திராவிட இயக்கத்தை அறிந்துகொள்ள என்னென்ன நூல்கள் படிக்கலாம்?

திராவிட இயக்கத்தை அறிந்துகொள்ள என்னென்ன நூல்கள் படிக்கலாம்?

திராவிட இயக்கத் தலைவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்தார்கள். அவர்களைப் பட்டியலிட்டால் 300-க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள். ஆகவே, திராவிட இயக்கத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முதற்கட்டமாகப் படிக்க வேண்டிய நூல்களை இங்கே பரிந்துரை செய்கிறேன்.

பெரியாரின் குடியரசுத் தொகுப்புகள் (42), அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்- 316), கலைஞரின் கடிதங்கள் (3,517), முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு, க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி வரலாறு, திமுக வரலாறு ஆகியவை மிகவும் அடிப்படை நூல்கள்.

நம்பி ஆரூரானின் ஆங்கில நூலை நானும் பி.ஆர்.முத்துகிருஷ்ணனும் ‘திராவிட தேசியமும் தமிழ் மறுமலர்ச்சியும்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளோம். இருபதாம் நூற்றாண்டில் திராவிட தேசியம் எப்படி தமிழ் மலர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் முக்கியமான நூல் இது. அடுத்ததாக, பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’. 1965 ஆண்டு காலம் என்பது நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம். அந்த உச்சகட்ட போராட்டத்தைப் பற்றி அவர் சிறப்பாக விளக்கியிருப்பார். பலரையும் பேட்டி எடுத்து நூலில் சேர்த்திருக்கிறார். அப்போது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தின் பேட்டியையும் அந்த நூலில் இணைத்திருப்பார். அடுத்ததாக, ,பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் எழுதிய ‘திராவிட நாடு’ புத்தகம். திராவிட நாடு என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் என்பதை நிறைய சான்றுகளுடன் நிறுவியிருப்பார்.

திராவிட இயக்கத்துக்கு இலக்கியம் இல்லை என்றெல்லாம் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால் 1940-களிலிருந்து நிறைய நாவல்கள், சிறுகதைகளை எல்லாம் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, தில்லை மறைமுதல்வன், தில்லை வெள்ளாளன், ராம அரங்கண்ணல். பி.கே.சீனிவாசன், அண்ணா, கருணாநிதி, கே.ஜே.ராதாமணாளன் போன்றோரின் சிறுகதைகள் ப.புகழேந்தியால் தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் படைப்புகள் மிக முக்கியமானவை. அவருடைய படைப்புகள் அனைத்தும் திராவிட இயக்க சிந்தனைகளை கவிதை வடிவில் தரக்கூடியவை. அதே போல் சுரதா, முடியரசன், வாணிதாசன், பொன்னி வளவன், த.மி.பழனியப்பன் என்று பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லக்கூடிய 42 கவிஞர்களுடைய படைப்புகள் இருக்கின்றன. புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ திராவிட இயக்கத்தின் இலக்கிய உணர்ச்சியின் வெளிப்பாடு, காவியப் படைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

முரசொலி மாறனின் ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’என்ற நூல் முக்கியமானது. அதேபோல் மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்கிற நூலில் மாநில சுயாட்சி என்றால் என்ன, அதன் தேவை என்ன, அதிகாரம் மத்தியில் குவிக்கப்படுவதன் நோக்கம் என்ன, மாநில சுயாட்சி இருந்தால் என்னென்ன அதிகாரங்களை நாம் வைத்துக்கொள்ள முடியும் என்பதையெல்லாம் விளக்குகிறது. மாநில சுயாட்சி பற்றி வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதி சமீபத்தில் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கும் நூல், அரசியல் சட்டத்தை ஆய்வுபூர்வமாக அலசுகிறது. 1950-களில் பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய ‘வகுப்புரிமைப் போராட்டம்’ என்ற நூல் தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. க.நெடுஞ்செழியன், சக்குபாய் எழுதிய ‘சமூக நீதி’ நூலில் இட ஒதுக்கீட்டின் வரலாறு விளக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதாரம் தொடர்பாகப் படிக்க விரும்புபவர்கள் அறிஞர் அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ படிக்கலாம். 1940-களில் இருந்த நிலைமைகளை எடுத்துச் சொல்லும் நூல் அது. இன எழுச்சி தொடர்பாக அண்ணா எழுதிய கட்டுரை, ‘ஆரியமாயை’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. அடுத்து, கருணாநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ நூலைப் படிக்க வேண்டும். ஆறு தொகுதிகளாக இது வந்துள்ளது. ஏ.எஸ்.வேணு எழுதிய ‘பெரியார் ஒரு சகாப்தம்’, பெரியாரைப் பற்றி, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி, திராவிட இயக்கத்தைப் பற்றி கீ.வீரமணி எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ போன்றவை அவசியம் படிக்க வேண்டியவை. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இணைந்து எழுதிய ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ புத்தகம் பெரியாருடைய பொதுவாழ்க்கைப் பங்களிப்பை விளக்குகிறது.

20-ம் நூற்றாண்டின் வரலாறு, காங்கிரஸ், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் அந்தக் காலத்துத் தலைவர்களைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள கோவை அய்யாமுத்து எழுதிய ‘நினைவுகள்’ என்ற நாவலைப் போன்ற புத்தகத்தைப் படிக்கலாம். நெ.து.சுந்தரவடிவேலுவின் எழுதிய ‘நினைவலைகள்’, திமுகவைப் பற்றி ராம அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்’ ஆகிய நூல்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. அமைச்சராக இருந்த க.ராஜாராம் எழுதிய ‘ஒரு சாமானியனின் கதை’ நூலில் நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திமுக பற்றிச் சொல்லியிருப்பார்.

குத்தூசி கட்டுரைகள் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டியவை. குத்தூசி குருசாமியின் வாழ்க்கை வரலாறை குருவிக்கரம்பை வேலு எழுதியிருக்கிறார். திராவிடர் கழகத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் துல்லியமாக அவர் எழுதியிருப்பார். பி.எஸ். இளங்கோவின் ‘பிட்டி தியாகராயர் முதல் கலைஞர்வரை’, டி.எம். பார்த்தசாரதியின் ‘திமுக வரலாறு’, கே.ஜி.ராதாமணாளனின் ’திராவிட இயக்க வரலாறு’ போன்ற புத்தகங்களும் முக்கியமானவை.

இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்தால் திராவிட இயக்கத்தைப் பற்றி அடிப்படையான புரிதலும் உணர்வும் கிடைக்கும்.

நன்றி: தி இந்து (21/01/2018)