A few words about item

காருவகி - இளவேனில்

கலிங்கப் போர். வரலாற்றுப் பாடத்தில் மன்னர் அசோகர் கலிங்கப் போரினால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளை பார்த்து இனி போர் புரிவது இல்லை என அகிம்சையைப் பின்பற்றத் தொடங்கினார் என்று படித்திருப்போம். அசோகர் போரிட்ட அந்தக் கலிங்கப் போரில் அவரை எதிர்த்து போரிட்ட மன்னர் யார் என்பது பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்படாமல் கலிங்க மன்னருடன் நடந்த போர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

இளவேனில் அவர்கள் எழுதிய காருவகி என்ற சரித்திர நாவல் இதற்கு விடை கூறுகிறது. நாவலுக்குள் புகுமுன் கலிங்கப் போரில் ஈடுபட்ட மௌரியப் பேரரசன் அசோகரை சற்று திரும்பிப் பார்ப்போம்.

மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தர் பேரன் தான் இந்த அசோகர். அசோகரின் தந்தை பிந்துசாரர். அசோகரின் தாய் சுபத்ராங்கி, பிந்துசாரனின் அரண்மனையில் இருந்த இராணிகளுக்கு சிகை அலங்காரம் செய்து ஒப்பனை செய்யும் நாவிதப் பணிப்பெண்ணாக வந்தவள். இவள் அழகை கண்ட பிந்துசாரன் தன் மனைவியர் கூட்டத்தில் ஒருத்தியாக்கி விட்டான். அசோகர் அரசனுக்கு பிறந்தாலும்  அழகில்லாமல் பிறந்ததால் ராணிகள், ராஜகுமாரர்கள் மற்றும் பணிப்பெண்கள் எல்லோரும் நாவிதச்சி பெற்ற பிள்ளை என்று இழிவுபடுத்துகிறார்கள்.

இளவேனில் அவர்களுக்கு அசோகரைப் பற்றி சில ஐயங்கள் எழும்ப அதனை நோக்கி அவர் செல்லும் பொழுது அவருக்கு  2 முக்கியமான கேள்விகள் எழுகின்றன.அவை,

1. கலிங்க மன்னன் அசோகனின் தாத்தாவாக இருக்கும் போது, கலிங்கப் போரில் அசோகன் தன் தாத்தாவை எதிர்த்தா போரிட்டான்?

2. கலிங்கப் போரின் போதும், கலிங்க மன்னனின் உதவியுடன் தான் அசோகன் போரிட்டான். எனில், அசோகனுடன் கலிங்கத்தில் போரிட்ட அந்த மன்னன் யார்? இவைதான் அக்கேள்விகள்.

அக்கேள்விகளுக்கான விடையே காருவகி எனும் நூல்.

சரி. கதைக்கு வருவோம்.

சோழ நாட்டின் வடமேற்கு எல்லைப்புறத்தில் அன்னமிஞிலி என்பவள் தன் தந்தை திரையனுடன்(சோழ நாட்டு கப்பல் தலைவன்) வாழ்ந்து வருகிறாள். அவர்கள் இடத்திற்கு அருகில் நெல்லியங்கோடு என்கிற மருத்துவர் சோழ மன்னர் இளஞ்சி சென்னி கட்டி வைத்திருக்கும் சத்திரங்களில் ஒன்றை பராமரிப்பதற்காகவும் தங்கிச் செல்வோருக்கு உதவி செய்வதற்காகவும் அவருடைய மனைவி மருதி, மகள் பீலிமா ஆகியோருடன் சத்திரத்துகு அருகிலேயே வாழ்ந்து வருகிறார்.  நெல்லியங்கோடு சத்திரத்தின் ஒரு பகுதியை விரிவுபடுத்தி அதை அறிவு களஞ்சியமாக மாற்றி வைத்திருக்கிறார். அன்னமிஞிலி ஒவ்வொரு நாளும் காலையில் தன் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் வீடு திரும்புவாள்.

இந்நிலையில் ஒருநாள் சத்திரத்தை முகமூடிக்காரர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். திரையன் முகமூடிகளுடன் போராடுகிறார். ஆனால் அவர்கள் தப்பி செல்கின்றனர். பிடிபட்ட ஒருவனிடம் விசாரிக்கும் பொழுது கலிங்க நாட்டு அரசர் மேகவாகனன் படைத்தளபதிகளில் ஒருவன் ஏற்பாடு செய்ததாக கூறி அரசர் மேகவாகனன் பாழிக்கோட்டையில் தங்கி உள்ளதாக கூறுகிறான். இந்த பாழிக்கோட்டை தமிழ் மன்னர்களில் தென்னாட்டின் சிற்றரசன் ஒருவனான துளுநாட்டு நன்னனின் கோட்டை.(நன்னன் வீழ்ந்தது தனிக் கதை).

இந்நிலையில் அன்னமிஞிலியின் மாடுகளையும் மோரியர்கள் தூண்டி விட்டு கோசர்கள் கவர்ந்து செல்கின்றனர்செல்கின்றனர்.  நியாயம் கேட்கச் சென்ற திரையனின் கண்களையும்  கோசர்கள் குருடாக்குகிறார்கள். இதனை கேள்விப்பட்ட மன்னன் இளஞ்சேட் சென்னி வந்து பார்க்கிறான். அவன் வரும்போது தன் படை வீரர்களுடன் வந்திருக்கிறான்.

இவற்றிற்கெல்லாம் மூல காரணம் தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பட்ட கௌடில்யர்.(நாட்டில் தீய வழிகளிலே மூளையைப் பழக்கி, உறவினர்களையும், ஊரையும் துண்டாக்கிப் பேரழிவைக் கண்டு தன் திறமையை மெச்சிக் கொள்கிறவன் - குடி கெடுக்கிறவன் - குடிலன் என்பர். குடிலன் என்ற பெயர் வடநாட்டவர்களின் உச்சரிப்பில் கௌடில்யன் என்றானது). அவரது ஒரே குறிக்கோள் சந்திரகுப்தரையும் அவரது வாரிசுகளையும் பயன்படுத்தி அகன்ற வேத சாம்ராஜ்யம் அமைப்புதான்.எனவே கௌடில்யர் என்ற சாணக்கியர் மௌரியப் பேரரசசிற்கு உட்பட்ட பகுதிகளில் அறநூல்களை தீயில் கொளுத்தி பௌத்தர்களையும் கொல்கிறார். தமிழர்களின் தடங்களையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் அழித்தால்தான் தனது இலக்கை எட்ட முடியும் என்று நினைத்து மெளரியர்களைத் தூண்டுகிறார்.

முதல் நாள் மோரில் மௌரிய வீரனாலயே அசோகன் தாக்கப்படுகிறான். இதற்குக் காரணம் அவனது அண்ணன் சுசீமன். இந்த சுசீமன் பிந்துசாரனின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவன். கலிங்கத்தை அடுத்து ஆளப்போவது யார் என்ற போட்டியில் அசோகனை கொல்ல முயற்சிக்கிறான். போரில் முதலுதவி செய்வதற்காக வந்த அன்னி அசோகனை காப்பாற்ற முயற்சிக்கிறாள் ஆனால் இறுதியில் அசோகனின் வளர்ப்புத் தாய் உலும்பினி என்ற பெண்ணின் வீட்டில் வைத்து அவளே குற்றவாளியாக்கப்படுகிறாள்.

கொலைக் களத்தில் அன்னி புத்தநெறிகளைப் பரப்பி வரும் உபகுப்தரால் காப்பாற்றப்படுகிறாள். மேலும் போரிலே அசோகனது படைபலமும் குறைந்ததால் கௌடில்யர் எண்ணப்படி பின்வாங்குகிறான். இதற்கிடையில் உலும்பினியால் அசோகருக்கு தன்னை கொல்ல வந்தவள் அன்னி அல்ல என்று தெரியவருகிறது. மேலும் சுசீமனும் அசோகனால் கொல்லப்படுகிறான். அசோகனாலும் அவனுடைய ஆட்களாலும் ஆபத்து ஏதேனும் நேரலாம் எனக்கருதி புத்தமடத்தில் காருவகி(உலகம் செழிக்க வரும் மழை மீது உவகை கொள்ளும் மயில் - கார் உவகி) என்னும் பெயருடன் அன்னி இருக்கிறாள். உலும்பினியும் அவளை தேடி புத்த மடம் வந்து சேர்கிறாள். கொடூரமாய் இருந்த அசோகன் இப்போது அன்னி மீது காதல் கொண்டு கண்ணீர் வடிப்பதுடன் பொய் சொல்லவும் கற்றுக் கொள்கிறான்.

ஒரு நாள் அசோகன் அன்னியிடம் தன் காதலைச் சொல்கிறான். அவளோ, "உலகமே போற்றிப் புகழும் ஒரு மாமன்னராக நீங்கள் உயர்ந்த இடத்தை பெற வேண்டும். அந்த இனிய நாள் வரும் வரை உங்கள் நினைவு என்னைக் காத்திருக்கும்" என்கிறாள். ஓய்ந்திருந்த போர் மறுபடியும் தொடங்கியது. தமிழ்நாட்டின் எல்லையில் தொடங்கிய போர் இப்போது கலிங்கத்தின் மத்தியிலே நடந்தது. அசோகன் சோழ மன்னன் சென்னியை வீழ்த்தவேண்டும் என்பதிலேயே குறியாய் இருந்து சுற்றிச் சுற்றி வந்தான். ஆனால் அசோகனால் சென்னியை நெருங்கவே முடியவில்லை. அவனுடைய வீரர்கள் கொத்துக் கொத்தாய் செத்து வீழ்வதையே பார்க்க முடிந்தது. போரிலே அசோகன் தாக்கப்பட்டு அவனது குதிரையால் இழுத்துச் செல்லப்படுகிறான். பின்னர் என்ன ஆனான் என்று தெரியாமல் போகிறது. அதே நேரத்தில்  "ஊன் பொதி பசுங்குடையார்" என்ற பலவர்,

".......இரும்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பினை உடைய களிறு ஒன்று தருக!" என்று பசியால் வாடி கையேந்தி துயரத்துடன் இளஞ்சேட் சென்னியிடம் பாடுகிறார். மன்னன் இளஞ்சேட் சென்னி உதடு கடித்துச் சிரிக்கிறான். மேலும் இளவரசரைக் காணவில்லை என்கிற செய்தி மௌரிய வீரர்கள் மத்தியில் வேகமாக பரவுகிறது. எதிரிகள் முன்னேறிக் கொண்டே இருப்பதைத் தடுத்து வெற்றியை நம் பக்கம் திருப்ப சத்ரு சங்கர யாகம் செய்யலாம் என்ற ஆலோசனைக்கு  கௌடில்யர் சம்மதம் தெரிவிக்கிறார்.

கடைசியில் அசோகன் என்ன ஆனான். மன்னர் இளஞ்சேட் சென்னியின் நிலை என்ன? அசோகன் காருவகி காதல் என்ன ஆயிற்று? கௌடில்யர் என்ன ஆனார்? இதனை கடைசி மூன்று அத்தியாயங்களில் சொல்லி முடிக்கிறார் காருவகி ஆசிரியர் இளவேனில்

Total Number of visitors: 1

No of users in online: 1