நான் ஏன் எழுதுகிறேன்? - சஹானா

நான் ஏன் எழுதுகிறேன்? - சஹானா

சஹானா, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது இசையில் பட்டையப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘கண் அறியாக் காற்று’ வெளியாகியுள்ளது.

“தமிழ்மீது அதீத ஆர்வம் உண்டு. ஆனால், தமிழைப் பிழை இல்லாமல் எழுதத் தெரியாது எனக்கு. என்னுடைய ஆசிரியர்கள் எல்லோரும் அதற்காகவே என்மீது கோபம்கொண்டனர். அவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கே என்மீது கோபம் உண்டானது. நிறைய வாசிப்பது ஒன்றே என்மீதான என் கோபத்தைப் போக்கிக்கொள்ள வழி என்ற எண்ணத்தில் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். கவிதையே மொழியின் ஆதிவடிவம் என்பதால், வாசிப்பைக் கவிதைகளிலிருந்து தொடங்கினேன். அப்பா கவிஞர் என்பதால், என்னுடைய வாசிப்பில் அவரது கவிதைகளும் முக்கிய இடம்பிடிந்திருந்தன. என் வாசிக்கும் ஆர்வத்தினால் பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுப்பது, அங்கு வரும் எழுத்தாளர்களுடன் உரையாடுவது, அந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பது என என்னுடைய செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றேன். என்மீதான என் போதாமையை, கோபத்தை, வாசிப்பில் உள்வாங்கிக்கொண்ட கவிமனநிலையைக் கவிதைகளாக எழுதத் தொடங்கினேன், முள்ளை முள்ளால் நீக்குவதுபோல. மொழியின்மீது சாவாரி செய்தபடியே மொழியை அறியும் விநோதத்தில் கரைந்தேன். அப்படி எழுதிய சில கவிதைகள் ‘அம்ருதா’, ‘சிலேட்’, ‘ஆனந்த விகடன்’, ‘விகடன் தடம்’, ‘காலச்சுவடு’, ‘படிகம்’, ‘உயிர் எழுத்து’, ‘அகநாழிகை’ போன்ற இதழ்களில் வெளியாகின.

சமீபத்தில் நாகர்கோயில், கன்னியாகுமரி பகுதிகள் மிகத் தீவிரமான புயல் பாதிப்புக்குள்ளாயின. அந்தப் பாதிப்பு, மனிதர்களை மட்டுமல்லாது பிற உயிர்களுக்கும் வலி மிகுந்த துயரத்தைக் கொடுத்ததை நேரில் உணர்ந்த நான், அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்று எண்ணினேன்; எழுதிக்கொண்டிருக்கிறேன். மனித வரலாறும் அவர்கள் கடந்துவந்த பாதைகளும் இப்படியான பதிவுகளால் தான் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. சக மனிதர்களை, நம்மைச் சூழ்ந்துள்ள உயிர்களின் வாழ்வைப் பதிவுசெய்வதை என் கடமை என்று கருதுகிறேன் அதற்காகவே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.”

நன்றி: விகடன் தடம் (01/10/2018)