A few words about item

கேரளாந்தகன் இராஜராஜன் - உளிமகிழ் ராஜ்கமல்

உத்தமசோழரின் 15 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இராஜராஜன் எங்கிருந்தார் என்று தெரியாத நிலையில் திடீரென 985 - இல் இணையரசராக பதவியேற்று 987 - இல் பேரரசராக பதவியேற்றார் என்றும் அதற்கு முன்-பின் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இப்புதினத்தை படைத்திருப்பதாக தன்னுடைய என்னுரை பகுதியில் தெரிவித்துள்ளார் ஆசிரியர் உளிமகிழ் ராஜ்கமல்.

தன் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை இராஜராஜன் கண்டுபிடித்தாரா? ஏன் கொன்றார்கள் என்ற கேள்விக்கு விடை கண்டாரா? கண்டுபிடித்த பின் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை பழி தீர்த்து தன் வஞ்சினத்தை தீர்த்துக் கொண்டாரா? என்பதை இந்நாவலில் விறுவிறுப்பாக் கொண்டு சென்றுள்ளார்.

மொத்தம் 384 பக்கங்கள் கொண்ட இப்புதினம் 50 அத்தியாயங்களைக் கொண்டு எல்லா அத்தியாயங்களின் தலைப்பும் "கேரளாந்தகன்" என்றே கொண்டுள்ளது.

ஒரு நாட்டின் மன்னன் என்றாலும் அவன் பேரரசராக இருந்தாலும் மற்றவர்கள் போல் ஆனந்தமாகவோ, உணர்ச்சிப் பூர்வமாகவோ எல்லோரையும் போல சிந்திக்கவோ முடியாது அல்லது கூடாது என்று இராஜராஜன் கதாபாத்திரத்தை உயர்த்தி காட்டியுள்ளார். இப்புதினம் கற்பனைப் படைப்பு என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் இராஜராஜன் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு அருமை.

"வேங்கையினை வென்று விட்டார்கள் என்றாலே நம்ப முடியாத போது கொன்று விட்டார்கள் என்பதை எப்படி ஏற்பது?" என்று ஆதித்த கரிகாலனின் நண்பரும், சோழநாட்டின் புதல்வி குந்தவையின் கணவருமான வல்லவரையன் வந்தியத்தேவன் நினைத்துப் பார்க்கும் காட்சி ஆதித்த கரிகாலனின் வீரத்தை வாசகர்களுக்கு சுட்டிக்காட்டுவதாகும்.

அப்படிப்பட்ட வீரனான ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைக் கண்டு பிடிக்க ஏறக்குறைய 13 ஆண்டுகள் ஆயிற்று இராஜராஜனுக்கு. காரணம் உறுதி செய்யாமல் எவரையும் தண்டிக்கும் வழக்கம் சோழத்தில் இல்லையென்பதால் ஆதாரங்களைத் தேடி அலைபாய்ந்தான் அருள்மொழி என்ற இராஜராஜன்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் முழுவதும் அந்தணர்களே என்றும் அதற்குக் காரணம் பாண்டிய மன்னன் வீரபாண்டியனை கொன்றதனால் தான் அவனுடைய ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனைக் கொன்றனர் என்று வெளியே தெரிந்தாலும் உண்மையான காரணம் ஆதித்த கரிகாலன் அவர்களுக்குரித்தான சதுர்வேதி மங்கலத்தினை அவர்களிடமிருந்து பிடுங்கி வேளாண் மக்களுக்கு வழங்கி அவர்களை விரட்டியடித்தமைக்காக ஆதித்தன் மேல் வன்மம் கொண்டு அவனைக் கொன்றனர் என்று இராஜராஜன் வாயிலாக கூறுகிறார் ஆசிரியர்.

இறுதியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் யார் என்று தெரியவும் அதிர்ச்சி அடைகிறான். இராஜராஜனால் மகுடம் சூட்டப்பட்ட சித்தப்பாவான அன்றைய மதுராந்தகனும் தற்போதைய சோழத்தின் அரசர் உத்தம சோழரின் பெயரும் அடிபடுகிறது.  சோழத்திற்காக சோழ தேசத்தின் குலப்பெருமை இழிவாகாமல் காக்கப்பட யாருமே எதிர்பார்க்காத முடிவுகளை எடுக்கிறான். ஆம். குற்றவாளிகளான ரவிதாசன், பரமேஸ்வரன், சோமன், மலையனூரான் மற்றும் உறவினர்கள் அனைவரையும் வடுவிக்கிறான்.

அவனது முடிவு தவறேன எல்லோரும் சொல்ல அதற்கான காரணங்களை எல்லோரிடமும் சொல்லி மக்களையும் சந்திக்கிறான்.

இதனிடையே காந்தளுர்ச்சாலைப் போர். இராஜராஜன் தன் நண்பரான சேர மன்னன் உடன் போர் செய்ய வேண்டியதாகிறது. தன் மகன் இராஜேந்திரன் உடன் சென்ற இராஜராஜன் வெற்றி பெற்றானா? இப்போருக்குப் பின் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ளார்.

நாவலில் எனக்கு பிடித்த கீழ்க்கண்ட வரிகளை வாசகர்களுக்குத் தருகிறேன்.
"வேங்கைக்கு வேட்டையாடுதல் மட்டுமே கடமை. வெற்றி தோல்வி குறித்து யோசிப்பதல்ல."

"நிதானத்தினை செயலிலும், வேகத்தினை உள்ளும் வை."

"ஒரு குற்றத்திற்கான தீர்ப்பு என்பது குற்றவாளிகளுக்கான தண்டனை என்ற ரீதியில் மட்டுமல்லாது
நிரபராதிகளுக்கான நிம்மதியான ஒன்றாகவும் அமைய வேண்டும்."

"அரசக் குடும்பங்களில் பிறந்தவர்கள்களின் விருப்பும் வெறுப்பும் அந்த நாட்டின் தலைவிதியை
நிர்ணயம் செய்யும்."

"எல்லாவற்றையும் அறிவால் ஆராய்வதை விட்டுவிட்டு சில விஷயங்களை மனதாலும் ஆராய
முற்பட வேண்டும்."

"சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுப்பவன் மனிதன். சூழலையே தனக்கேற்றவாறு அமைத்துக்
கொள்பவன் தலைவன்".

வாசகர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்கிறேன்.

Total Number of visitors: 15

No of users in online: 5