A few words about item

இந்தியப் பயணம் - ஜெயமோகன்

இந்தியாவை சுற்றி பார்க்கும் பொருட்டு செப்டம்பர் 4, 2008 அன்று தன் நண்பர்களுடன் பயணம் சென்ற ஜெயமோகன் அவர்கள் ஈரோட்டில் இருந்து ஆந்திரா வழியாக மத்தியப் பிரதேசத்தைக் கடந்து காசி, கயா வழியாக ஒரிசாவில் நுழைந்து அங்கிருந்து விசாகப்பட்டினம் வழியாக சென்னை வந்தடைந்தார். இந்த பயணத்தில் தாரமங்கலம், லெபாக்ஷி, பெனுகொண்டா, தாட்பத்ரி,  அகோபிலம், மகாநந்தீஸ்வரம், ஸ்ரீசைலம், நல்கொண்டா, பாணகிரி, வரங்கல், கரீம் நகர் -  தர்மபுரி, நாக்பூர் போபால், சாஞ்சி, கஜுராஹோ, பீனா, சத்னா, ரேவா, வாரணாசி, சாரநாத், போர்த் கயா போன்ற இடங்களுக்கு சென்று வந்ததை "இந்தியப் பயணம்" எனும் புத்தகமாக கொண்டு வந்துள்ளார்.

தனது பயணத்தைப் பற்றி புத்தகத்தின் இறுதியில், "எங்கள் பயணம் என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒரு டீஸ்பூன் அள்ளி கலக்கி ஒரு இந்திய ருசியை உருவாக்கிக் கொள்ள முடியுமா என்ற சோதனை தான்" என்று கூறியுள்ளார்.

இந்தப் பயணத்தில்  அவர்கள் முக்கியமாக அந்தந்த ஊரின் முக்கிய கோயிலைச் சென்று சுற்றி பார்த்ததே ஆகும். அந்தக் கோயிலைச் சுற்றி பார்த்ததோடு அல்லாமல் அந்தக் கோயிலின் கட்டடக்கலை, ஐதீகம், அந்த கோயிலின் சிற்பங்கள், கோயில் அமைந்த இடம், யாரால் கட்டப்பட்டது, அக்கோயிலின் சிறப்பியல்பு என எல்லாவற்றையும் வாசகர்களுக்கு தந்துள்ளார். அது மட்டுமில்லாமல் கோயில் அமைந்துள்ள அந்த ஊரின் தற்போதைய நிலை, தட்பவெப்ப நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள்  என்ன எல்லாவற்றையும் வாசகர்களுக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே நேரத்தில் அந்தக் கோயில்/ஊர், பேரரசு எப்படி இருந்தது? யாரால் சிதைக்கப்பட்டது? அல்லது எந்த பேரரசு காலத்தில் எப்போது அந்த ஊர் மறு உருவாக்கம் செய்யப்பட்டது என்பதையும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் கூறியுள்ளது சிறப்பு.

ஊரின் ஊடே செல்லும் பொழுது பசுமையான விளைநிலங்களையும், புதுமழையின் மண்வாசனையையும் விவரிக்கும் பொழுது நாமும் ஒரு பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதை நினைக்காமல் இருக்க முடியாது.

தன்னுடைய பெனுகொண்டா(ஆந்திரா) பயணத்தில் விஜயநகரப் பேரரசு எவ்வாறு உருவானது என்பதை கூறியுள்ளார் ஜெயமோகன் அவர்கள். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளகர்த்தரான மாலிக் காபூர் படையெடுத்து வந்து தென்னாட்டை சூறையாடி சென்ற பின் அரை நூற்றாண்டு காலம் அராஜகம் நிலவியதால் அந்த நிலையை கண்டு மனம் நொந்த வித்யாரண்ய ஸ்வாமிகள் அல்லது மாதவர் என்ற துறவி சிற்றரசர்களாகிய ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்களுக்கு ஒரு அரசை நிறுவும் ஊக்கத்தை அளித்தார். 1336-இல் அவ்வாறு உருவான அரசே விஜயநகரம்.

விஜயநகரம் பேரரசாக எழுந்து தென்னகத்தை முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து  இருநூறு வருடம் நீடித்தது. தென்னகத்தில் இந்துப் பண்பாடும் கலையும் அழியாமல் பாதுகாத்தது விஜயநகரமே. விஜயநகரத்தின் செல்வாக்கால்தான் தஞ்சையிலும் செஞ்சியிலும் மதுரையிலும் நாயக்கர் ஆட்சி உருவானது என்று கூறுகிறார். 1565-இல் தென்னகத்தில் இருந்த ஐந்து சுல்தான்கள் (பிரார், பிதார், அகமதுநகர், கோல்கொண்டா, பீஜப்பூர்) ஒன்று சேர்ந்து விஜயநகரத்தை போரில் வென்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

தனது பயணக் கட்டுரையின் ஓரிடத்தில், "சாதிக்குள் இருந்தபடி சாதியை உருவாக்கியமைக்காக பிராமணனை வைதுகொண்டிருக்கும் அபத்தத்தை விட்டு விலகி சாதியின் வேதபுத்தியை ஜனநாயகப்படுத்துவதும் சாதியின் சாதக அம்சங்களை பயன்படுத்த முடியுமா என்று பார்ப்பதுமே இப்போது செய்யக் கூடியதாக இருக்கும். நம்முடைய மரபில் சாதி மாபெரும் கூட்டு முயற்சிகள், அறக்காரியங்கள் ஆகியவற்றுக்கான அடிப்படை சக்தியாகவும் இருந்துள்ளது." என்று குறிப்பிடுகிறார்.

மேலும் இன்னொரு இடத்தில், "வங்காளிகள், மலையாளிகள் இரு சாராரும் தான் இந்தியாவில் அசிங்கமான பிராந்திய உணர்வு கொண்டவர்கள். அதற்குக் காரணம் இடதுசாரி அரசியல் என்பது ஒரு வேடிக்கை" என்று கூறுகிறார்.

மேலும் பல்வேறு இடங்களில் கோயில்கள் இடிபாடுகளுடனும், சிற்பங்கள் உடைந்தும் பராமரிக்கப்படாமல் காணப்படுவதாக வருத்தப்படுகிறார். மேலும் வரங்கல்லில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமலிங்கசாமி கோயிலில் காணப்படும் சிற்பங்கள் மிகச்சிறந்த சிற்பங்கள் என்று கூறுகிறார்.

நாக்பூரையும், கல்கத்தாவையும் ஒப்பிடும் பொழுது கல்கத்தா புதுமைமோகம், ஐரோப்பியமயமாதல் ஆகியவற்றுக்கான வேகம் கொண்டது என்றும் நாக்பூர் மரபு சார்ந்த நோக்கு, இந்தியத்தன்மைக்கான பிடிவாதம் கொண்டது என்றும் கல்கத்தா கம்யூனிசத்தை நோக்கிச் சென்றபோது நாக்பூர் இந்து மகாசபையையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் உருவாக்கியது என்று கூறுகிறார்.

பௌத்த சின்னங்கள் காணப்படும் அஜித்தா குகைகளுக்கு 1985-இல் சென்றபோது சுற்றுலா பயணிகள் ஓவியங்களை சுரண்டி பார்த்ததாகவும் சுரண்டிய காரை என்று சொல்லி சிலர் ஆண்மை விருத்திக்கு நல்லது என்று பொட்டலம் கட்டி விட்டார்கள் என்றும் அது கண்டு கொதித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் கூறி தனது பழைய நினைவுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

வரலாற்றுப் பாடங்களில், பௌத்த மதத்தில் ஹீனயானம், மகாயானம் என்று இரு பிரிவுகள் உள்ளதாக நாம் படித்திருப்போம். அவை உருவான காரணங்களை சொல்லியுள்ளார் ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள்.  அதாவது புத்தர் மறைவுக்கு பின்னர் மகாகாசியபரின் தலைமையில் விதிஷா(வேசாலி) நகரில் பௌத்த சங்கங்கள் ஒன்று கூடி முதல் பௌத்த மாநாட்டை நடத்தின என்றும் அப்போது உருவான கருத்து வேற்றுமையின் விளைவாக இந்த இரு பிரிவுகள் வந்தது என்றும் கூறியுள்ளார்.

தனது "போத் கயா" பயணத்தில் பௌத்தம் மேலும் மேலும் உட்பிரிவுகளை கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். உதாரணமாக போத் கயாவில் பிட்சுகள் பல வகையான ஆடை அணிந்தவர்களாக உள்ளனர். அவர்களில் காவியாடை அணிந்தவர்கள் மகாயானத்தின் பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்றும் மஞ்சளாடை அணிந்தவர்கள் தேரவாதிகள் என்றும் கடும் நிறம் உள்ள உடை அணிந்தவர்கள் வஜ்ராயனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

"கஜுராஹோ"வில் உள்ள பஜ்ரமத் கோயில் இந்து கோயிலாக இருந்து அதன் பின் சமண கோவிலாக மாறியதையும் தமிழ்நாட்டில் சமண கோயில்கள் கைவிடப்பட்டு பின்னர் இந்துக் கோயில்களாக உருமாற்றம் பெற்றதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சாரநாத் என்ற தொடரில் நான் கேள்விப்படாத படிக்காத ஒரு புது விஷயத்தை சொல்லியுள்ளார். "சமணர்களின் தலைமையகமாக இருந்த சாரநாத்திற்கு ஞானம் தேடி, அரசும் குடியும், குடும்பமும் துறந்து சித்தார்த்தன் வந்து சமணர்களில் ஒருவராக அமர்ந்து ஊழ்கம் பயின்றார் என்றும் பின்னர் அவர்களின் அதி உக்கிர தவத்தால் உடல் தான் நலிகிறது; மனம் கூடவே நலிவடைகிறது என்று அவர்களை விட்டு நீங்கி கயாவுக்குச் சென்று போதியின் அடியில் அமர்ந்து தவம் செய்து ஞானம் பெற்று புத்தராக ஆனார்" என்று கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம், ஆந்திரா ஆகியவை பொது சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன என்றும் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் எங்குமே ஆங்கிலம் ஞானமே கிடையாது என்றும் தமிழ்நாட்டில் குப்பை பொறுக்கும் சிறுவன் ஒருவனுக்குத் தெரிந்த ஆங்கிலம் கூட வடக்கே சட்டை பேண்ட் போட்டு பைக்கில் வரும் ஒருவருக்குத் தெரியாது என்றும் இந்த வட மாநிலங்களில் பல லட்சம் பேர் வேலை இல்லாமல் அலைகிறார்கள்; இந்தி படித்தால் வட மாநிலங்களில் வேலை கிடைக்கும் என்று ஒரு தரப்பு தமிழ்நாட்டில் சொல்கிறது; அதைவிட அபத்தம் வேறு இல்லை என்றும் ஆசிரியர் ஜெயமோகன் கூறுகிறார்.

உணவு உடை இருப்பிடம் இந்த மூன்றும் மக்களுக்கு அத்தியாவசியமானது. ஆனால் ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் தமிழகம் தாண்டி வடக்கு நோக்கி செல்கையில் இந்த மூன்றுமே மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று சுட்டி காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சிலர், வட மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன என்று கூறுவது ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல இது போன்ற ஒரு அபத்தம் வேறு இல்லை என்று தெளிவாகிறது. ஜெயமோகன் அவர்களின் இந்த பயணக் கட்டுரைகள் அவருடைய இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன. வாசகர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டுரையின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் போர் செய்து கோயிலை இடித்தனர் அல்லது அழித்தனர் என்று ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டோ அல்லது வேண்டுமென்றோ கட்டவிழ்க்கப்படுகிறதா என்று சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம்,

1. தென்னகத்தில் பல்வேறு கோவில்களை இடித்தனர் எனும் பொழுது தமிழகத்தில் ஏன் ஒரு கோயிலும் இடிபடவில்லை? எனவே இது சிலரால் திட்டமிட்டபடி இந்த வெறுப்பு பிரச்சாரம் உருவாக்கப்படுகிறதா?

2. ஆசிரியர் பல்வேறு இடங்களில் கோயில்கள் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    அ). இந்த அறிவியல் காலகட்டத்தில் இப்படி இருக்கின்ற பொழுது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள கோயில்கள் சாதாரணமாக சிதிலமடைந்து விடுவது இயல்பு தானே?

   ஆ). இப்படிப்பட்ட சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படும் இக்கோயில்கள் நாளைய வரலாற்றில் மீண்டும் இஸ்லாமியர்களால் இடிக்கப்பட்டன என்று எழுதப்படுமா?

3. மற்றொரு உதாரணமாக ஔரங்கசீப் தனது ஆட்சிக் காலத்தில் வாரணாசி விஸ்வநாதர் கோயிலை இடித்தார் என்று ஒரு அவதூறு பரப்பப்படுகிறது. ஆனால் கோவிலில் இருந்த அர்ச்சக பிராமணர் செய்த ஒரு சம்பவத்தின் காரணமாக இந்துக்கள் அதை இடித்து வேறு ஒன்று கட்டி தர வேண்டும் என்று ஔரங்கசீப் இடம் கேட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

4. ஒருவேளை ஔரங்கசீப் அந்தக் கோயிலை இடித்தார் என்றால் மற்ற கோவில்களை அவர் ஏன் இடிக்கவில்லை?

5. ஔரங்கசீப் அந்தக் கோயிலை இடித்தார் என்றால் அந்த கோவிலை மீண்டும் கட்டியது யார்?

6. ஔரங்கசீப் போன்றே திட்டமிட்டு அவதூறு செய்யப்படும் மற்றொரு  மன்னன் திப்பு சுல்தான். ஆனால் திப்பு சுல்தான் பல்வேறு கோவில்களுக்கு மானியங்களை வழங்கி உள்ளார் என்பதை தற்போது தெளிவாக தெரிகிறது.

7. தற்போதைய காலகட்டத்தில் கோவிலில் இருக்கும் சிலைகளை கடத்தப்படுகின்றன. எனவே அந்த காலகட்டத்திலும் இவ்வாறு நடந்ததை மறைக்க இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டதா?

காலம் காலமாக இஸ்லாமியர்களின் மீது இப்படி நடக்கும் இந்த அவதூறு அல்லது பழிச்சொல்களை இஸ்லாமியர்களால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். எப்பொழுது இச்சமூகம் கல்வியின் பின்புலத்தில் நுழைகிறதோ அப்பொழுது அந்த சமூகம் மேம்படும் மற்றும் இப்படிப்பட்ட கதைகளும் அவதூறுகளும் முடிவுக்கு வரும்.

Total Number of visitors: 18

No of users in online: 7