A few words about item

உலகால் அறியப்படாத ரகசியம் - எம்.எஸ்.உதயமூர்த்தி

கல்லூரி நாட்களில் நாவல்கள் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய "உலகால் அறியப்படாத ரகசியம்" என்ற புத்தகத்தை புத்தக கண்காட்சியில் வாங்க நேர்ந்தது. தலைப்பே இந்த புத்தகத்தை வாங்குவதற்குக் காரணம். இப்புத்தகத்தை பல்வேறு காலகட்டங்களில் பல தடவை படித்திருக்கிறேன். இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தானும் சாதிக்க முடியும் தன்னாலும் முடியும் என்று மனதில் எழுவது இயல்பு. இப்புத்தகம் மொத்தம் 174 பக்கங்களுடன் 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. 10 அல்லது 15 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு இளைஞர்களும் தன்னம்பிக்கை சார்ந்த நூல்களைப் படிக்க வேண்டும் எனில் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அல்லது மெர்லின் இவர்களின் புத்தகங்களை கட்டாயம் படித்து இருப்பார்கள்.

"உள்ளே இருக்கிறது மனம் எனும் சூட்சுமம்" என்ற முதல் அத்தியாயம், "நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்று நமது மனதைப் பற்றிக் கூறுகிறது நம்முடைய எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகிறது. தற்போதைய நிலைமைக்கு காரணம்  நமது எண்ணங்களே என்றும் எண்ணங்களைப் பற்றி உபநிடதம், பாரதி,  பைபிள், புத்தர் கூறியவற்றை சொல்லியுள்ளார்.

வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவுகளைக் காண புத்தர் கூறிய, "சரியாகப் புரிந்து கொள்", "சரியாக எண்ணு", " சரியானபடி பேசு", "சரியான செயல்களில் ஈடுபடு", "சரியான தொழிலைத் தேர்ந்தெடு", "சரியான முயற்சியில் ஈடுபடு", "சரியான சிந்தனை", "சரியான கவனம்" என எட்டு தாரக மந்திரங்களை விளக்கி உள்ளார்.

"சிந்தனை முறைகளைச் சீரமையுங்கள்" என்ற அத்தியாயம் நமது உள்ளுணர்வே நமக்கு வழிகாட்டி என்றும் நம்முடைய பழக்க வழக்கங்கள், குணங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் நமது எண்ணங்கள் - சிந்தனைகளே என்று கூறுகிறார்.

தன் மதிப்பைத் தரும் மனச்சாட்சி என்ற அத்தியாயம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும், நட்சத்திரங்களும் தனித்தும் இணைந்தும் இயங்குகின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு,எல்லை, ஒரு உரிமை இருக்கிறது. அந்த வரம்பு மீறப்படும்போது பிரபஞ்ச லயம் தவறி விடுகிறது. பிரபஞ்ச லயம் தவறும் போது அதன் விளைவுகளை அது அனுபவிக்கிறது. அதே நிலைதான் மனித வாழ்விலும். "எது எனக்கு மனநிறைவு தருகிறது?", "எது எனக்குப் பெருமை தருகிறது, நிம்மதி தருகிறது, மகிழ்வு தருகிறது, உறுதி தருகிறது? என உணர்ந்து நாம் வரம்பு மீறாமல் இந்த மனசாட்சியுடன் வாழ வேண்டும் என்கிறார்.

"கற்பனை ஒரு மகத்தான சக்தி" என்ற அத்தியாயம் நமது உணர்வுகளையும், உடலளவிலும், உடலுக்கு அப்பாலும், உயிரற்ற பொருட்கள் மீதும் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்று சில உதாரணங்கள் மூலம் காட்டி உள்ளார்.

"மாறுபட்ட சிந்தனைகளே மகத்தான கண்டுபிடிப்புகள்" என்ற அத்தியாயம், புதிய பிரச்சினைகளுக்கு வழிகாண, புதிய தேவைகளுக்கு ஈடு கொடுக்க, மாறிவரும் உலகைச் சமாளிக்க, புதிய - மாறுபட்ட சிந்தனை தேவை என்றும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் முன்னுக்கு வருவதைப் பற்றி கூறிய "எங்கிருக்கிறீர்களோ அங்கே; எது முடியுமோ அதை; எது இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு" என்ற வாசகத்தை கூறி, முதலில் ஆசை, பிறகு செய்ய வேண்டும் என்ற ஆர்வம், பின் 'முடியும்' என்ற நம்பிக்கை, அடுத்து புதுமை காணும் மனோபாவம் இதுதான் புதியன கண்டுபிடிக்க பாதை என்று கூறுகிறார்.

"தம்பீ, நில்! எங்கே ஓடுகிறாய்?" என்ற அத்தியாயம், இலட்சியத்தை அடைய எல்லோரும் ஓடுகிறார்கள் என்றும், ஆனால் அந்த பயணம் சுகம் தர வேண்டும் என்றும், எனது தேவை எவ்வளவு? எவ்வளவு அதிகம்? எது எல்லை? எல்லையை நான் வகுத்துக் கொண்டேனா? இல்லை வகுத்துக் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறேனா? என்று யோசிக்க வேண்டும் என்றும்? "உடலுக்கும், மனதிற்கும் ஏற்றதல்ல இந்த அவசரம்" என்றும், "வாழ்வில் எப்போதும் ஒரு நிதானம் - ஒரு சமநிலை வேண்டும்" என்றும் கூறுகிறார்.

"ஆன்மீக அடிப்படையிலிருந்து அன்றாட வாழ்வுக்கு..." என்ற அத்தியாயம், "இந்த உலகில் எதுவுமே காரண காரியத் தொடர்புடன் தான் நிகழ்கிறது. ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு காரணமும் ஒரு காரியத்தை நிகழ்த்துகிறது" என்று விளக்குகிறார்

"உலகால் அறியப்படாத ரகசியம்" என்ற அத்தியாயம், "நாம் ஒரு காரணத்திற்காக பிறந்திருக்கிறோம். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலப்போக்கில் அது தெரிய வரும் -  கவனம் செலுத்தினால்" என்று ஞானிகள் கூறிய சூட்சுமத்தையும், "நீ விரும்பியதைச் செய். உன் உள்ளுணர்வு சொல்வதைக் கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதைக் கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உன்னை உந்துகிறதோ அந்த வழியில் நட. அதிலே உனக்கு ஆத்ம நிறைவு கிடைக்கும்" என மனவியல் அறிஞர்கள் கூறியதையும் விளக்குகிறார்.

இவை மட்டுமில்லாமல், "முடிவெடுக்க உதவும் உள்ளுணர்வு", "'கரிஸ்மா' - இனம் புரியாத கவர்ச்சி", "விஞ்ஞானிகள் பெற்ற ஞானம்", வாழ்வில் மறைந்து கிடக்கும் நியாயங்கள்", "பிரபஞ்சமும் வாழ்வும் - ஒரே அச்சில்", "உள்நோக்கிய பயணம்"  என பல்வேறு தலைப்புகளில் நமது எண்ணங்களையும், எண்ணங்கள் தோன்றும் மனதையும், பிரபஞ்ச லயம் எவ்வாறு நம்மை முழுமையாக ஆட்கொள்கிறது என்பதையும் உதாரணங்களுடன் விளக்குகிறார்.

மனம் சோர்வடையும் போது படிக்க வேண்டிய புத்தகம் இது.

Total Number of visitors: 16

No of users in online: 3