கடுதாசி நட்சத்திரம்
கடுதாசி நட்சத்திரம் - தர்மினி

கடுதாசி நட்சத்திரம் - தர்மினி

என்ன சொல்ல எத்தனையோ ஆண்டுகள் கடந்து வந்திருக்கின்றோம். இந்த வாழ்க்கையில் எத்தனை தலைமுறைகள் பார்த்த ஒன்று இந்தக் கவிதை.... அப்படி மிக நுணுக்கமான 'கூர் 'மங்காத ஆயுதமாக எப்பொழுதும் வலம் வருகிறது இவ்வுலகை.

பசிக்கும் பொழுது உணவு எப்படி தேவையோ, வெறுக்கும் பொழுது, வன்முறைக்கு எதிராக,  சமூகத்திற்கு புரட்சிக்கு இங்கே கவிதை  வித்தாகிறது...!

இந்த மகனுடைய வாழ்வில் கவிதை அன்றாடம் கலந்திருக்கிறது. அதை இப்படியும் பார்க்கலாம் அம்மா சமையல் செய்யும் தொடங்கி இரவு சாப்பாடு போடும் முறை எல்லா செய்கையும் கவிதை தான் பார்க்கும் விதம்.

இங்குள்ள ஒவ்வொரு கவிதையும் கவிஞருக்கே வாய்த்த தனி அனுபவம் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித சிந்தனையில் மின்னுகிறது.  கவிதையின் உள்ளே நுழையும் பொழுதே ரத்தமும் யுத்தமும் தெறிக்கிறது...... இப்பெரும் வாழ்க்கையை எப்படியாவது கடந்து விட வேண்டும் என்று நாட்களை ஓட்டுபவர் தான் கவிதையைத் துணைக் கொண்டவன். தனிமையை அவனுக்கான பாதையாக்கி வாழ்பவன். அப்படிப்பட்ட வாழ்க்கை எப்படி எல்லாம் இன்னும் வாழ்கிறது. எங்கோ வேறொரு மாநிலத்தில் வேறொரு தேசத்தில்.... சிறகடிக்கிறது.

இந்தக் காட்டில் எத்தனையோ கடிதாசிகள் யாரோ எடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால் மீண்டும் யாரோ ஒருவர் தான் படித்துப் பார்க்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் மட்டுமே பதிலெழுதியிருக்கிறார்கள்.

நானும் வாழ்ந்திருக்கிறேன்; நீங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டுக் கதவும் எங்கள் வீட்டுக் கதவும் ஒன்றாக இருக்காது. ஆனால் கதவு ஒன்றுதான்.

கதவு மூடப்பட்டிருக்கிறது
கொஞ்சம் திறந்த சாளரம்
ஊர்கிறது இருள்

இவ்வாறாக தொடங்கும் கவிதை மெல்ல  படம் பிடிக்கிறது நுணுக்கமான நிகழ்வை அன்றாடம்.

எனக்கும் மிக நீண்ட நாள் கழித்து ஒரு விதமான கவிதை நூலை வாசித்த அனுபவம்; ஒரு பயணம்; அப்படி இந்த பயணக் கவிதை....

நமது பயணங்கள் ஏதும் நாமாக தீர்மானிப்பதில்லை. தீர்மானித்ததே பயணமாக கருதுபவன் நான். அப்படி இந்தக் கவிதையும் என்னை ஒரு பெட்டகத்தில் வைத்து அடக்கி வைத்தது. உண்மைதான் பாருங்கள் இந்த கவிதையை,
இரகசியங்களைப் பொதிந்த‌ பெட்டகம்

உள்ளே சுடரெழுந்தலைகிறது

இந்த வாழ்க்கை எல்லாவற்றையும் இப்போதாவது வெளிகாட்டுகிறது. அது இளமையிலும் இருக்கலாம் அல்லது முதுமையில் முழுமையாக வெளிக்காட்டும் மெல்ல மெல்ல கொடி படர்ந்து பூ வைத்து கனி காயாகி காய்த்து தொங்குவது போல்.

முதுமையின் பக்குவம், கனிந்து விடும் சொற்கள். கவனிக்க வேண்டிய கவிதை.

இதுவே தன் கடைசியென்றான்
அவளுக்கு அவ்வளவு பெருமிதம்
"ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
எனக்கும் கூட இதுதான் கடைசி"என்றாள் 
எழில் கொண்டு 
மனதும் உடலும் வயதும் முதிர்ந்தவர்களாக 
அந்தக் 'கடைசி' எனும் சொல்
மெல்லிய வெயில்போல சுகமாகயிருக்கிறது

அப்போதிலிருந்து இப்போது வரை பாடலை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அதில் வேறுபாடுகள் இருக்கும். அப்படி ஓட்டுனரின் பாடல் தொகுப்பு கவிதை... இறுதி முடிவு எல்லோருக்கும் ஏற்றுகொண்டு ஒன்று.

சின்ன வாழ்க்கையின் நிம்மதிக்கு
ஒரு நாளைக்கு இரண்டு சினிமாப்பாட்டுக்கள்
போதும் போலிருக்கிறது.

இப்போதைய பாடல்கள் ஏதோ ஒரு சில பாடல்கள் கேட்கும் அளவிற்கு இருக்கிறது. ஆனால் பழைய காலத்துப் பாடல்கள் அனைத்தும் இந்த வரிக்கு உடன்படுகிறது.

இப்படியாக இந்தக் கவிதை தொகுப்பில் மிகவும் பிடித்தது ஆறுதல், அழகிய மேசையின் வெறுப்புக்கள், கடுதாசி நட்சத்திரம்.....போன்றவை. மற்றொரு கவிதை,குறிப்பாக ...

பரவாயில்லை 
பழக்கப்படுத்தப்பட்ட கதைகளைச் கசப்புடன் 
விழுங்கலாம்

எல்லோரும் அந்தக் கதையின் கசப்பை அப்போது மட்டும் விழுங்கி அடுத்த நாள் மறந்து விடுகின்றோம்.

இந்தத் தொகுப்பில் வன்முறைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் என்ற ஒரு கவிதை.... இன்னும் தொடர்கிறது அந்த வன்முறை என்பதை எதார்த்தமாக வெளிப்படுத்துகிறது. 

விருப்பமில்லாமல் எதையும் செய்ய முடியாது அல்லவா? அதை இந்தக் கவிஞர்  எப்படி சொல்லி இருக்கிறார்  என்று பாருங்கள்....

இப்போது, நேற்று, முந்தைய நாள்...
எனக்கு உவப்பில்லாத ஒன்றைத் தானே செய்தீர்கள்?

நீங்கள் அதை ஒப்புக்கொள்ளத் தேவையில்லை.

மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமா?
கேட்கப்பட வேண்டுமா?
ஒரு மன்னிப்பு
அப்போதைக்கு அப்போது ஒன்று

என்னிடம் நேசத் தழுதழுப்பு சுரக்க முன்னர்
கன்னத்தில் கிள்ளி விட்டேனே

ஐயோ....!
என் குழந்தாய் நோகிறதா?

செல்லப்பயலே...
இந்தா மறு கன்னத்திலொரு முத்தா.

வானத்துக்கு கீழ் அடைகிறது தூசி 
குடுவைக்குள் மெழுகுத்திரி சூவாலை 
பக்கென அணையுமோ சுடர். .....
சொற்களால் பலூன் பறக்கிறது.
மூச்சை ஊதுகிறாள்
பெண்ணிடமிருந்தும் ஆணிடமிருந்தும்
உயிர்கள் பரிமாறப்படுகின்றன 
நாகரிக நலம்.

நிச்சயம் எனக்கு மிகவும் பிடித்த கவிதை; அல்லது இப்பொழுதைய நவீன உலகத்திற்கு பொருத்தமான கவிதை....  இவ்வுலகில் நாம் எல்லோரும் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அனைவருமே தலை குனிந்து நடக்கிறோம். காரணம் கையளவு செல்போன். இன்றைய காலகட்டத்தில் மனிதரைப் பார்த்து நாம் சிரிப்பதில்லை. செல்போனை பார்த்து சிரிக்கிறோம் பைத்தியங்களாக.....அதற்கான கவிதைதான் இது. 

அம்மா அப்பாவின் கல்யாணப் படம் 
தொங்கவிடப்பட்ட சுவரில் 
பற்கள் ஒளிரும் சிரிப்பின் தெறிப்பு 
திடீரென்று கேள்வி கேட்கிறாள் குழந்தை 
"ஒளிப்படங்களில் சிரிக்கும் மனிதர்கள் 
உரையாடும்போது ஏன் சிரிக்கவில்லை"

இந்த தொகுப்பின் கடைசிக் கவிதை...

இவ்வாறாக முடிகிறது.
அன்று முதலாக இருந்த ஒன்றே
இன்று கடைசியானது 

இந்த வாழ்க்கையும் அப்படித்தானே. இந்த தொகுப்பு ஒரு முழு வாழ்க்கையை சின்ன சின்ன ஒளிப்படமாய் கவிதை வடிவில் மின்னுகிறது என்று சொல்லலாம். வாழ்வியல், சமூகம், சமூகத்தில் நடக்கும் சீரழிவு, வன்முறை .... என எல்லாவற்றையும் இந்தத் தொகுப்பு கடுதாசியாய் பதிவு செய்கிறது.....! இந்தக் கடுதாசி நட்சத்திரத் தொகுப்பு வேறு வேறு கோணங்களில் என்னை நீண்ட தூரம் இட்டுச் சென்றது.