A few words about item

கலைகள் வளர்த்த காவிரி

தமிழ்ப் புனைவெழுத்தாளர்கள், கதைகளைக் காட்டிலும் கட்டுரைகள் எழுதுவதில் பேரார்வம் காட்டிவரும் காலமிது. நாள்தோறும் மணிதோறும் வாசகர்களோடு உரையாட அவர்களுக்கு அதுவொரு வாய்ப்பு. புனைவுகள் தவிர வேறு வகைமைகளில் எழுதாத அபூர்வ விதிவிலக்குகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கோணங்கி. அவரும் தற்போது கட்டுரை இலக்கியத்துக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார்.கோணங்கி எழுதியுள்ள ‘காவேரியின் பூர்வ காதை’, ஆய்வு நூலாகவே அமைந்திருக்கிறது. பாய்ந்தோடும் பாதையெங்கும் கலைகளையும் இலக்கியத்தையும் வளர்த்த நதியின் வரலாற்றை நிரல்படுத்தி எழுதியிருக்கிறார். தொன்மங்கள், ஆவணங்கள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள் என்று ஒவ்வொன்றாய்த் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நூலுக்காகத் தனது வழக்கமான எழுத்து நடையையும் நெகிழ்த்திக்கொண்டிருக்கிறார் கோணங்கி. ‘நீர் பதம்’ என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் ஆறு அத்தியாயங்களும் புதிய வாசகர்களும் அவரை நெருங்கி வருவதற்கான வாய்ப்புகளை அளித்திருக்கிறது. கோணங்கியின் ரசிகர்கள், பீடிகை என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் முன்னுரையில் மட்டுமே மனநிறைவு கொள்ள முடியும். உலகம் முழுவதும் உள்ள நதிகளைப் பற்றிய செய்திகளையெல்லாம் ஒன்றாய்க் கலந்து எழுதப்பட்டிருக்கிறது பீடிகை.காவிரி கடலில் கலப்பதற்கு முன்பு தஞ்சை மண்ணில் கலை இலக்கியங்கள் செழித்தோங்கச் செய்ததைப் போலவே, அவள் உருப்பெறும் கருநிலத்திலும் கலைகளை விளைவித்திருக்கிறாள். மைசூரும் கருநிலத்தின் பிற பகுதிகளும் சிற்பக் கலைகளில் எட்டிய உச்சங்கள் அனைத்தும் அவள் அளித்த கொடை. தமிழில் மட்டுமின்றி கன்னடத்திலும் காவிரிக் கரை எழுத்தாளர்களே நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். தஞ்சையில் சைவ சமயம் போல, தென்கன்னடத்தில் சமணம் வளர்ந்ததற்கும் காவிரி காரணமாயிருந்திருக்கிறாள். முதலாம் ஆற்றிடைக்குறையை ஆண்ட திப்புவின் வீரத்துக்கும் அவளே ஆதாரம். க.நா.சுப்ரமணியம், கு.ப.ரா, கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், நகுலன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி என்று இலக்கியத்துக்கு காவிரி அளித்த கொடைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. காவிரி குறித்த தொன்மங்களும் கதைகளும் ஒரு கனவுலகத்தையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. கரையில் அமைந்த அரங்கமாநகரும் ஆனைக்காவலும் ஆரூரும் இன்ன பிற நகரங்களும் சைவ, வைணவ, பவுத்த சமயங்களின் மையங்களாக விளங்கியிருக்கின்றன. இசை, நடனம், சிற்பம், இலக்கியங்களோடு ஓவியக் கலையும் சிறப்பைப் பெற்றிருக்கிறது.காவிரிக் கரையின் கலை இலக்கிய வரலாறாக முடிந்துவிடாமல், சமூக-பொருளாதார வரலாறாகவும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம். தஞ்சை மண்ணில் நடைமுறையில் இருந்த பண்ணையாள் முறையின் உழைப்புச் சுரண்டலையும் மராட்டியர் ஆட்சிக் காலத்திலிருந்த அடிமை முறையின் பாலியல் சுரண்டல்களையும் விரிவாகப் பேசுகிறார் கோணங்கி. அதற்கு ஆதாரங்களாக மராட்டியர் காலத்து மோடி ஆவணங்களையும் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர்களின் எழுத்துகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். கடவுளின் பெயரைச் சொல்லி வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண்களின் சாபம்தான் இன்று காவிரி வறண்டு கிடப்பதற்குக் காரணமோ என்றும் எண்ணவும் வைக்கின்றன இந்த விவரணைகள். மணல் கொள்ளையர்கள் மீதான கோபமும், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைப் பற்றிய கையறு நிலைக் கதறலும் இந்நூல் நெடுக இடம்பெற்றிருக்கின்றன. காவிரியில் கலக்கும் காகிதத் தொழிற்சாலைக் கழிவுகளும் நொய்யலில் கலக்கும் சாயக் கழிவுகளும் இயற்கைச் சூழலைக் கெடுப்பதைக் கண்டிக்கிறார் கோணங்கி. கடைமடை விவசாயிகளின் தற்கொலைகளை, மனமிரங்கிப் பாருங்கள் என்று அவர் வேண்டி நிற்கிறார். அதேவேளையில் காவிரிப் பண்பாட்டில் வளர்ந்தவர்களுக்கு நீர்ப் பராமரிப்பு குறித்த பாரம்பரிய அறிவு மழுங்கிப் போனதையும் அவர் சாடியிருக்கிறார்.‘காவேரியின் பூர்வ காதை’யைப் படித்து முடிக்கும்போது, மொழியின் மாயச்சுழல்களுக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட கோணங்கியால் தமிழ் வாசகர்கள் அடைந்ததைக் காட்டிலும் இழந்தது அதிகமோ என்ற எண்ணமும் எழாமலில்லை. கோணங்கி என்றவுடன் மணல் மூடிக் கிடக்கும் தனுஷ்கோடியின் நினைவுகள் தோன்றுவதைப் போலவே, இனிமேல் மணலாகவே கிடக்கும் காவிரியின் காட்சியொன்றும் வாசகர் மனதில் தோன்றும்.

நன்றி: தி இந்து (24/09/2017)