இவர். மொத்தத்தில் அழகுத்தமிழ்  சரம் கோர்த்து வாசக மனோபாவங்களை வசீகரிக்கிறது வண்ண மலர்களாய் இந்நூல்.

நூலாசிரியர் மனோந்திராவிற்கு வாழ்த்துக்கள்.