A few words about item

மனசாட்சியை தட்டி எழுப்பும் நூல்

“எவிடன்ஸ் கதிர்” என்ற பெயரைக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள், சாதியப் பாகுபாடுகள் ஆகியவற்றிற்கெதிராகக் களப்பணியில் ஈடுபட்டு வருபவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நீதியை பெற்றுத்தர இடைவிடாது பாடுபட்டு வருபவர். கடந்த 20 ஆண்டு காலமாக தான் தலையிட்ட பிரச்சனைகள், எதிர் கொண்ட சவால்கள், படிப்பினைகள் ஆகியவற்றை தொகுத்து ‘சாதி தேசத்தின் சாம்பல் பறவை’ என்ற இந்த நூலை வழங்கியுள்ளார்.நூலில் குறிப்பிட்டுள்ள கொடுமைகள், சம்பவங்கள் பலவற்றை ஏற்கனவே அறிந்திருந்தாலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டிருந்தாலும் தொகுப்பாக படிக்கிறபோது, இவ்வளவு கொடுமைகளா, இத்தனை விதங்களிலா என்ற பேரதிர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.நூலைப் படித்து முடிக்கும்போது காவல் நிலையம், நீதிமன்றம், அதிகார வர்க்கம்,

அரசியல்வாதிகள், களம் என அனைத்துமே எல்லாவற்றையும் இழந்து அம்மணமாய் நிற்பதுபோல் தோன்றுகிறது. அழிக்க முடியாத ஆதாரங்கள் மூலம் உண்மை நிலைமை

கள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன.தாழ்த்தப்பட்ட மக்களின் சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்டுவதை தனது முழுநேர பணியாக கொண்டிருந்தாலும் எல்லாக் கட்டுரைகளின் முடிவிலும் சிவில் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் வகையில், கேள்வியாகவும், வேண்டுகோளாகவும் தனது கருத்தை எதிரிகளும் ஒருகணம் யோசிக்கும் வண்ணம் வெளிபடுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நூலைப்படிக்கும் அனைவருக்கும் இந்த உணர்வு ஏற்படும். ஏனென்றால், எல்லாச் சாதிகளிலும், படுபிற்போக்கானவர்களும் சாதி வெறியர்களும் இருப்பதைப் போலவே முற்போக்காளர்களும், ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் உள்ளனர் என்பதை உணர்ந்து எழுதியுள்ளார்.வெண்மணிச் சாம்பலிலிருந்து தான் இந்தப் பறவை புரண்டெழுந்து பறக்கிறது. பறந்து கொண்டேயிருக்கிறது. சாதிய மோதலை, பாகுபாட்டை, வன்கொடுமைகளை ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற அக்கறை பளிச்சென்று வெளிப்படுகிறது. ஒரு சாதியைச் சேர்ந்த அனைவரும் சாதிவெறியர்களோ, சாதிய மோதலை ஏற்படுத்துபவர்களோ அல்ல. நான்கைந்து பேர் அப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களை எதிர்த்து, பகைத்துக்கொள்ள விரும்பாமல் உடன்பட்டு போவது நடக்கிறது. சாதி ஆணவக் கொலை அதிகமாக நடைபெறுகிறது.தான் பெற்று ஆசையாய் வளர்த்த குழந்தைகளை சாதிமாறி திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக பெற்றோரும், உற்றாரும் கொலை செய்வது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உடுமலைப் பேட்டை சங்கர் – கௌசல்யா தம்பதிகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை 16 பக்க அளவுக்கு மிக விரிவாக பதிவு செய்துள்ளார். சாதிப்பெருமைதான் பெரிது. அதற்குக் களங்கம் ஏற்படக் கூடிய வகையில் நடந்து கொண்டால் கொல்வது தவறில்லை என்று நியாயப்படுத்தும் மனநோயளிகளாக இருக்கிறார்கள்.

சாதி வெறி யாரையும் விட்டு வைக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை, மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை ஆகியவை குறித்தும் பதிவு செய்துள்ளார் கதிர். இடஒதுக்கீடு குறித்து சமூகத்தில் நிலவும் கருத்து குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். “ஒரு கிணறு இருக்கிறது என்றுவைத்து கொள்வோம். அந்தக் கிணற்றில் ஒருவர் 5 அடி அளவில் தொங்கிக்கொண்டிருக்கிறார், மற்றொருவர் 15 அடி அளவில், இன்னொரு நபர் 50 அடி அளவில் தொங்கிகொண்டிருக்கிறார். 5 அடியில் உள்ள நபர்

மேலே வர வேண்டுமென்றால் 5 அடி கயிறு கொடுத்தால் போதும், மேலே வந்துவிடுவார் 50 அடியில் உள்ளவர்க்கு 50 அடி கயிறு கொடுக்க வேண்டும். அப்போது தான் மேலே வருவார். இதில் சிக்கல் என்னவென்றால், 5 அடி கயிறு உள்ள நபர் எனக்கு 5 அடிதான் கொடுத்தீர்கள் கீழே உள்ள ஆளுக்கு ஏன் 50 அடி கொடுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அது போன்றதுதான் தலித்துக்கு ஏன் இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள் என்று கேட்பதும்.” என்று கதிர் வாதிடுவது மிகச் சரியானது.“உத்தப்புரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை இடிப்பது எளிது. ஏனென்றால் அது

வெறும் சிமெண்ட், இரும்பு, கற்களால் கட்டப்பட்டது. ஆனால் ஒவ்வொருவர் மன

திலும் இருக்கும் தீண்டாமைச் சுவரை எப்படிஇடிப்பது,” என்ற கேள்வியில் உள்ள ஆதங்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உத்தப்புரம் சுவர் உடைபட்டது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை என்பதை அதில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற முறையில் உறுதியாக சொல்ல முடியும்.400 விதமான வடிவங்களில் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை ஒவ்வொன்றும் ஒரு யுத்தம் என்பதை அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரும் உணர முடியும்.தேனி மாவட்டம், போடி அருகிலுள்ள அருங்குளம் பளியர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நாகம்மாள் மீதான பாலியல் வன்கொடுமையை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வெளிக்கொணர்ந்தது. அந்தகுற்றவாளிகளில் ஒருவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு குடும்ப கௌரவம் போய்விட்டது என்று கூறி தற்கொலை செய்து கொண்டார்.மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டம் வழக்குக்கு வலுச் சேர்த்ததுகுறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத செயல்கள், ஒடுக்கு முறைகள், பாலியல் துன்புறுத்தல், தலித்துகளுடைய நில அபகரிப்பு, காவல்துறையினரின் அத்துமீறல், சாதி ஆணவக் கொலைகள் என எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடிய கள அனுபவத்தின் களஞ்சியமாக இந்நூல் வெளிவந்துள்ளது. “இப்ப எல்லாம் யார் சார் சாதிபாக்குறா,” என்று சாதிய பிரச்சனைகளை மேலோட்டமாக பார்ப்பவர்கள், சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் என அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. விகடன் பிரசுரம் இந்த நூலை அழகுற அச்சிட்டுள்ளது. இத்தகைய நூல் விகடன் வெளியீடாக வெளி வந்திருப்பதும் சிறப்புக் குரியது. வாசிக்கத் தூண்டும் வகையில் விறுவிறுப்பான எழுத்து நடை. வாங்கிப் படிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல, பரப்ப வேண்டிய நூலும் கூட.

நன்றி: தீக்கதிர் (18/02/2017)