விண்மீன்களின் விதைகள்
விண்மீன்களின் விதைகள் - செல்வகுமார்

விண்மீன்களின் விதைகள் - செல்வகுமார்

ஒரு மழைக்கால பின்னிரவு வேளையில் கவிஞர் சிரா.செல்வகுமார் அவர்கள் எழுதிய "மழையில் தொங்கும் சூரியன் "மற்றும் "விண்மீன்களின் விதைகள்" அதைத் தொடர்ந்து "ஈரம் உறிஞ்சும் முட்கள் " என்ற மூன்று ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளை ஒரு கோப்பைத் தேனீருடன் மெல்ல மெல்ல கரைந்துப் போனேன்...

பறவைகள் எவ்வாறு தன் மூதாதையர்களின் அனுபவங்களைக் கொண்டு தேர்ந்த சுள்ளிகளை சேகரித்துத் தனக்குத் தானே ஒரு கூடு அமைக்கிறதோ அதுபோல கவிஞர் தேர்ந்த சொற்களைக் கையாண்டு தனக்கென ஓரிடத்தை நிலை நிறுத்திக் காட்டி இருக்கிறார். இந்த மூன்று கவிதை தொகுப்புகளுக்கு உள்ளாக தனிமனிதனின் மாற்றத்திலிருந்து சமூகத்தின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடுகளையும்,அன்பையும், மாற்றத்தையும், இயற்கையின் எழிலையும் தன் எழுத்துக்களால் துல்லியமாய் காட்டுகின்றார்...

இதோ விண்மீன்களின் விதைகள் என்ற தொகுப்பில் இருந்து சில விண்மீன்கள் உங்களின் பார்வைக்காக...

நல்ல புத்தகங்கள் 
அடுக்கி வைப்பது வீண் 
படிக்கப் பழகு...

இவ்வரிகள் இன்றைய சூழ்நிலையின் காட்சிகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளில் ஒன்றாக கருதுகிறேன். ஏனென்றால், பள்ளி புத்தகங்களையே சுமையென கருத்தும் கால நிலையில் அனுபவ நூல்களையோ, இலக்கியத் தொகுப்புகளையோ எப்படி வாசித்து உணர்வான் நாளைய மனிதன். நல்லா புத்தகத்தை வாசிக்காமல் இருப்பது நமக்கு நாமே செய்யும் துரோகம் என்கிற பழமொழி நினைவுக்கு வந்து போகிறது....

பிஞ்சு நெஞ்சு 
எப்படித் தாங்கியதோ 
சிங்களன் துப்பாக்கி...

இவ்வரிகள், எந்நாட்டில் போர் மூண்டாலும் துப்பாக்கியின் ரவைகள் பிஞ்சுகளின் இளங்குருதியிலே நீராடி வெற்றிக்கு எக்காளாமிட்டு அறம் மறந்து போகும்.மாவீரன் எவனானலும் பிஞ்சுகள் மீது தன் வீரத்தை காட்டப்படாத வரையே அவனும் அவனைச் சார்ந்த காரணிகளின் மீதும் மதிப்பு இருக்க கூடும் என்பதைத் தாண்டி மனதின் ஒரு ஓரத்தில் வலியின் வடுக்களை தழுவி பார்க்கத் தூண்டுகிறது...

இரை தேடும் பறவைகள் 
அடுத்த முகாம் 
எந்த நாடோ...?

இவ்வரிகள் தாயகம் தொலைத்த பறவைகளை ஒப்பீடாக வைத்து எழுதி இருந்தாலும் அதனை அனுதினமும் அனுபவிக்கும் அவர்களையன்றி வேறு யாராலும் விளக்கயியலாத ரணங்களின் ராகம் இது...

கருப்பும் காக்கியும் 
தரகர் பிடியில் 
ஊமையாய் நீதி...

இவ்வரிகள் மீண்டும் மீண்டும் வாசித்து இயலாமையின் தொணியில் இதழ்களின் ஓரம் புன்னகைக்க வைக்கிறது, உண்மைகள் சில நேரம் ஹைக்கூ வடிவ கவிதைகளில் தான் அணுகுண்டின் வீரியத்தை வெளிப்படுத்த முடிகிறது என்பதை உணர்த்தும் வரிகள்...

இப்படி எத்தனையோ கவிதைகளை இந்த தொகுப்பில் விதையாக விதைத்திருக்கிறார் கவிஞர் சிரா.செல்வகுமார் அவர்கள்... 

கவிஞன் மற்றும் கவிதையின் வெற்றி என்பது எளிய மக்களின் சிந்தனைக்குள் நின்று பேசுவதாக இருக்க வேண்டும். அத்தகைய கவிதையும் கவிஞனும் காலத்தின் நெடும் ரேகையில் தன் பெயரைப் பதியவைத்துக்கொள்கிறான்... 

அப்படித்தான் கவிஞர் சிரா.செல்வகுமார் அவர்களும் அவரின் வரிகளும் நிலைத்து நிற்கும் என்பதை வாசிப்பின் அடி ஆழத்திலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது...

மென்மேலும் படைப்புகளும் படைப்பாளரும் சிறக்க என் அன்பும் வாழ்த்தும்...