நான் ஏன் எழுதுகிறேன்? - பாலைவன லாந்தர்

நான் ஏன் எழுதுகிறேன்? - பாலைவன லாந்தர்

பெயர் நலிஜத் . புனைபெயர் பாலைவன லாந்தர் .தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்தான் பூர்விகம் என்றாலும், கல்வி மற்றும் வாழ்க்கைத்தளம் எல்லாம் வடசென்னையில் அமைந்தன. இதனால்  தன்னை ஒரு சென்னைவாசி என்றே அடையாளப்படுத்துகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வெவ்வேறு புனைபெயர்களில் எழுதிவருகிறார். "உப்புவயலெங்கிலும் கல்மீன்கள்", "லாடம் சிகப்புத்தடங்கள்" இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
 "கவிதைகள் எளிமையாக வாசகனை அடைய வேண்டும் என்பதைவிட அதில் சில மாயைகளை வைத்து மாறுபட்ட கோணத்தில் கவிதைகளை எழுதிப் பார்க்க முயற்சி செய்கிறேன் . இப்படித்தான் எழுத வேண்டும் என்ற பழைய சங்கதிகளை மீறி, சில புதிய உத்திகளைக் கையாள்கிறேன். காலத்தைப் பதிவுசெய்யும் படைப்பாளி நான். வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் ஒவ்வொருமுறையும் அந்தந்தக் காலத்திற்கே பயணிப்பதாக எண்ணிப் பிரமித்திருக்கிறேன் .இந்த பிரமிப்பு, வரலாற்றைப் பதிந்து வைத்தவர்கள்மீதான அலாதி ப்ரியத்தை ஏற்படுத்தியதைப் பள்ளி நாள்களில் உணர்ந்திருக்கிறேன். இன்றைய காலகட்டத்தைப் பதிவுசெய்ய கவிதை என்னும் ஆயுதத்தைக் கையாள்கிறேன்.
சமகால நிகழ்வுகளைக் கவிதையாக உருவாக்கம் செய்யும்போது, எனது வரிகளின் மீதான விமர்சனங்கள் என்னை நானே பரிசோதித்துக்கொள்ள எனக்கு  வாய்ப்பளிக்கின்றன. அழகியலையும் அரசியலையும் தவிர்த்து, நடைமுறை நிகழ்வியலை எழுதும்போது கவிதை தானாகச் சிதைந்த மலரின் சாயலைப் பெறுகிறது. ஓவியம், கவிதை, இசை மூன்றும் எண்ணப் பரிமாணங்களின் நீட்சி. சொற்களைக் கையாள்வது ஓர் அற்புதமான கலை. ஒரு கவிதையில் நாம் பிரயோகிக்கும் சொற்கள், வாசிப்பவர்களின் சுயங்களோடு மோதிப் பார்க்கும் தருணம் ... மிக நுட்பமானது.
நான் பிறந்தது, வண்டல் மணலும் பனைமரக் காடுகளும் நிறைந்த ஊர் என்றாலும் வளர்ந்தது, கருப்பு நிற ஹார்பர் (துறைமுகம்) தூசி படியும் வடசென்னை. இப்படி மாறுபட்ட இருவேறு நிலத்தை, மனநிலையை எப்போதும் கையாள வேண்டிய சூழலைக் காலம் பரிசளித்திருக்கிறது. இதைவிட எழுதுவதற்கு வேறென்ன காரணம் வேண்டும். அதேசமயம், எழுதிவிட்டால் மட்டும் என்ன நேர்ந்துவிடும் என்ற கேள்விகளும் என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றன.

நன்றி: விகடன் தடம் (01/11/2018)