நான் ஏன் எழுதுகிறேன்? - பெரு.விஷ்ணுகுமார்

நான் ஏன் எழுதுகிறேன்? - பெரு.விஷ்ணுகுமார்

பெரு.விஷ்ணுகுமார், திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். முதுகலை இயற்பியல் முடித்திருக்கும் இவர், தற்போது ஒரு தனியார் கல்லூரியில் பகுதிநேர ஆராய்ச்சியாளராக (மின்வேதியியல் துறையில்) பணிபுரிகிறார். சமீபத்தில், இவரது முதல் கவிதைத் தொகுதியான என்ற பாதையில் நடப்பவன்வெளியாகியுள்ளது.

கவிதைக்கென்றே வினைபட்டுவரும் தமிழெனும் நீள்பரப்பில், ஒரு கவிஞன் தனக்கேயான இல்பொருளை கண்டறிதலே ஆகப்பெரும் முயற்சியென்றுணர்கிறேன். என் ஒன்பதாம் வகுப்பில், முதன்முதலில் மரபுக்கவிதையைப் பயில்வித்து எனது பயணத்தைத் தொடங்கிவைத்த தமிழாசிரியர், எந்தவொரு கவிதையையும் எழுதுவதற்கு முன்பாகமுதலெழுத்தை அழுத்தி எழுதிவிட்டு தொடங்குஎன்பார். அதுகடந்து, புதுக்கவிதையில் எதை நம்புவதென்ற கவனச்சிதறல்களைக் கண்ட பிறகு, கல்லூரியில் முதலாமாண்டே நவீன கவிதை எழுதத் தொடங்கினேன். ‘கல்குதிரைஎனும் சிற்றிதழின் வாயிலாக அறிமுகமானேன். தற்போதைய சூழலில் ஓர் இளைஞனுக்கு நிச்சயம் பாலியல் என்ற ஒன்று மட்டுமே ஏங்கத்தூண்டும் பெருவலியாக இருக்காதென்று நம்பும் நான், நேரிடும் சமூக, தொழில்நுட்ப மாற்றங்களைப் பின்தொடர்ந்தால் சென்ற நூற்றாண்டிலிருந்து பெரும்பாலான குழந்தைகள் சராசரியிலிருந்து மாறுபட்ட பால்யத்தைச் சந்தித்து வருவதாக விவாதிக்கப்படும் தலைப்பான Hyperactivity-யால் பாதிக்கப்பட்டவனுள் நானும் ஒருவன். ஆனால், கவிதையின் பாடுபொருளில் அதை வலிந்து மீட்டுவதைவிட, எதேச்சையாய்க் கிளையினைக் கைவிடும் இலைகளையே கண்மூடித்தனமாய் நம்புகிறேன். உண்மையில் பொதுவெளியில் என் பலவீனமாகப் பார்க்கப்படும் அறிவின்மையைக் கவிதையிலாவது கொண்டாட முடியுமாவென்று சோதித்துப் பார்க்கவே எழுதுகின்றேன். ஏனெனில், எளிய வாழ்வைவிட இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களும் யாரோ ஒருவரால் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறன. ஆனால், தொன்றுதொட்ட மரபுத் தொடர்ச்சியில் இங்கு எல்லோருக்கும் பொதுவான மதிலொன்று இருக்கிறது. அதை எம்பிக்குதித்து அப்பாலிருக்கும் எனக்கான உலகைக் காணும் சவாலில் இன்னும் முழுமையடையவில்லையென்று திருப்தியோடு அடுத்தகட்டம் நோக்கி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நன்றி: விகடன் தடம் (01/10/2018)