A few words about item

ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா

சாகித்ய அகாதமி விருது பெற்ற மேத்தா அவர்களின் கவிதை நூல் "ஆகாயத்துக்கு அடுத்த வீடு". இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2004. மொத்தம் 96 பக்கங்களில் நல்ல வழவழப்பான தாளில் இந்த நூல் வந்துள்ளது. இந்நூலில் இருக்கும் சில கவிதைகள் ஏற்கனவே "ஆனந்த விகடன்", "குமுதம்", "ஜூனியர் விகடன்", "பாக்யா" மற்றும் "தினமணி கதிர்" இதழ்களில் வெளிவந்தவை

இக்கவிதை நூலில் முதல் கவிதை "இந்தியா என் காதலி". முதல் கவிதையே சரவெடியாய் வெடிக்கிறது. அதிலிருந்து சில வரிகள்.

"எந்த நேரத்தில்
இடிப்பார்களோ
எந்த நேரத்தில்
வெடிப்பார்களோ
என்று
ஊர் ஊராகக்
கடவுள்
ஒழிந்து வாழ்கிறான்..."

எல்லோரும் தன் காதலியை கொஞ்சுவது உண்டு. இவரும் கெஞ்சுகிறார் "குற்றப் பத்திரிக்கை" என்ற தலைப்பில்.

குழந்தைகள்
கையில் கிடைத்த
பொம்மை போல்
உன் கையில்
கிடைத்திருக்கிறது
என் காதல்!

உருட்டி விளையாடு...
உடைத்து விடாதே!

ஒரு நாட்டின் சர்வாதிகாரிகள் தங்களுக்கென ஒரு பொய்யான வரலாற்றை பரப்புவார்கள். இருக்கின்ற வரலாற்றை அழிப்பார்கள். "வரலாறு" என்ற தலைப்பில் கவிதை ஒன்று பாடுகிறார் மு. மேத்தா.

அடையாளங்களையெல்லாம்
அழித்து விடுகிறார்கள்!

எப்படி அறிந்து கொள்வது...
கொலைகாரர் குரலையும்
குயில்களின் இசையையும்?

இந்த கவிதை இப்போதைய ஆட்சியாளர்களுக்கு(மோடிக்கு) பொருந்தும்.

திருமணம் முடிந்து புகுந்த வீடுசெல்லும் பெண்ணுக்கு மாமனாரோ மாமியாரோ அல்லது கணவனோ எவரேனும் ஒருவர் பிரச்சினையாய் இருப்பர். ஆனால் மு.மேத்தா சொல்லும் பெண்ணுக்கும் மூவருமே பிரச்சனைக்குரியவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண் பாடுவதாக இப்படி எழுதுகிறார் "அகமே புறம்" என்ற தலைப்பில்.

பழமொழிகளைச் சொல்லி
பயமுறுத்தும் மாமியார்
பொன்மொழிகளைச் சொல்லிப்
புண்படுத்தும் மாமனார்
தன் மொழியைச் சொல்லத்
தடுமாறும் கணவன்...

கடவுள் இருக்கிறார் என்பவர் சிலர், கடவுள் இல்லை என்பவர்கள் சிலர். ஆனால் மு. மேத்தாவின் கடவுள்கள், இடிந்து கிடக்கின்ற மசூதிகளிலிருந்தும், எரிந்து கிடக்கின்ற தேவாலயங்களிலிருந்தும், காயம்பட்டுக் கிடக்கின்ற கோவில்களிலிருந்தும் வந்து நம்மை நோக்கி ஒரே ஒரு கேள்வி கேட்கிறார்கள். "உங்களில் யாராவது / ஒரு மனிதன் இருந்தால் / வரச் சொல்லுங்கள் / ஒன்றாக நாங்கள் / உயிர்த்தெழுகிறோம்" என்று.

நமக்குத் தெரியும், இந்த இரண்டும் நடக்காதென்று.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தான் உண்டு; தன் வேலை உண்டு என்றிருந்தால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் அவர்களுக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்று காட்டுகிறார் மு.மேத்தா "சிறுகுறிப்பு வரைக - குஜராத் 2002" என்ற தலைப்பில்.

விருட்டென்று / குஜராத்தின் / வீதியொன்றில் / யானைகள் நுழைந்தன / திரும்பின! எதுவும் / நடக்கவில்லை... சில மனிதர்கள் புகுந்தனர் / திரும்பினர்! விழுந்து கிடந்தன / வீடுதோறும் பிணங்கள்... / காரணம் / மனிதர்களுக்கு / 'மதம்' பிடித்திருந்தது.

அதே நேரத்தில் ஒரு நாட்டிற்கு மதம் பிடித்திருந்தாலோ, இல்லை ஒரு தனி மனிதனை பிடிக்கவில்லை என்றாலோ அங்கு என்ன நடக்கும் என்பதை ஈராக் - 2003 என்ற கவிதையில் குறிப்பிடுகிறார்.

ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது...
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது!

மேலும் போரில் வெற்றி பெற்றவர்களை எல்லோரும் பாராட்டுகின்றனர். ஆனால் கவிஞர் 'வெற்றித்தூண்' என்ற தலைப்பில் ஒரு கவிதை பாடுகிறார்.

மகளிர் கூட்டம்
வரவேற்பளித்தது...
மலர்களைத் தூவி!

எதிரி நாட்டுப் பெண்களை
விதவைகளாக்கி வந்த
வீரர்களுக்கு!

இவ்வாறு மு.மேத்தா அவர்களின் கவிதைகள் சில மனதைத் தைக்கின்றன; சில மனதைத்
தாலாட்டுகின்றன; சில கவிதைகள் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன.

Total Number of visitors: 9

No of users in online: 6