செம்புலச் சாரல்கள்
செம்புலச் சாரல்கள் - இரா.திருப்பதி வெங்கடசாமி

செம்புலச் சாரல்கள் - இரா.திருப்பதி வெங்கடசாமி

கவிதை என்பது சமூகத்தில் மனிதனை இயல்பு நிலையின் சமநிலையிலிருந்து இறங்கி விடாமலும்,சமநிலையின் வரம்பை மீறி விடாமலும் இருக்க கவிஞன் சொற்களால் பயன்படுத்துகின்ற ஒரு நுண்ணியக்கலை, அக்கலை திரு இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்களுக்கு இயல்பாகவே அவரின் வரிகளில் ஆங்காங்கே நம்மை வியப்புர வைக்கிறது.

ஒரு புத்தகத்தின் வெற்றி என்பது வாசித்தலுக்குப் பின் வாசகனின் மனநிலையில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி அவனை மனதளவில் ஒரு படி உயர்த்தியிருக்க வேண்டும்.

அத்தகைய உயரத்தில் நம்மை உயர்த்தி வைக்கிறது இக்கவிதைத் தொகுப்பான "செம்புல சாரல்கள்"...

எனக்குப்பின் வரும் வாசகர்களுக்கு இவற்றில் ஒருசில வரிகளை எடுத்துக்காட்ட விளைகிறேன்.

யார் மனிதன்? என்கிற கவிதையில்,

"வேகமாய் நடந்து செல்ல 
என் பாதங்களில் பலமில்லை 
தவிப்போர்க்கு உதவிட 
என் கைகளில் உறுதியில்லை 
பிறருக்கு ஆணையிடும் கம்பீரம் 
என் குரலுக்கு இல்லை 
எவரையும் தாங்கும் சக்தி 
என் தோள்களுக்கும் இல்லை!
-----------------------------
-----------------------------
பட்ட மரம் போல் வாழ்கிறேன் 
யாருக்கும் பயனின்றி வாழ்கிறேன் 
வெற்றுடலின் உயிராய் வாழ்கிறேன் 
ஆனாலும் நானும் மனிதன்தான்!"

இவ்வரிகள் அனுபவத்தின் தக்கத்தில் உதித்தவையோ என்று எண்ணி, ஒரு சில நிகழ்வுகளில் நாமும் அப்படித்தான் என ஆறுதலுக்கு ஏங்குகிறது மனம்.

யாவும் ஊழல்...என்ற கவிதையில்,

நாட்டில் வளர்ச்சிக்கான 
இரத்தக் குழாயில் 
விழுந்த பொத்தல்.

இந்த உவமை வரிகள் சிந்திக்க மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சி மீதான ஐயத்தையும் ஏற்படுத்தி எதிர்காலத்தை நோக்கிய ஊழல் வினாக்களையும் எழுப்புகிறது.

உயிர்ப்பு என்ற கவிதையில்,

"தொடர் பயணங்கள் 
அடர் பணிச்சுமை 
இடர் தரும் உடல்நிலை 
இவற்றினூடே 
என்னை உயிர்ப்புடன் 
இயங்கச் செய்வது 
"நான் இருக்கிறேன்" என
அவள் தரும் புன்னகை!".

இவ்வரிகள் சமுதாய நெருக்கடி மற்றும் அது ஏற்படுத்தும் இயலாமை என்ற மனப்பாங்கையும் கொண்டு உண்மையாக வீட்டிற்கு உழைக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்குள்ளும் அவன் சரிபாதி தருகிற "நான் இருக்கிறேன் " என்ற அந்த ஒற்றை சொல்லே அவர்களை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

இலவசங்கள்...என்ற கவிதையில்,

இலவசமென்று 
எதுவுமில்லை இங்கு;
இயல்பாக வாழும் உரிமையை <
மறுத்ததற்குத் தரும் விலை.

இவ்வரிகள் இலவசங்கள் எல்லாம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் என்கிற போலித்தனத்தின் மேல் நம்மை நம்பவைத்து அதன் சுமையினை நம்மேல திணிக்கும் ஓருயுக்தி என்னும் சிந்தனையினைத் தூண்டிப்போகிறது.

நெடிய இரவு என்கிற கவிதையில்,

கண்கள் 
தூங்கு எனக்
கெஞ்சிகிறது;

உடல் 
ஓய்வெடு என 
வேண்டுகிறது;

என் முன்மொழிவிற்கு 
உன் ஒற்றை வார்த்தை 
மறுதலிப்பினால் 
என் செயல்கள் யாவும் 
எதிர்மறையாக நடக்கின்றன!

இரவுகள் நீள்வதில் 
தவறில்லை;
எண்ணங்கள் நீள்வதில் 
தவறில்லை;

என்னைவிட்டு 
நீ விலகிச் சென்றும் 
என் நினைவினின்று 
நீங்காதது தவறு!

அவள் விலகினாலும், அவளால் இதயத்தில் விளைந்த நினைவுகளின் சுவடுகள் நீங்காமல் ஒவ்வொரு இரவிலுமது பூத்துப்பூத்து விழிகளின் ஓரத்தில் கண்ணீரால் கோலமிடும் போது உள்ளுக்குள் ஒழிந்திருக்கும் உணர்வுகள் தன்னையறியாது தானே பிதற்றும் என்பதை வருடிக் காட்டுகிறது.

உத்தரவாதம் என்கிற கவிதையில்,

உத்தரவாதங்கள் எல்லாம் 
நிபந்தனைகளுக்கு உட்பட்டவை!

என்று முப்பரிமாண கோணத்தில் நம்மை வியக்கவைக்கிறது. உண்மைகளுக்கு அலங்காரம் தேவையில்லை என்பதற்கு இந்த நான்கு சொற்களே சாட்சியாகிறது.

வெல்லும் காதலைவிட
தோற்று விடுவோம் என்று 
தெரிந்து செய்யும் காதல்,
அழகானது, ஆழமானது!

உணர்வுகளும் உன்னதங்களும் ஒன்றியபின் பிரிவோம் என்று தெரிந்தும் எந்த எதிர்பார்ப்புகளுமற்ற காதல்கள் இன்னமும் யாருக்கும் தெரியாமல் இந்த பூமியில் எங்கோ யார்குள்ளோ அழகாய் பூத்து அவர்களுக்குள்ளாகவே ஆழமாக புதைகிறது 
என்பதை மெல்லிய வலிகளோடு புன்னகைத்து பேசுகிறது இவ்வரிகள்.

வீடு என்கிற கவிதையில்,

நான் தங்கும் 
இடமல்ல;
என்னைத் 
தாங்கும் இடம்!

வீடு என்பது வெறும் வீடன்று, அது இந்த உலகத்தால் தகர்க்க முடியாத பாதுகாப்பு மற்றும் ஆறுதலையும் தந்து இயலாமையிலிருந்து நம்மை அடுத்த நிலைக்கு ஏந்த நம்மை தாங்கிப்பிடித்திருக்கும் ஒரு மறைமுகச்சக்தியாக இருக்கிறது.

உறவுகள் என்கிற கவிதையில்,

ஆலமரமாகவும் 
அடிக் கரும்பாகவும் 
அமைய ஆசைதான்;
வளர்ப்பதென்னவோ 
தொட்டியில் வளரும் 
ரோஜாச் செடிதான்!

என்றோ பூக்கும் மலருக்கு முற்செடியெனத்தெரிந்தும் தினம் தினம் நீர் வார்த்து காத்திருக்கும் மனநிலையினை ஒத்தது தான் உறவுகள் தருகிற பயனுமென்பத்தை சொல்லாமல் சொல்லிக்காட்டுகிறது இவ்வரிகள்...

மற்றொரு கவிதையில்,

நமது தவறுகள் 
மன்னிக்கப்படுவது 
அவற்றின் விளைவுகளைத் 
தாங்கிக்கொள்ள முடியும் 
என்பதால் அல்ல!
நமது உறவு 
தொடர்வதற்காக!

ஆம், நம் ஒவ்வொரு தவறுகளும் மன்னிக்கப்படுவது நம் உறவின் மீதான கருணையால் மட்டுமேயன்றி வேறேதுகாரணங்களாளல்ல என்று முகத்திலறைந்து சொல்லிப்போகிறது இவ்வரிகள்...

இறுதியாக,

ஓடிக்கொண்டிருந்த 
அப்பாவின் கடிகாரம் 
அம்மாவின் 
இதயம் நின்றதும் 
நின்றுவிட்டது!
சாவி கொடுக்க ஆளில்லை!

இவ்வரிகள் உறவின் மீதான உயிர்ப்பு நிலையின் எச்சத்தையும் அவர்கள் போனபின் இவ்வுலகத்தின் மீதான பற்றற்ற மனப்போக்கையும் அவர்கள் வகுத்து கொண்டாடிய எல்லைக்கோட்டினையும் இறந்தகாலத்தோடே அவர்களும் கலந்து கரைந்து வாழும் நிலையினை யாராலும் மீட்டெடுக்க இயலாது என்பதை உணர்த்திப்போகிறது இவ்வரிகள்...

வாசித்து வாசித்து அசைப்போடக் கூடிய தொகுப்புகளின் வரிசையில் இத்தொகுப்பும் நீங்கா இடமொன்றை என் மனமெனும் அலமாரியில் பிடித்துக்கொண்டது இத்தொகுப்பு...

இந்நூலின் ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்துகளும் வணக்கங்களும்...