A few words about item

முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள் - சூரியசந்திரன்

எழுத்தாளர் சூரியசந்திரன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிக்கைகளுக்காக நேர்காணல் செய்த ஆளுமைகளின் பேட்டிகள் "முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்" என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. இப்பேட்டிகள் "சாரதா", "இன்தாம் இணையம்" மற்றும் "புதிய புத்தகம் பேசுது" ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.

சாரதா இதழை நடத்தியவர் சூரிய சந்திரன் அவர்களே. மொத்தம் 20 ஆளுமைகளின் நேர்காணல்கள் இப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது. புத்தகத்தில் எழுத்தாளர்களின் நேர்காணல் மட்டுமல்லாமல் பதிப்பாளர்களின் பேட்டிகளும் இருக்கின்றன.

சூரியசந்திரன் அவர்கள் நேர்காணல் செய்த 20 ஆளுமைகள்: "தமிழ் புத்தகாலயம் - கண.முத்தையா", "பிரபஞ்சன்", "வல்லிக்கண்ணன்", "ஆ.இரா.வேங்கடாசலபதி", "சிகரம் ச.செந்தில்நாதன்", "ச.தமிழ்ச்செல்வன்", "சு.சமுத்திரம்", "ப.சிவகாமி", "பாரதிபாலன்", "வாசகர் வட்டம் - லட்சுமி கிருஷ்ணமூர்த்தி", "பாரி நிலையம் - க.அ.செல்லப்பன்", "ஸ்டார் பிரசுரம் - கண.இராமநாதன்", "சரஸ்வதி - வ.விஜயபாஸ்கரன்", "க.பஞ்சாங்கம்", "தியடோர் பாஸ்கரன்", "இந்திரன்", "இரா.நடராசன்", "தேனுகா", "கனிமொழி", "பத்மாவதி விவேகானந்தன்" ஆகியோர்.

கண.முத்தையா அவர்கள் தன் நேர்காணலில், "ராகுல் சாங்கிருத்யாய"னுக்கு தமிழ் தெரியும் என்றும், "திருமழிசையில் மூன்று ஆண்டுகள் தங்கி படித்திருக்கிறேன்" என்று தனக்கு குறிப்பு எழுதியதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சன் அவர்களின் நேர்காணலில், "அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதக்கூடிய சூழல் எப்படி உருவாயிற்று?" என்று கேள்விக்கு, "வி.பி.சிங்" அரசு "மண்டல்"ஐக் கொண்டு வந்த போது டெல்லி பல்கலைக்கழக மேல் சாதி மாணவர்கள் வீதிகளில் செருப்புக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் "ஏன்?' என்று கேட்டதற்குத், "தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எல்லாம் படித்து வேலைக்குப் போய்விட்டால் நாங்கள் இந்த தொழிலைத் தான் தான் செய்ய வேண்டி இருக்கும்" என்றனர். இதைப் படித்த போது என்னுள் ஏற்பட்ட கோபம்தான் என்னை அரசியல் கட்டுரைகளை எழுதத் தூண்டியது என்கிறார்.

"படைப்பிலக்கியவாதிகள் அரசியல்வாதிகளாக மாறலாமா?  என்ற மற்றொரு கேள்விக்கு,

"வானத்துக்குக் கீழே அரசியல் இல்லாத ஒரு விஷயத்தை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். எந்த காலத்தில் கலையும் இலக்கியமும் அரசியல் சார்பற்று இருந்தன.

'ஏகலைவன் கட்டை விரலைக் கேட்டது அன்பினால்' என்று எழுதுவது அரசியல் இல்லையா?

'ராமர் கோயில்' என்று எழுதும் ஒரு பத்திரிகை, மசூதியை மட்டும் 'பிரச்சினைக்குரிய இடம்' என்று எழுதுகிறதே... அது அரசியல் இல்லையா? என்று கேட்கிறார்.

"கம்யூனிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களாக மாறி வருகிறார்களே...?" என்ற கேள்விக்கு, "இது காலத்தின் கட்டாயம்". சாதியத்தின் வேர் வரணாசிரமத்தின் பிதா பிராமணியம். பெரியாரைத் தவிர்த்து ஒரு சமூகப் புரட்சி இங்கே ஒருபோதும் சாத்தியம் இல்லை" என்கிறார்.

"தமிழ், தமிழன் என்கிற தனித்துவ அடையாளம்..."
என்ற கேள்விக்கு, "தமிழனின் மொழியும் கலாச்சாரமும் பண்பாடும் ஆன்மீகமும் பாதிப்புக்குள்ளாகிறபோது தன்னைத் தமிழனாகவும், தமிழ் நாட்டுக்காரனாகவும் உணர வேண்டிய கட்டாயம் தமிழனுக்கு முந்தானது ஒன்றாக வேண்டும் என்று கூறுகிறார்.

ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் தம் நேர்காணலில் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

1. ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன், கேவலம் மாட்டிறைச்சி உண்ணும் ம் ஆங்கிலேய மன்னரின் பிரதிநிதியைப் புண்ணிய பாரத பூமியிலிருந்து ஒழிப்பதற்காகவே அவ்வாறு செய்தாக எழுதி உள்ளார்.

2. மார்க்சியத் தாக்கம் பெற்ற கோசாம்பி, ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், பிபன் சந்திரா, சுமித் சர்க்கார், கே.என்.பணிக்கர் போன்றோரால் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிப் போக்கு இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் உள்ளது என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், இன்று மதிக்கப்படும், பயன்படும் ஆராய்ச்சிகள் எல்லாம் இவர்களால் செய்யப்பட்டவை தாம். உலக அரங்கிலும் இவர்களுக்குத்தான் மதிப்பு. விசுவ இந்து பரிசத்தின் வரலாற்றாசிரியர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரை ஒன்றைக்கூட அனைத்துலக ஆய்விதழ் எதிலும் வெளியிட முடியாது.

3. சுயமரியாதை இயக்கக் காலத்தில் பெரியாரின் கருத்துக்கள் மலைப்பைத் தரக்கூடியவை.

4. சென்ற முப்பது, நாற்பது ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் பெரியது. உத்திரப்பிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் இது தெரியும்.

5. பிற்படுத்தப்பட்ட சாதியினர் இன்று அதிகாரம் உடையவர்களாக இருக்கிறார்கள். தலித் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு வருகிறது. தமிழ் அடையாளம் என்பது ஒப்பீட்டளவில் அதிக ஜனநாயகத் தன்மை உடையதாக உள்ளது. சிறுபான்மையினர், பெண்கள், தலித் ஆகியோரும் இந்த அடையாளத்தைப் பெருமளவுக்கு ஏற்றுக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் திராவிட இயக்கம்.

6. 'ஸ்ரீ' என்பதற்குப் பதிலாக 'திரு' என்ற அடை மொழியைக் கையாள வேண்டும் என்று 1940களில் பெரியார் இயக்கம் நடத்திய போது இரண்டொரு காங்கிரஸ்காரர்களையும் பிராமணர்களையும் தவிர எல்லோரும் 'திரு'வை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.

7. 50, 60 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் இப்போதுதான் வடக்கில் தொடங்கியுள்ளன. இந்திரா பார்த்தசாரதியும், என்.எஸ்.ஜெகந்நாதனும் தமிழகம் பின்தங்கி விட்டதாகப் புலம்பிக் கொண்டிருந்தாலும் உண்மை இதுதான்.

"இஸ்லாமியரின் வருகைக்குப் பின்னர்தான் இந்தியச் சமூகத்தில் தேக்கம் ஏற்பட்டது என்ற கருதுகோள் பற்றி..." என்ற கேள்விக்கு ஆ.இரா.வேங்கடசலபதி, "இதைப் பற்றி இந்தியாவின் மிகச்சிறந்த வரலாற்றறிஞராக மதிக்கப்படும் "கோசாம்பி" தெளிவாகவே எழுதியுள்ளார். பிராமணியத்தை கருத்தியலாகக் கொண்ட ஆளும் வர்க்கங்கள் என்றைக்கு நிலை பெற்றனவோ, உற்பத்திச் சாதனங்களின் உரிமையினையும், உற்பத்தி உறவுகளையும் தீர்மானிக்கிற சாதி அமைப்பு எப்போது இறுக்கம் பெற்றதோ, அன்றைக்கே தேக்கம் ஏற்பட்டுவிட்டது. இது இஸ்லாமியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது" என்று கூறுகிறார்.


ப.சிவகாமி அவர்கள்,  "என் குடும்பத்தினர்கூட படிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். படித்தாலும் அதை ஒரு விஷயமாகக்கூட கருதவில்லை. தீவிர வாசிப்பு வட்டங்களுக்குள்தான் இன்னும் நான் உழல்கிறேன்" என்று "உங்கள் எழுத்துகள் வாசகர்களை எந்த அளவு சென்று சேர்ந்திருக்கின்றன? என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

இதுதான் தமிழ்நாட்டின் உண்மை நிலவரம் மற்றும் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்றுகூட இதைச் சொல்லலாம். ஒரு எழுத்தாளரின் குடும்பத்திலேயே என்னென்ன புத்தகங்கள் எழுதியுள்ளார் என்னென்ன வெளியிட்டுள்ளார் என்று கூட பலரும் தெரியாமலே இருக்கின்றனர்.

வ.விஜயபாஸ்கரன் அவர்கள் தனது நேர்காணலில், தோழர் ஜீவாவுக்கும் தனக்கும் மனஉரசல் ஏற்படுவதற்கு அடிப்படை காரணம், "சரஸ்வதியில் க.நா.சு. எழுதுவது ஜீவாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த மாதிரியான ஆட்களை நம்ப பத்திரிகைகளிலே எழுத விடக்கூடாது என்பது ஜீவாவின் முக்கியமாக இருந்தது என்று கூறுகிறார். மேலும் க.நா.சு. சரஸ்வதி இலக்கியம் எழுதினாரே தவிர அரசியல் எதுவும் எழுதவில்லை என்றும் கூறுகிறார்.

அதே நேரத்தில் பதிப்பாளர்கள், "புத்தகம் வெளியிடுவது மதிப்புமிக்க தொழில் என்றும், ஒழுக்கமாக வாழவும், நல்லவர்களோடு பழகவும், எளிமையாக இருக்கவும் புத்தகங்கள் தான் கற்றுக் கொடுத்தன என்றும் கூறுகின்றனர். ஆம்! படைப்பு தொழில் செய்யும் இவர்களுக்கு புத்தகம் வெளியிடுவது பணத்தை தருகிறதோ, இல்லையோ இவர்களுக்கு அது ஆத்ம திருப்தியை தருகிறது என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

இப்படிப்பட்ட நேர்காணல் கொண்ட புத்தகங்களை நாம் படிக்கும் பொழுது நமக்கு பல புதிய செய்திகள், வெளிச்சங்களை திறந்து விடுகின்றன. மேலும் எழுத்தாளர்களின் மனநிலை, அவர்களின் எண்ணங்கள் பற்றி நாம் முற்றாக தெரிந்து கொள்ள இப்படிப்பட்ட  புத்தகங்கள் நமக்கு உதவுகிறது என்பதும் உண்மை.

Total Number of visitors: 20

No of users in online: 5