நிழலின் நிழற்படம்
நிழலின் நிழற்படம் - அழகன் சுப்பு

நிழலின் நிழற்படம் - அழகன் சுப்பு

தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி கவிதைகளாலேயே நிரம்பி வழிகிறது. எனினும் கவிதை ஒரு கலை. அது அகம் சார்ந்த அதிக உணர்வுகளைத் தழுவியே சமூகத்தில் ஒரு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவதாகவே இன்றும் இருந்து வருகிறது...

உலகமகா இலக்கியங்கள் இயம்பத் துடிக்கும் ரசவாத உணர்வுகளை எல்லாம் தமிழின் ஒரு கவிதை உடைத்தெரியக் கூடிய சொற்களைக் கொண்டு பண்நெடுங்காலமாகவே கவிஞர்கள் கையாண்டு வருகிறார்கள்...

சிலக் கவிதைகள் வாழ்தலுக்கும் சாதலுக்குமான இடைவெளியில் நிகழும் இன்பங்களை கொண்டாடும்; சிலக் கவிதைகள் துன்பங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும்; சிலக் கவிதைகள் விதி மீறல்களை ஏற்கும்; சிலக் கவிதைகள் காதலும் மோதலும் காமமும் மோட்சமுமென நின்று நிதானித்து பேசும்; சிலக் கவிதைகள் இயற்கையின் பெருவெளி ரகசியங்களை ஆராய்ந்து பார்க்க எத்தனிக்கும். அதிலும் வெகு சில கவிதைகள் மட்டுமே பட்டினத்தார் வழியில் நின்று  வாழ்க்கையின் நிலையில்லா இயலாமைத் தன்மையினை துணிந்து பேசும். அத்தகைய மனநிலையில் இருந்து வரும் கவிதைகள் இலக்கியப் பெருவெளியில் தனக்கான நிலையான ஓர் இடத்தை பிடித்துக்கொள்ளும் ஆற்றலைப் போல கவிஞர் அழகன் சுப்பு அவர்கள் எழுதிய நிழலின் நிழற்படத்திலுள்ள கவிதைகள் தனித்துவமானவையாக உள்ளன...

இது இவரின் முதல் கவிதை தொகுப்பு என்பதனை வாசகன் என்ற முறையில் என்னால் இப்பொழுது வரையிலும் ஏற்க முடியவில்லை...

மொழியின் முதிர்ந்த சொற்களை கையாளும் ஆற்றல் இவருக்கு இலகுவாகக் கைகூடி இருக்கிறது என்றாலும் கூட அவைகள் அனுபவத்தின் ஆதிப்புள்ளியிலிருந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்பதினால் தான் வாசகன் மீது அவரின் கவிதைகள் ஆளுமைத் தன்மையினை செலுத்த முடிகிறது...

அத்தகைய சில கவிதைகளை சுட்டு விரல் நீட்டி காட்டிக் கொடுகிறேன். மீதமுள்ள கவிதைகளை உங்களின் உணர்வெனும் வலைவீசிப் பிடித்து வாசிக்க என் வாழ்த்துகள்...

கண்ணீர் ஒரு பச்சோந்தி
சிரிப்பிலும் வருகிறது 
அழுகையிலும் வருகிறது...

இவ்வரிகள் பெருங்கவி கண்ணதாசன் அவர்கள் எழுதிய,
"பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் 
சிரிக்க மறந்தாய் மானிடனே
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்."

என்ற தத்துவப் பாடலை சாறு பிழிந்த நிலையில் கண்ணீரை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறும் ஒரு சமயவாதி என்று கிண்டலடித்து கேளி செய்வது போல் அமைந்தாலும் ஏதோ ஒரு நெருடல் இதயத்தில் ஏற்படுத்துகிறது...

அழகிய சொற்களின்
புணர்ச்சி
கவிதை...

இவ்வரிகள் கவிதைகளுக்கான ஓர் அங்கீகார கவிதை என்றே நினைக்கத் தோன்றுகிறது...

இறகு பறக்கச்
சிறகாகிறது
காற்று...

காற்றையும் பறவையின் உதிர்ந்த இறகையும் எத்தனையோ கவிஞர்கள் எத்தனையோ விதமான கற்பனைகளில் பாடிப் பாடி தீர்த்திருந்தாலும் இவர் எழுதிய இக்கவிதை இறகை சிறகாக்கி காற்றே பறவையாகி பறந்து காண்பிக்கும் போது கற்பனைகளின் ஓரத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது போல் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது...

"மாதவிடாய் மூத்திரம் போல 
அடக்கிக் கொள்ளுங்கள் 
புதுக் கழிப்பறை எல்லாம் கிடையாது"
என்ற அந்த மேலாளரின் 
ஞானம் 
தூய்மை பெருகிய அருவியின் நடுவே
நீச வாசத்துடன் நிற்கும்
ஒரு தாயின் கையறுநிலை
வேறு யாரோ அல்ல
நாங்களே எங்களுக்கு எதிரி...

இவ்வரிகள் ஆழ்ந்த உணர்வுகளோடு உற்று நோக்க கூடிய பெண்ணியக் கவிதைகளில் இதுவும் ஒன்றாக கருதுகிறேன். ஏனெனில் இத்தகைய நவீன கால சூழ்நிலையிலும் கூட அந்த நான்கு நாட்களை கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் மறக்க முடியாத அவமானங்களில் இதுவும் ஒன்றாக இங்கே கவிஞர் வடித்துக் காட்டி மேலாளரின் ஞானம் என்கிற வார்த்தைகளுக்குப் பின்னால் சமூகத்தின் மீதான மொத்த ரௌத்திரத்தையும் நாங்களே எங்களுக்கு எதிரி என்று தோலுரித்துக் காட்டுகிறார்...

என் யோனி முழுக்க உமிழ்நீரை நிரப்பி
என் அந்தரங்கம் தேடுகிறாய்
விரைத்த உன் ஆண்குறிக்கு
இருக்கும் அறிவு கூட உனக்கு இல்லை
சுக்கிலம் சுரக்கும் சுகம் போதும் என்றால்
நான் சடலமாகவே இருக்கிறேன்
கலவி நிமித்தம் என்னை அடைய
முதலில் நீ உன்னை இழக்க வேண்டும்
வா வந்து மண்டியிடு
யாசி தினவு கொண்ட உன் தோளை இறக்கு
நானே என்னைத் தருவேன்
முற்றும் முதலுமாக
நீ எடுப்பதில் இல்லை இன்பம்
நான் கொடுப்பதில் உண்டு
கஜினி முகமதைப் போல
எல்லா முறையும் வாகை சூடு
வாழ்வை வாழு...

இவ்வரிகள் தலைவி தலைவனுக்கு சொல்லக்கூடிய கூற்றாகக் கருதுகிறேன். இணையருக்குள் காமம் எப்படி நிகழ வேண்டும் என்பதை தலைவியின் மனக்கிடங்கை ஆழ்ந்து ஆராய்ந்து அவளின் வீரியமிக்க சொற்களை ஒரு துளி கூட குறையாமல் அப்படியே தந்திருப்பது மகிழ்ச்சி. எனினும் இக்கவிதை பெண்பால் பேசுவதாக இருப்பினும் இங்கே கவிஞர் என்கிற ஆண்பாலின் வாயிலாக வெளிப்படுகிற பொழுது பெண்ணின் சொற்கள் எவ்வளவு ஆளுமை தன்மை கொண்டது என்பதை நிரூபித்துக் காட்டுகிறது. இணையருக்குள் காமம் என்பது எடுப்பதில் இல்லை, ஒருவருக்கொருவர் தருவதில் தான் இன்பம் இருக்கிறது என்பதை தலைவியின் கூற்றாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது இக்கவிதை...

காதல் நிரம்பிய காமத்தையும் காமம் செரித்த காதலையும் ஒரு கவிதையின் இறுதி வரிகளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பேரண்டத்தின் பெருவழியில் நிறைவது பித்தனாக இருப்பது பேரன்பு கொள்வது எங்களைத் தவிர வேறு யாரோடும் கிடைக்காத ஒன்று...

இவரின் இத்தொகுப்பு முழுக்க இன்னும் சில சிறந்த கவிதைகள் உணர்வு என்னும் சிறகுகளிலிருந்து கவிதை என்னும் இறகுகளாக உதிர்ந்து காற்றில் மிதந்து நிலவொளிக்கு கற்பனை என்னும் வண்ணம் குழைத்து வர்ணம் அடித்துப் போகும் வித்தையினை உள்ளே வைத்திருக்கிறது. வாசகர்களே ஒரு முறையேனும் வாசிக்கக்கூடிய கவிதைத் தொகுப்புகளின் பட்டியலில் இத்தொகுப்பிற்கு நிரந்தரம் உண்டு என்று ஒரு வாசகனாய் கருதுகிறேன்...

கவிதைக்கும் கவிஞருக்கும் என் மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளோடும் கவிகள் மென்மேலும் சிறகசைக்க வேண்டுகிறோம்...