A few words about item

மரபும் புதுமையும் - தொ. பரமசிவன்

பண்பாட்டியல் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் இதற்கு முன் எழுதிய "உரைகல்", "பரண்", "விடு பூக்கள்" ஆகிய புத்தகங்களில் இருந்து அரசியல் இழையோடும் 12 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு "மரபும் புதுமையும்" என்ற பெயரில் புத்தகமாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே எழுத்தாளர்கள் எழுதிய பல புத்தகங்களில் இருந்து சில குறிப்பிட்ட கட்டுரைகளை அல்லது கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை புதிய பெயரிலோ அல்லது தேர்ந்தெடுத்த கதைகள் என்றோ வெளியிடும் பழக்கம் தமிழ்ச் சூழலில் அதிகமாக இருக்கிறது. இது உவப்பானதாக இல்லை என்பது என்னுடைய கருத்து.

இந்த மரபும் புதுமையும் என்ற புத்தகத்தில் கட்டுரையுடன் சேர்ந்து ஒரு கேள்வி பதில் மற்றும் கூட்டங்களில் பேசிய உரை (2)  ஆகியவை சேர்ந்துள்ளது.

முதல் கட்டுரை 1995 - ஆம் ஆண்டு மதுரை அறிவுச் சுடர் நடுவத்தில் ஆற்றிய "மரபும் புதுமையும்" என்ற உரை. இதில் மரபு என்றால் என்ன? புதுமை என்றால் என்ன? இவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் என்ன என்று கூறுகிறார். என்றைக்கு யூரியாவும், காம்போசும் வயலில் இறங்கியதோ அன்றே வயல் உழுவை மீன் அழிந்தது. இதிலிருந்து பொருள் அழிகிறது. செயல் அழிகிறது. சிந்தனை அழிகிறது. ஒரு மரபின் பின்விளைவைக் கவனிக்காமல் முரட்டுத்தனமான அழிக்கும்போது அது எதுவரைக்கும் பாதிக்கிறது? என வினா எழுப்புகிறார்

தமிழ்ப் புத்தாண்டு பற்றிய கட்டுரையில், பொங்கல் மட்டும் ஓர் இனத் திருவிழா என்றும் பிறப்பு, இறப்புத் தீட்டுகள் கிடையாத விழா என்றும் நமது வாழ்க்கைக்கு அடிப்படையான உழவர்களுக்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழா என்றும் கூறுகிறார்.

வைதிகத்தின் (இந்து மதத்தின்) இருண்டமுகம் என்ற கட்டுரை, சமண கோயில்கள் எப்படி இந்துக் கோயில்களாக உருமாற்றம் பெற்றது என திருநெல்வேலி, சங்கரன் கோயில் ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களை வைத்துக் கூறுகிறார். மேலும் 20 - ஆம் நூற்றாண்டு எடுத்துக்காட்டாக சமணக் கோயில் வைதிகத்தால் பறிக்கப்பட்டு இந்துக் கோயில் ஆனதற்கு நாகர்கோயில் நாகராஜா கோயிலை குறிப்பிடுகிறார்.

இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? என்ற கட்டுரையில், "இராசராசன் தில்லையிலே அவன் காலத்திலேயும் நிலைபெற்றிருந்த பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிராகவே இக்கோவிலைக் கட்டியிருக்கிறான். தேவாரத் திருப்பதியங்களைப் பாட 48 பேரை நியமித்திருக்கிறான். அதன் விளைவாகத் தான் தில்லைக்கோவிலின் மேன்மையைக் கொண்டாடிய சேக்கிழார் தஞ்சைப் பெருங்கோவிலைப் பற்றி மறைமுகமாக வேனும் ஒரு சொல் பாடவில்லை" என்று எழுதியுள்ளார்.

ஜிதேந்த்ர பஜாஜ், மண்டயம் தொட்டமென ஷிரிநிவாஸ் இணைந்து எழுதிய 'அன்னம் பஹூ குர்வீத்' நூலை கிழித்தெறிந்து உள்ளார். இது காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை ஆகும்.

"டங்கல் என்னும் நயவஞ்சகம்"  என்ற கேள்வி - பதில் பகுதி, "டங்கல் திட்டம்" விவசாயம், விதைகள், விவசாயி, கல்வி, பொது விநியோக முறை(ரேசன்), ஜவுளித் தொழில் மொத்தத்தில் இந்தியாவை எப்படி அழிக்கும் என்று கூறுகிறார்.

மேலும் "பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலம் எல்லாம்", "தெய்வங்களின் உணவுரிமை", "இராமர் பாலம்", "சாதிய ஆய்வுகள் நேற்றும் இன்றும்", உலகமயமாக்கல் பின்னணியில் பண்பாடும் வாசிப்பும்" போன்ற கட்டுரைகளையும் இச்சிறு புத்தகம் கொண்டுள்ளது. 104 பக்கங்கள் கொண்ட இச்சிறு நூல் தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, கலாச்சாரம் பற்றி தமிழர்கள் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

Total Number of visitors: 3

No of users in online: 2