A few words about item

இந்த இவள் - கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் அவர்கள் தனது 96 வயது நிறைவில் எழுதிய புதிய குறுநாவல் "இந்த இவள்". மொத்தம் 200 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் ஒரு பக்கத்தில் கி.ராஜநாராயணன் அவர்களின்  கையெழுத்தையும் மறுபக்கம் அச்சு எழுத்தையும் கொண்டுள்ளது. இந்த 96 வயதிலும் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் எழுத்துக்களைக் கோர்வையாக எழுதி இருப்பது இந்த கரிசல் காட்டுக் கலைஞரின் சிறப்பு.

"இந்த இவள்"...யார் இவள்? அவள் பெயர் பூச்சம்மா. சின்ன வயதிலேயே வெள்ளைச் சேலை கட்டிய கைம்பெண். கி.ராஜநாராயணன் இவளை இப்படி எழுதுகிறார். "கணவனை இழந்த பிறகு கண்டாங்கிச்சேலையைக் கட்ட முடியாது என்று சொல்லி காரிக்கன் நிறம் கொண்ட சேலையை அணிபவள். ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்கும்போது மட்டும் சாப்பிட்டு, தூங்கும்போது தலைக்கு அணைவைத்துக்கொள்ளாமல், தலையை மண்ணில் வைத்துக்கொண்டு படுப்பவள். வெறும் காது, வெறும் கழுத்து, வெறும் கை, வெறும் கால், வெறும் வெத்து மனுசி. பார்க்கும்படியாக இருப்பது வெளேர் என்ற அவளுடைய மாட்டுப்பற்கள் மட்டுமே. தலை கொள்ளாத கருங்கூந்தல்".

இப்படிப்பட்டவள் என்ன செய்கிறாள் என்றால்,யார் வீட்டுக்கு போனாலும் அவர்களுக்கு விழுந்து விழுந்து வேலை செய்கிறாள். விசேசவீடுகள் - அது கல்யாணமோ காடேத்தோ - சமன் இல்லாமல் ஆஜராகி விடுவாள். அவர்களும் சரி என்று விட்டு விடுவார்கள். அது மட்டுமில்லாமல் வீட்டின் பெண்கள் பகுதிக்குப் போய் ராத்திரியில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருப்பாள். இவளுடைய பேச்சே அவர்களைத் தூங்க வைத்துவிடும்.

வீட்டில் உள்ள மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் தான் கற்றுக் கொண்ட மருத்துவத்தை பயன்படுத்தி ஒரு மாட்டிற்கு பிரசவம் பார்த்து உதவுகிறாள்.

மேலும்  கிராமத்தின் வெள்ளந்தியான மனிதர்களின் பாசம், அடுத்தவர்களின் கண்ணீரைப் பார்த்து உதவும்  தன்மை, ஒரு பெண்ணின் தனிமை, காமம், அவளின் சிறுவயதில் நடந்த கிண்டல், கேலிப்பேச்சுகள்  என இக்குறுநாவலைப் படைத்துள்ளார்.

இக்குறுநாவல் நடுநடுவே சிறுசிறு உபகதைகளையும் கொண்டுள்ளது. அதில் ஒன்று இனிப்புகளை தின்னும் ஒரு குடும்பத்தின் கதை; மற்றொன்று மூக்குப்பொடியை  மக்களுக்கு  கொடுத்து உதவும் மூக்குப்பொடி நாயக்கர் கதை.

கரிசல் காட்டு மக்களை கி.ராஜநாராயணன் அவர்கள் கூறும் பொழுது,
"மழைகள் ஒழுங்கா முறைப்படி பேய்ஞ்சிக்கிட்டே இருந்தா கரிசல்க்காரன் ராஜாதான். ஒருத்தனையும்
மதிக்க மாட்டாம்.
கிள்ளிக் கொடுக்க வேண்டிய இடத்திலெல்லாம் அள்ளிக் கொடுப்பாம். காலு
மேலெ காலு ரடணக்காலு போட்டுக்கிட்டு எவண்டா எனக்கு நிகரு? ங்கிற மாதரி நிமிந்து பேசுவாம்."

என்று கூறுகிறார்.
இக்குறுநாவலின் இடையிடையே பல சொலவடைகளையும் நிதர்சனங்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார் இந்தக் கரிசல் காட்டுக் கலைஞர்.

"ஏழு சுத்துச் சுத்தி வந்தா எருமை மாடும் சொந்தந் தாம்."
"கரும்பு தின்னவனுக்குக் கரும்பு ருசி; வேம்பு தின்னவனுக்கு வேம்புதான் ருசி"
"ஆமணக்கு விதைகளைச் செக்கில் போட்டு ஆட்டினால் எண்ணெய்; ஆட்களை வேலையில் போட்டுப்
பிழிந்தால் செல்வம்."
"மனுச சமூகத்துக்குப் புத்தி கிடையாது; புத்தி இருந்ததில்லை எப்பவும். இருந்திருந்தால் அற நூல்கள்
ஏன் இந்த அளவுக்கு?"
"பெண்களுக்குத் தீங்காக அமைவது போர்களும் பஞ்சங்களும் தான். அடுத்தது அவர்களுடைய
சம்மதம் கேட்காமலேயே தூரத்தில் கட்டிக் கொடுத்து அனுப்பி வைத்து விடுவது."

முதல்முறையாக கி.ராஜநாராயணன் அவர்களின் கதையைப் படிப்பவர்களுக்கு  இப்புத்தகம் சற்று தடுமாற்றத்தையே கொடுக்கும். இப்புத்தகம் முன்னுரை, பின்னுரை என்றில்லாமல் நடுவுரை என்ற ஒன்றை கொடுத்துள்ளார் கி.ராஜநாராயணன் அவர்கள்.

Total Number of visitors: 19

No of users in online: 3