A few words about item

அரசு செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்திருக்கிறோம்!- நலங்கிள்ளி பேட்டி

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’, அருந்ததி ராயின் ‘இந்திய இழிவு’ உள்ளிட்ட முக்கியமான நூல்களைத் தமிழாக்கம் செய்தவர் நலங்கிள்ளி. தனித்தமிழ்வாதி, ஆங்கில ஆசிரியர், தமிழ்க் கல்விக்காகக் குரல்கொடுத்துவரும் செயற்பாட்டாளர், பதிப்பாளர் என்று பல தளங்களில் இயங்கிவருபவர். சமீபத்தில், மூன்று தொகுதிகளாக இவரது பங்களிப்பில் வெளிவந்திருக்கும் ‘உலகத் தமிழ்க் களஞ்சியம்’ தமிழுக்கு முக்கியமான நல்வரவு. அவரோடு உரையாடியதிலிருந்து...

கலைக்களஞ்சியத் திட்டம் எப்படி உருவானது? இந்தப் பணிக்கு உந்துதலாக இருந்தது எது?

மலேசியாவைச் சேர்ந்த பதிப்பாசிரியர் டத்தோ ஆ.சோதிநாதனும் முதன்மைத் தொகுப்பாசிரியரான இ.ஜே.சுந்தரும்தான் இந்தக் கலைக்களஞ்சிய உருவாக்கத்துக்குக் காரணமானவர்கள். அதிலும் சோதிநாதனின் பங்களிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 11 ஆண்டுகளாக இந்த வேலையைச் செய்துகொண்டிருந்தோம். வேலை எந்த நிலையில் இருக்கிறது என்றுகூடக் கேட்க மாட்டார். அவர் எங்கள் குழுவின் மீது நம்பிக்கைவைத்தார். இந்தப் பணியை முடிப்பதற்கு ஆண்டுக்கணக்கில் உழைக்க வேண்டியிருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அதைப் போலவே இது பெரும் பொருட்செலவைக் கோருகிற பணி என்பதும் அவருக்குத் தெரியும். தனது கனவுத் திட்டத்துக்காக அவர் செலவழிக்கத் தயாராக இருந்தார். இத்தனை ஆண்டுகளும் சீராளராக (எடிட்டர்) எனக்கு ஊதியம், தட்டச்சு செய்தவருக்கு ஊதியம் தந்திருக்கிறார். அவர் இல்லாமல் இந்தக் கலைக்களஞ்சியம் உருவாகியிருக்காது.

தமிழில் ஏற்கெனவே கலைக்களஞ்சியங்கள் வெளிவந்திருக்கின்றன. நீங்கள் உருவாக்கியிருப்பது அவற்றிலிருந்து எந்த வகையில் மாறுபட்டது?

தமிழின் முதல் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி வெளிவந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இலக்கியம், இலக்கணம், சமயம், பண்பாடு சார்ந்ததாக அந்த முதல் முயற்சி அமைந்திருந்தது. அடுத்து பெ.தூரன் உருவாக்கிய தமிழ்க் கலைக்களஞ்சியம். அப்போது ஆங்கிலத்தில் கிடைத்த கலைக்களஞ்சியங்கள் அனைத்தையும் தழுவி மிகப் பெரிய அளவில் அது உருவாக்கப்பட்டது. அதையடுத்து வாழ்வியல் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் என்ற தலைப்புகளில் துறை சார்ந்தும் கலைக்களஞ்சியங்கள் வெளியாகியிருக்கின்றன. நாங்கள் செய்திருக்கும் தற்போதைய முயற்சி என்பது தமிழையும் தமிழர்களையும் முதன்மைப்படுத்துவது. தமிழ்ப் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், ஆளுமைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

இந்தப் பணியில் எந்த அளவுக்கு வெற்றிபெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள்?

இது சங்குக்குள் ஆழியை அடைக்கும் வேலைதான். எனினும், துறை சார்ந்த அறிஞர்களின் துணையோடு இந்தப் பணியைச் செய்திருக்கிறோம் என்பதில் ஒரு மனநிறைவு. அகராதிகள், அமைப்புகள், இலக்கணம், தாவரவியல் என்று 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகளை உள்ளடக்கியிருக்கிறோம். 2,300-க்கும் மேற்பட்ட பக்கங்கள். விடுபடல்கள் நிச்சயம் இருக்கும். ஆனால், எதையும் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கலைக்களஞ்சியத்தில் பதிவுசெய்ய வேண்டிய முக்கியத்துவம் கொண்டதாக எங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு தகவலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடத்தக்கதாகத் தாங்கள் கருதுவது?

கா.பட்டாபிராமன் தொகுத்த 900 இலக்கணக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ச.சண்முகசுந்தரம் தொகுத்த 700 தாவரங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் நடிகர் நம்பியாரைத் தெரியும். ஆனால், நம்பியாறைத் தெரியாதல்லவா? தமிழகத்தில் ஓடும் 100 ஆறுகளைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறோம். 800 இதழ்களைப் பற்றி குறிப்புகள் இந்தக் களஞ்சியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பணியில் பத்திரிகையாளர்களின் பங்கையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘தினத்தந்தி’ முன்னாள் ஆசிரியர் சண்முகசுந்தரம் வாயிலாக அந்தத் தகவல்களைச் சேகரித்தோம். ‘காளிதாஸ்’ தொடங்கி 2016 வரையில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலையும் சேர்த்திருக்கிறோம். அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பற்றியும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. சிற்பங்களுக்கு சிறப்புக் கவனம் கொடுத்திருக்கிறோம். ஒன்பது தலை ராவணன் சிற்பம், கதிராமங்கலம் துர்க்கை சிற்பம் என்று 200 சிற்பங்களைப் பற்றிய தகவல்கள் இக்களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்து, சமணம், பவுத்தம் எல்லாம் ஒரே பிரிவின் கீழ் அடக்கப்பட்டிருக்கின்றனவே?

இந்தியாவைச் சேர்ந்த சமயங்கள் என்ற அடிப்படையில் அவற்றைப் பொதுத்தலைப்பாக வகைப்படுத்தினோம். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயங்கள் பற்றிய தகவல்கள் தனிப் பிரிவுகளாக இடம்பெற்றிருக்கின்றன. இஸ்லாமிய ஆளுமைகள் குறித்தும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்தும் மிக விரிவான தகவல்கள் இக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன. சமயச் சார்பற்று, அரசியல் சார்பற்று இந்த கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போல ஆளுமைகளைப் பற்றிய குறிப்புகளிலும்கூட அவர்களது சாதனைகள், அவர்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் இரண்டுமே குறிக்கப்பட்டுள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா,

சோ ராமசாமி, ராமதாஸ் என்று எல்லா ஆளுமைகளையும் இவ்வாறே அணுகியிருக்கிறோம். எந்தவொரு தகவலை எழுதும்போதும் அதை எழுதியவர் அந்த வாக்கியத்தில் இருக்க மாட்டார். அவரது கொள்கைச்சார்பு இருக்காது. இதில் மிக உறுதியாக இருந்தோம்.

நீங்கள் தனித்தமிழ்வாதியல்லவா?

என்னை அறுத்து வீசிவிட்டுத்தான் இந்த வேலையைச் செய்திருக்கிறேன். தம்பதி என்பதை இணையர் என்று எழுதும் அளவுக்குத்தான் எனது தனித்தமிழ் ஆர்வம் இதில் வெளிப்பட்டிருக்கிறது. சமுதாயத்தைக் குமுகாயம் என்றெல்லாம் எழுதவில்லை. அறிவும் உழைப்பும் அனைவரையும் சென்றுசேர வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருந்தது.

இந்தக் கலைக்களஞ்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதுமைகள்...

இதை ஆய்வாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் அமைத்திருக்கிறோம். இதைச் சுற்றுலா வழிகாட்டியாகவும் தேர்வு வழிகாட்டியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 108 திவ்விய தேசங்கள், 274 பாடல்பெற்ற சைவத் தலங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் கொடுத்திருக்கிறோம். அதைப் போலவே ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் எங்கே இருக்கிறது, அதன் அருகில் இருக்கிற நகரங்கள் என்னென்ன? பக்கத்தில் இருக்கிற தொடர்வண்டி நிலையத்திலிருந்து எவ்வளவு தொலைவு ஆகிய தகவல்களையும் இணைத்திருக்கிறோம். அதுபோலவே, வட்டத் தலைநகரங்களைப் பற்றிய தகவல்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். வட்டத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை எவ்வளவு,

ஆண் - பெண் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்களையும் சேர்த்துள்ளேன். அருகமை தொடர்வண்டி நிலைய விவரத்தையும் அளித்துள்ளேன். இதற்காக கூகுள் நிலவரைபடங்களைப் பயன்படுத்தினேன். இப்படி ஒவ்வொரு தகவலைச் சேகரிக்கவும் சரிபார்க்கவுமே நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன்.

இந்தப் பணியில் பெரும் சவாலாக இருந்தது எது?

ஆளுமைகளின் பிறந்த நாளைக் கண்டுபிடிப்பதுதான். சமகால ஆளுமைகளில் சிலர் தாங்கள் பிறந்த ஆண்டைச் சொல்ல முடியாது என்றும்கூட சொல்லியிருக்கிறார்கள். திரைப்பட இயக்குநர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்களும்கூட அதில் உள்ளடக்கம். நடிகர் அசோகனின் பிறந்தநாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது கல்லறையிலிருந்து பிறந்த நாளைத் தெரிந்துகொண்டோம். இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்தவர்களின் இறந்தநாள் நமக்குத் தெரியும். அவர்களது பிறந்தநாளையும் தேடிச் சேர்த்திருக்கிறோம். 1937, 1952, 1965 என்று இந்தி எதிர்ப்பின் மூன்று காலகட்டங்களைப் பற்றியும் விரிவாகக் குறிப்புகள் எழுதியிருக்கிறோம். கீழவெண்மணி, தாமிரபரணிப் படுகொலை, தைப்புரட்சி, கூடங்குளம் வரைக்கும் தமிழர்கள் நடத்திய போராட்டங்களெல்லாம் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழையும் தமிழர்களையும் முக்கியத்துவப்படுத்தி ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை ஆங்கிலத்துக்கும் கொண்டுபோக வேண்டும் இல்லையா?

தமிழ்ச் சமூகத்துக்கு இப்படியொரு தேவை இருக்கிறது என்பதை அரசுக்கு எடுத்துச்சொல்லியிருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அரசால் இந்தப் பணியை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். பிரிட்டானிகாபோல ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தை அரசு வெளியிட வேண்டும். அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். தமிழைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்ற மொழியினருக்கு அந்த மொழிபெயர்ப்பு உதவியாக இருக்கும். இந்த முயற்சியை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வது தமிழக அரசின் கையிலும் தமிழர்களின் கையிலும்தான் இருக்கிறது.

- செல்வ புவியரசன்,

நன்றி: தி இந்து (01/11/2019)