A few words about item

இஸ்லாத்தில் இசை - ஹலாலா ஹராமா? - தாரிக் அலீ

ஒவ்வொரு இனமும் அல்லது சமூகமும் தனக்கென்று சில பாரம்பரியங்களையும் பண்பாடு கலாச்சாரமும் கொண்டு வாழ்ந்து வருகின்றது. தங்களுக்கென்று, தன் இனத்திற்கென்று இசை, பாடல், கவிதை, சடங்கு, சம்பிரதாயங்கள் என பாரம்பரியமாக சில பழக்க வழக்கங்களை கொண்டு வருகின்றனர். எப்பொழுது அந்த இனம் ஒரு மதத்திற்குள் அடைபடுகிறதோ அப்பொழுது தங்கள் பாரம்பரியங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் அந்த மதத்திற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்வதோடு அந்த மதம் என்ன சொல்கிறதோ அதற்கேற்றவாறு சிலவற்றை நீக்கியும் சிலவற்றை ஏற்றுக் கொண்டும் வருகிறது.

உதாரணமாக தமிழர்கள் சங்ககாலத்தில் இருந்து இயல், இசை, நாடகம் என்ன வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கவிதையோடும் யாழ் போன்ற இசைக் கருவிகளோடும் பாரம்பரியமாக வளர்ந்து வருபவர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாம் என்னும் மதத்திற்கு சென்ற பொழுது அங்கு அவர்களுக்கு ஒரு சிக்கல் உண்டாகிறது. இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல என்பதே அது.

சமீபத்தில் ஒரு மௌலவியை நான் சந்தித்த பொழுது அவரிடம் இதே கேள்வியை கேட்டேன். அதற்கு அவருடைய பதில் குர்ஆனை ராகங்களோடு நாம் சொல்லலாம் ஆனால் மனிதன் கண்டுபிடித்த கருவிகளைக் கொண்டு வரும் இசையை நாம் பயன்படுத்தக் கூடாது என்றார். ஆனால் நாகூர் அனிபா என்ற  மிகச் சிறந்த பாடகர் தனது குரலால் இஸ்லாத்தையும் அதன் வழி வந்தவர்களையும் இஸ்லாமியர்கள் , இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்  வீடுகளில் கொண்டு சேர்த்தார் இசைக்கருவிகளின் துணியோடு. ஆக இஸ்லாத்தில் இசை ஹலாலா ஹராமா என்பது ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றவாறு அல்லது தனக்கு முன்பு சொன்னவர்கள் சொன்னதை அடி உற்றியும் அந்த கருத்தை மக்களுக்கு சொல்லிக் கொள்கின்றனர். இந்த விவாதத்திற்கு முடிவாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ வந்துள்ள ஒரு புத்தகம் அரபுலகின் முக்கிய இஸ்லாமியச் சிந்தனையாளர் கலாநிதி முஹம்மத் இமாரா அவர்கள் எழுதிய "அல் ஃகினா வல்மூஸிக்கா ஹலால் அம் ஹராம்" என்ற புத்தகம். தமிழில் அஷ்ஷெய்க் தாரிக் அலி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு மாற்றுப் பிரதிகள் வெளியீடாக  இஸ்லாத்தில் இசை ஹலாலா ஹராமா? என்ன வந்துள்ளது.

இச்சிறு நூல் கீழ்க்கண்ட நான்கு கட்டுரைகளுடன் 66 பக்கங்களில் வந்துள்ளது.

1. மொழி, குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் ஒளியில் பாடலும் இசையும்

2. கருத்து முரண்பாடு ஏன்?

3. மத்ஹப்களின் பார்வையில் பாடலும் இசையும்

4. கலைகள் பற்றிய ஒரு பொதுவான பார்வை

இஸ்லாத்தில் கேளிக்கையானது தடை செய்யப்பட்டதல்ல(ஹராமானதல்ல). ஆனால் அது எவ்விதத்திலும் தொழுகையை திசை திருப்பி விடக்கூடாது. எப்போது அது கடமைகளை(தொழுகையை) புறக்கணிக்கும்படி தூண்டுகிறதோ அப்போதுதான் அது ஹராமாக மாறும் என்று குர்ஆனின் பல்வேறு அத்தியாயங்களில் இருந்து பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார்.

இமாம் கஸ்ஸாலி(பஒஆ 1058-1111) அவர்கள் கூறியதாக கீழ்க்கண்ட கருத்தை எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

"ஊதுகுழல்கள் (இசைக்கருவிகள்) தொண்டைகள் எழுப்பும் ஓசைகள் மீது வைக்கப்பட்டுத் தான் இசையும் பாடலும் உருவாக்கப்படுகின்றன. அது அல்லாஹ் உருவாக்கிய, படைத்த ஒரு விடயத்தோடு மனிதர்கள் ஒப்பீடு செய்யும் ஒரு முயற்சியாகும். அல்லாஹ்வின் அந்தப் படைப்பு நுட்பத்திலிருந்து தான் மனிதர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் படைப்பையே மனிதர்கள் முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். எனவே, இத்தகைய ஓசைகள் சிறந்தவையாக, ஒழுங்கானவையாக இருக்கின்றன என்பதற்காக அவற்றைச் செவிமடுப்பது தடுக்கப்பட்டதாக இருக்க முடியாது" என்றும்  "மனிதத் தொண்டையில் இருந்து வெளிவரும் ஓசைகளும் தடிகள், மத்தளம், ரபான் போன்ற கருவிகள் மூலம் வெளிவரும் ஓசைகளும் ஒன்றே" என்றும் கூறி இஸ்லாம் கேளிக்கை, பாடல் மற்றும் இசை ஆகியவற்றை ஆகுமானவற்றின் பட்டியலிலேயே சேர்க்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு ஆதாரமாக, "ஸஹீஹுல் புகாரி என்னும் நபிமொழித் தொகுப்பில் பதியப்பட்டதாக கீழ்க்கண்டவற்றை கூறுகிறார்.

நம்பிக்கையாளர்களின் தாய் "ஆயிஷா"(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்: "ஒரு நாள் எனது வீட்டில் இரண்டு சிறுமிகள் புஆஸ் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த போது இறைத்தூதர் (ஸல்) வீட்டினுல் நுழைந்து தமது விரிப்பில் சாய்ந்து தமது முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அபூபக்கர் (ரலி) என்னைக் கடிந்து, அல்லாஹ்வின் தூதருக்கு முன்னிலையில் சைத்தானின் இசைக்கருவிகளை இசைப்பதா? என்று கேட்டார். அப்போது அபூபக்கரிடம் நபி அவர்கள் 'சிறுமிகள் இருவரையும் பாட்டுப்பாட விட்டுவிடுங்கள்' என்று கூறினார்.

இதிலிருந்து நபிகளார் வீட்டில் இரண்டு யுவதிகள் பாடுவதையும் அப்பாடலை ஆண்கள் கேட்பதையும் இங்கே நபியவர்கள் அனுமதித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பாடல் இசைத்த அவ்விரு யுவதிகளை விட்டும் நபி அவர்கள் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டது ஏன்? என்ற கேள்விக்கு 'பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல்' என்ற அடிப்படையில் செய்யப்பட்டதேயன்றி பாடல் கேட்பதை விட்டும் தமது காதுகளை மூடி கொள்வதற்காக அல்ல. அத்தோடு இந்த நபிமொழியின் அறிவிப்பாளர்களில் எந்த ஒருவரைப் பற்றியும் நபிமொழித் துறை அறிஞர்கள் எவ்விதக் குறையையும் கூறவில்லை என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்" என்றும் கூறுகிறார்.

மற்றொரு ஆதாரமாக நபி அவர்களின் நடைமுறை வாழ்வில் இருந்து இரண்டாவது நிகழ்வையும் ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்: "அது ஒரு பெருநாள் தினம். ஹபஷி நாட்டவர்கள் தோலினால் செய்யப்பட்ட மத்தளங்களையும், ஈட்டிகளையும் கொண்டு பள்ளிவாசலில் சில விளையாட்டுகளில் ஈடுபட்டனர். அது பற்றி நான் நபியவர்களிடம் சொன்ன போது, 'நீ அதைப் பார்க்க விரும்புகிறாயா? என்று கேட்டார். நான் 'ஆம்' என்றேன். பின்னர் நபியவர்கள் எனது கன்னம் அவருடைய கன்னத்தின் மீது படும்படி என்னை அவருக்குப் பின்னால் நிற்க வைத்து அவருடைய ஆடைகளால் என்னை மறைத்துக் கொண்டார்" என்று கூறுகிறார்.

மேலும் ஷஹீஹ் புகாரியில் பதியப்பட்ட மற்றொரு சான்றாக, ,பாடல் பாடும்படி நபி அவர்களே கோரிக்கை விடுப்பவராக, தூண்டுபவராக இருந்தார் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். அன்ஸாரித் தோழர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது நபி அவர்கள் ஆயிஷாவிடம், 'ஆயிஷாவே! உங்களிடம் கேளிக்கைகள் ஏதும் இல்லையா? ஏனெனில் அன்ஸாரிகள் கேளிக்கைகளைப் பெரிதும் விரும்புவார்கள், என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய வரலாற்றில் பாடல்கள் மற்றும் கேளிக்கைகள் குறித்து நிலவுகின்ற கருத்து முரண்பாடுகளுக்கு காரணம் , "வெறுப்புக்குரிய அல்லது தவறான கருத்துக்களை கொண்ட பாடல்களைத் தடை செய்யும் மார்க்கத் தீர்ப்புகளை(ஃபத்வா) சிலர் அனைத்து வகையான பாடல்களுக்கும் ஒரே தீர்ப்புகளை பொதுவாக வழங்கியதால் தான் என்கிறார். மேலும் பாடலையும், இசைக்கருவிகளையும் தடை செய்து வந்துள்ள குறிப்பிட்ட சில நபி மொழிகள் அனைத்தும் நபிமொழித்துறை அறிஞர்களின் படி பலவீனமானவை மற்றும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்பதையும் குறிப்பிடுகிறார்.

பாடல்கள் மற்றும் இசையை தடை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் கூறுகின்ற குர்ஆன் வசனம், "அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களை வழி கெடுப்பதற்காக சிலர் வீண் வார்த்தைகளை விலைக்கு வாங்குகின்றனர்.(குர்ஆன்:31:6)."

ஆனால் பாடல்கள் மற்றும் இசை ஆகியவை இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை என்று கூறுபவர்கள், இந்த வசனம் எப்போது எந்த நோக்கத்திற்காக சொல்லப்பட்டது என்பதை சான்றுடன் விளக்குகின்றனர். மேலும் சில ஆதாரமாக மார்க்கச் சட்டங்களைத் தெரிந்த அறிஞர்கள், முதுபெரும் தத்துவ ஞானிகள் மற்றும் சட்டவியல் அறிஞர்களின் மேற்கோள்களை தொகுத்துக் கொடுத்துள்ளார்.

"கலைகள் பற்றிய ஒரு பொதுப்பார்வை" என்ற தலைப்பில் வந்துள்ள இறுதிக் கட்டுரை, "இஸ்லாமும் அழகியல் கலைகளும்" என்ற தலைப்பில் அம்மான் நகர சுல்தான் காபூஸ் பல்கலைக் கழகக் கலைத்துறையில் 1997 ஆம் ஆண்டு நிகழ்த்திய விரிவுரையாகும். அவர் தனது உரையின் இறுதியாக, "இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி (ரஹ்)" அவர்களது கூற்றோடு கீழ்க்கண்டவாறு நிறைவு செய்கிறார். "இசைக் கருவிகளும் அதன் நரம்புகளும் சோலைகளும் அவற்றின் பூக்களும் யாரைத் தட்டியெழுப்பவில்லையோ அத்தகையவர்கள் இயல்பு கெட்டவர்கள். இந்நோய்க்கு மருந்துகள் எதுவும் இல்லை."

Total Number of visitors: 10

No of users in online: 8